தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்

காலை நேரக் கதிரவன் மெதுவாக மேலெழும்ப போர்வையை விலக்க மனமில்லாமல் இழுத்து போர்த்தியபடி உறங்கி கொண்டிருந்தான் முகேஷ். அவன் மார்பில் உறங்கி கொண்டிருந்த குழந்தை  தியாவை மேலும் இறுக்கி அணைத்தபடி மறுபடியும் உறங்க முயன்றான்..

அவனின் உறக்கம் பிடிக்காத டைம்பீஸ் அலறியது.  அதன் அலறிய  தலையில் ஓங்கி குட்டியவன் மறுபடியும் போர்வைக்குள் முடங்கினான்.

“அப்பாவும் மகளும் தூங்கியது போதுமா? எழுந்திருக்க மனசு வர்லையா அய்யாவுக்கு-” என கைகளை இடுப்பில் ஊன்றியவாறு முறைத்து கொண்டே சத்தமிட்டாள் சுதா..

போர்வைக்கு வெளியே முகத்தை நீட்டியவன், சுதாவை பார்த்ததும் வேகமாக கையை பிடித்து இழுத்து அவளையும் போர்வைக்குள் சிறைபிடித்தான்.

“ஞாயிற்றுக்கிழமை தானே இன்னும் கொஞ்சநேரம் தூங்கினா என்ன-” கொஞ்சியவாறு  கெஞ்சியவனை… “அத்தையையும் மாமாவையும் இன்னைக்கு கோவிலுக்கு கூட்டி போறதா சொல்லியிருக்கீங்க மறந்துட்டீங்களா? மொதல்ல என்னை விடுங்க” என எழ முற்பட்டாள். “மணியாச்சு எழுந்திருங்கப்பா ப்ளீஸ்” என போர்வையை இழுத்தாள்.

“ஒரு நாள் மனுஷனை நிம்மதியாக இருக்க விடமாட்டீங்களே” என சிணுங்கிகொண்டே எழுந்தவன் அணைத்து கொண்டு தூங்கிய குழந்தையை விலக்கி அதன் நெற்றியில் முத்தமிட்டு போர்வையால் போர்த்தினான்.

“பல் தேய்ச்சிட்டு வாங்க ..காபி எடுத்திட்டு வரேன்” என  புடவை தலைப்பை  சரி செய்தபடி சமையறை நோக்கி சென்றாள் சுதா.

தலைக்கு குளித்து துண்டால் துவட்டியபடி வந்த முகேஷ்..ஹாலில் அமர்ந்திருந்த வேதமூர்த்தியை நோக்கி.. “என்னப்பா காலையிலேயே எழுந்திட்டீங்களா?” என கேட்டான்.

“தூக்கம் வரலைப்பா… வயசாயிடுச்சில்ல…” என சிரித்தார்.

“சுதா…டிபன் ரெடியா?” என கத்தி கொண்டே டைனிங்டேபிளில் அமர்ந்தவனிடம்..

“ரெடியாயிருக்குடா..” தட்டை எடுத்து வந்து வைத்தாள் தனலட்சுமி.

“அம்மா.. நீ சாப்டியா?”

“இன்னும் இல்லைடா… தியா எழுந்திட்டாளா?”

“இல்லைம்மா.. உள்ளே தூங்கறா!”

தட்டில் இட்லியை பரிமாறியபடி.. “எத்தனை மணிக்கு கிளம்பறோம்?” என்றவளிடம்…

“எல்லாரும் ரெடியாகிட்டா கிளம்ப வேண்டியது தான்.. தியாவை எழுப்பி ரெடி பண்ணுங்கம்மா.. சுதா..” என குரல் கொடுத்தான்.

“மாடியில் துணியை காய வைக்க போயிருக்காடா..வருவா கத்தாத..” என்றாள்  தனலஷ்மி.

“அத்தே! இதை உங்க ரூம்ல வையுங்க வந்து மடிச்சிக்கலாம்..” காய்ந்த துணிகளை மாமியாரிடம் கொடுத்தாள்.

“நான் பாத்துக்கறேன் ..நீ குழந்தையை எழுப்பி ரெடி பண்ணும்மா..” என்றாள் அன்புடன்

குழந்தை தியாவை கிளப்பி அனைவரும் ரெடியாகி வீட்டை பூட்ட பத்து மணியாகி விட்டது.

