இருக்கு ஆனா இல்லை | உமா அபர்ணா

 இருக்கு ஆனா இல்லை | உமா அபர்ணா

ஏப்ரல் 24

லாரி வேகமாக குடியாத்தம் தாண்டிச் சென்று கொண்டு இருந்தது. டிரைவரிடம் இரண்டு கொட்டாவிகள் வெளிப்பட்டதும் அவர் எங்கே தூங்கிவிடுவாரோ என்ற பயம் ஒருமுறை நெஞ்சைக் கவ்வ அதுவரையில் மெளன விரதம் காத்திருந்த என் இதழ்கள் சட்டென அதை முறித்துக் கொண்டு வார்த்தைகளை துப்பியது.

குடியாத்தத்தில் இருந்து ஆத்தூர் போக வேண்டும், டிரைனில் கர்பார்ம் டிக்கெட் கிடைக்கவில்லை எனவே பாத்திரங்களுக்காக ஏற்பாடு பண்ண லாரியிலேயே பயணம் மேற்கொள்ளலாம் என்று ஏகமனதாக முடிவெடுத்து தோழி ப்ரியாவின் உதவியுடன் இதோ லாரியில் முன்பக்க இருக்கையில் பயணம்.

குடியாத்தத்தில் இருந்து ஆத்தூர் பயணம் மதியம் இரண்டு மணிக்கு வரவேண்டிய டிரைவர் மூன்று மணிக்கு பாங்..பாங்..என்று ஹாரணைப் பறக்கவிட்டார். தனியார் பள்ளியின் ஆசிரியரான எனக்கு மாணவர்களின் தேர்வுத்தாள்களும் மார்க் அட்டவணைகளும் நேரத்தை கபளீகரம் செய்து கொண்டதால் அவர்கள் தாமதித்து வந்தபோது போனவாரம் சிறிதுசிறிதாக ஆரம்பித்த பேக்கிங் மேலும் அரைமணி எடுத்துக் கொண்டு முடிந்தது.

லாரி சீரான வேகத்தில் பயணித்தது. சாமான்களை ஏற்றி முடிக்கும்போதே நான்கு மணியாகிவிட்டதால் டிரைவரும் க்ளீனரும் மதிய சாப்பாடு சாப்பிட இறங்கிவிட்டனர். நான் தெருவை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருந்தேன்.

கடைத்தெரு கும்பலாக இருந்தது. பட்டாணிக்கடை, வெற்றிலைபாக்கு கடை எல்லாவற்றிலும் கூட்டம், எதிரே வாழைபழ வண்டியில் கற்பூரவல்லியும் பூவன்பழமும் எடுத்துக்கொள்ளும்மா என்று சிரித்தது.

சைக்கிள், கார், ஆட்டோ, நடைபாதைவாசிகள் என்று நிமிரக்கூட நேரமில்லை எனக்கு என்று சாலைப்பெண் சலித்துக்கொண்டாள்.

எனக்கு பலூன் வேணும் அழுது கொண்டிருந்த சிறுமி அம்மாவின் கரங்களால் இரண்டு அடியை முதுகில் வாங்கி தேம்பிக் கொண்டு இருக்க, வம்படியாக அம்மா பலூன் பலூன் என்று தன் வியாபாரத்திற்கு கத்தினான் பலூன்காரன்.

இவன் விடமாட்டான் என்று மனதிற்குள்ளேயே சபித்தபடி பிள்ளைக்கு பலூன் வாங்கித் தந்தாள் அந்த பெண்மணி. வேடிக்கையின் முடிவில் என் கண்களுக்கு டிரைவரும் க்ளீனரும் தெரிந்தார்கள். க்ளீனர் பின்பக்கம் ஏறிக்கொள்ள நான் அருகில் அமர்ந்திருந்த டிரைவரைப் பார்த்தேன்.

ஹைவேயில் வேகமாக வண்டி பறந்தது. டிரைவருக்கு ஒரு நாற்பது வயதிருக்கும். உயரமாக இருந்தார் பெரிய மீசை, அதற்க துணையாய் தாடி, படிய வாரியதலை, எதையோ யோசித்துக் கொண்டே இருப்பது போன்ற முகம். மிகவும் மரியாதையானத் தோற்றம். அவருடன் சுமார் இருபத்தைந்து வயதுடைய க்ளீனர் மோகனும் பின்னால் சாமான்களோடு அமர்ந்திருந்தார்.

கொஞ்ச நேரத்தில் சூரியன்தன் பொறுப்பை சந்திரனிடம் தந்துவிட்டு முழுவதுமாக விடைபெற்றுக் கொள்ள, கதையின் ஆரம்பத்தில் முதல் பாராவின் கடைசி வரியை மெய்பிக்க நான் அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.