காரின் இக்னீஷீயனை உசுப்பி வெளியே எடுத்தவன் வாசலில் வண்டியை நிறுத்த.. கதவை திறந்து சுதா முன்னாடி ஏறிக்கொண்டாள். வேதமூர்த்தியும் தனலட்சுமியும் பின்னால் ஏறிக்கொள்ள, தியா தாத்தா பாட்டிக்கு நடுவில் அமர்ந்து கொண்டாள்.

கார் வேதமூர்த்தியின் குலதெய்வமான பச்சையம்மா கோவிலை நோக்கி சென்றது.

“ஏங்க! நாம முகேஷ் கல்யாணத்துக்கு முன்னாடியே போய் பொங்கல் வைச்சி  கும்பிட்டிருக்கணும்..இப்போ தியாவுக்கே இரண்டு வயசாகுது. இப்பத் தான் பச்சைம்மா கண்தொறந்திருக்கா..” என புலம்பினாள்.

“சரி விடு தனா.. இனி வருஷத்துக்கு ஒரு முறை போய்டுவோம்..” என  சமாதானப்படுத்தினார் வேதமூர்த்தி.

முகேஷ் இருபத்தியெட்டு வயதான அழகான இளைஞன். சாப்ட்வேர் வேலை. கை நிறைய சம்பளம்.. சுதா பாங்கில் வேலை செய்கிறாள். இருபத்தியைந்து வயது. பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான். ஆனால் சுதாவை பார்த்ததும் பிடித்து போனது முகேஷிற்கு. ஏன் சுதாவிற்கும் தான்.

சுதாவின் அமைதியும் அழகும் வேதமூர்த்திக்கும் தனலட்சுமிக்கும் ரொம்பவே பிடித்து போக, இரண்டு மாதத்தில் நிச்சயம். அடுத்த இரண்டு மாதத்தில் திருமணம்.

சுதா குடும்பத்திற்கேற்ற குத்துவிளக்கு. அதிர்ந்து கூட பேசாத அமைதியான குணமுடையவள். முகேஷின் பெற்றவர்களை தன் பெற்றோரை போல பார்த்து கொள்கிறாள். இதைவிட ஒரு நல்லபெண் அமையமாட்டாள் என  ஊரே மெச்சும்படியான மருமகள் சுதா.

முகேஷ் – சுதாவின் இனிய இல்லறத்தின் அன்பு பரிசான இரண்டு வயது தியாவை  பின்சீட்டில் கொஞ்சி கொண்டிருக்கின்றனர் வேதமூர்த்தியும், தனலட்சுமியும்.

கார் காஞ்சிபுரத்தை நெருங்க அமைதியே உருவான அத்துவான காட்டில் சாந்தமாக வீற்றிருக்கும் பச்சையம்மாவை காண ஆவலுடன் இருந்தாள் சுதா. திருமணத்திற்கு பிறகு முதல்முறையாக குழந்தையுடன் தன் புகுந்த வீட்டு குலதெய்வத்தை காண வருகிறாள். ஒரு ஆர்வமுடன் கூடிய எதிர்பார்ப்பு அவளை உந்தி தள்ளுகிறது.

காரை ஓரமாக பார்க்க செய்துவிட்டு முகேஷ் வர.. அதற்குள் பூஜைக்கான சாமான்களை அடுக்கி கொண்டிருந்தனர் சுதாவும் தனலட்சுமியும்..

தியா தாத்தாவுன் விளையாடி கொண்டிருந்தவள்.. முகேஷை கண்டதும்  “அப்பா”வென தாவி ஓடிவந்தாள்.

கோவில் குருக்களிடம் வேதமூர்த்தி பூஜை சாமான்களை கொடுத்தவர். அனைவரின் நட்சத்திரம் மற்றும் ராசிகளை சொல்லி அர்ச்சனைக்கு கொடுத்தார்.

தீபாதாரனை முடிந்து கோவிலை சுற்றி வருகையில் மனதில் நிம்மதி தோன்றியது வேதமூர்த்திக்கு.

சுதாவும் தனலட்சுமியும் கோவிலை சுற்றி வந்து விழுந்து கும்பிட்டனர் . தனலட்சுமி, “என் பிள்ளையும் மருமகளையும் ஒரு குறையில்லாம பாத்துக்கம்மா. நீ தான்மா என் குடும்பத்துக்கு காவலா இருந்து காக்கணும்.” என மனமுருகி வேண்டிக்கொண்டாள்.

அனைவரும் மனநிம்மதியுடன் காரை நோக்கி நடக்க… தனலட்சுமி… “ஏங்க ஐயர்கிட்ட அர்ச்சனை தட்டு வாங்கிட்டு வாங்க…” என ஞாபகப்படுத்தினாள்.

வேதமூர்த்தி ஐநூறு ரூபாயை குருக்கள் நீட்டிய தட்டில் போட்டு.. அர்ச்சனை தட்டை வாங்கி கொண்டே… “என்ன ஐயரே மக எப்படியிருக்கா..?” என குசலம் விசாரிக்க…

“நல்லாயிருக்கா…” என தயங்கியவர்

“உங்க பையன் முகேஷின் ஜாதகத்திற்கு ஏழரை சனி நடக்குது… கவனமா இருக்க சொல்லுங்க” என்றார் குருக்கள்.

“சரி..” என தலையாட்டியவரிடம்…

“அதுமட்டுமில்ல… நீங்க முகேஷ் கல்யாணத்துக்கு முன்னாடி பையன் ஜாதகத்தை வைச்சி கும்பிட வந்தீங்களே அப்பவே சொல்லலாம்னு தான் இருந்தேன்… சரி கல்யாணம் முடியட்டும் ன்னு நினைச்சேன். பையனுக்கு கல்யாணமாகி நாலாவது வருஷத்துல ஒரு  கண்டம் இருக்குதுங்க…” என்ற குருக்களை குழப்பத்துடன் பார்த்தார்.

“ஒன்றும் பயமில்லை. இந்தாங்க பச்சைம்மாவிற்கு வைச்சி பூஜை பண்ண எலுமிச்சம் பழம்… நடுவீட்டில் வையுங்க.. கவனமாக இருங்க போதும்.” என்றார்.

“ஐயரே.. உயிருக்கு ஏதும் ஆபத்தில்லிங்களே?” என்றார் கவலையுடன்…

“அப்படியெல்லாம் ஏதுமில்லீங்க.. ஜாதகப்படி  மனப்பிரிவினைகள் வர வாய்ப்பிருக்கு” என வயிற்றில் புளியை கரைத்தார்.

வேதமூர்த்திக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாவிட்டாலும் குருக்கள் இவ்வளவு தூரம் சொல்வதால் மனம் கலக்கமாக இருந்தது.

முகேஷையும் சுதாவையும் பார்த்தார். அன்னியோன்யமாக பேசி சிரித்தபடி நடந்து கொண்டிருந்தனர். தனலட்சுமியோ பேத்தி தியாவிடம் கொஞ்சி பேசியபடி நடந்து கொண்டிருந்தாள். இவர்களுக்கா மனப் பிரிவினை.. வாய்ப்பேயில்லை என மனதுக்குள் நினைத்தவர் தூரத்தில் தெரிந்த பச்சையம்மனை “நீ தான் என் குடும்பத்தை தாப்பாத்தணும்” என கையெடுத்து கும்பிட்டு மனமுருக வேண்டியபடி காரில் பயணத்தை தொடர்ந்தார்.

ஆனால் விதி அவர்களின் குடும்பத்தை எப்படி ஆட்டுவிக்க போகிறது என்பதை அறியாமல் சிரித்தபடி காரில் பயணிக்க தொடங்கினர்.

–தொடரும்…

6 thoughts on “தொட்டுவிட தொட்டுவிட தொடரும் | 1 | தனுஜா ஜெயராமன்

  1. சுவாரஸ்யமாய் செல்கிறது கதை. என்ன நடக்கும்.? அய்யோ அப்டி எதுவும் நடந்துவிடக்கூடாது என்றும் மனம் சொல்கிறது. பாராட்டுகள் !

  2. எழுத்துநடை சரளமாக,சுவாசியமாக இருக்கிறது. தொடரட்டும்.

  3. சில சில இடங்களில் எழுத்து பிழைகள் உள்ளன. சரி பார்க்கவும்.

    குருக்கள் ஜோசியம் சொல்ல மாட்டார். அவர்கள் படிப்பது வேறு ஜோசியர் படிப்பது வேறு. இருந்தாலும் எல்லாரும் கோவில் குருக்கள் சொல்வது போலவே கதை எழுதுகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!