நீங்க எத்தனை வருஷமா லாரி ஓட்டுறீங்கண்ணே என்று.

நினைவு தெரிந்த நாளிலிருந்தும்மா க்ளீனரா என் வாழ்க்கையை ஆரம்பிச்சேன். பயப்படாதீங்க பத்திரமா கொண்டு போய் சேர்த்துடுவேன். அதுசரி நீங்க இத்தனை அவசரமா ஆத்தூர் போறீங்க ? பாவம் லாரியிலே பயணம் பண்ண கஷ்டப்படறீங்களே சாலையில் கவனம் வைத்தபடியே வண்டியை விரட்டினார்.

அம்பா சமுத்திரத்தில் கோடைக்கால வகுப்புகள் எடுக்கவேண்டியிருக்கு அதனால்தான்….! சட்டென்று பெரியதாக காற்று வீசியது.

டிரைவர் என்னிடம் உங்களுக்கு பேய் பிசாசு இவற்றில் நம்பிக்கை இருக்கா மேடம் என்றார்.

எண்ணன்னே ? நீங்க எந்த காலத்திலே இருக்கீங்க ? அறிவியல் வளர்ந்து இருக்கிற இக்காலத்திலே பேய் பிசாசுன்னு எதுவுமே கிடையாது.

நான் மட்டும் இல்லை மேடம் லாரி டிரைவர்ஸ் பார்த்து இருக்காங்க ?

நீங்க பேயை எப்போ பார்த்தீங்க ? என்றேன் நான்.

அவர் போனவாரம் நான் இந்த வழியா ஒரு லோடு ஏத்திட்டு வந்திருந்தேன். அப்போ ஒரு பதினோரு பணிரெண்டு மணி இருக்கும். முப்பது வயசு பொண்ணு கூடவே ஒரு பத்து வயசு குழந்தை அநேகமா அது அவளோட பிள்ளையா இருக்கலாம். அதோ தெரியுதே அந்த மரத்தடியில் நின்று லிப்ட் கேட்டு கைகாட்டினாங்க, வண்டியை ஓரங்கட்டி, அரைகுறை வெளிச்சத்திலே பார்த்தேன் பெரிய மூக்குத்தி போட்டு களையாக இருந்தாள் அந்த குட்டிப்பொண்ணு அவளின் சாயலில்,

அய்யா ஒரு கிலோமீட்டர்ல எங்க வீடு இருக்கு பாலம் தாண்டி கொஞ்சம் எறிக்கி விட்டுறீங்களா என்று கெஞ்சல் குரலில் கேட்டா.

பாவப்பட்டு ஏற்றிக்கொண்டேன். ஏம்மா இந்த இருட்லே தனியா குழந்தையோட போகலாமா காலம் கெட்டு கிடக்கு என்று பேசியபடியே வண்டியை ஓட்டினேன். ஒரு அரைமணி நேரம் போயிருக்கும், வண்டி ஓட்டுவதில் கவனமாய் இருந்த நான் திரும்பிப் பார்த்தேன் திடீரென அந்த பொண்ணும், சிறுமியும் காணவில்லை. எனக்கு ஒண்ணுமே புரியலை, ஓடிக்கொண்டுள்ள வண்டியில் இருந்து எப்படி இறங்க முடியும் ?!

நீ என்ன நினைச்சாலும் நினைச்சிக்கம்மா எனக்கு உடனே கைகால் எல்லாம் உதற ஆரம்பிச்சிட்டது. வண்டியை நிறுத்தவும் பயம் ஒரு சிகரெட்டைப் பற்ற வைச்சிட்டு ரெகுலா இந்த பக்கம் வர்ற என் இன்னொரு டிரைவரை போன்ல கூப்பிட்டு விஷயத்தை சொன்ேன்.

பதறிட்டான் அது பேய்டா…. நீயுமா பார்த்தே, கொஞ்ச வருஷம் முன்னாடி இந்த இடத்திலே கார் விபத்திலே இறந்திட்டாங்க அன்னைக்கு லோடு ஓட்டிட்டு வந்த லாரி டிரைவர் குடிச்சிட்டு வந்திருக்கான். வரும் லாரியிலே எல்லாம் ஏறி அந்த டிரைவரைக் கண்டுபிடித்து பழிவாங்க காத்திருக்கின்னு சொல்லுவாங்க. அங்கே நிக்காதேடா நீ உடனே கிளம்பு என்றான். வேகமாய் வண்டியை மிதித்து சேலம் வந்துதான் வண்டியை நிறுத்தினேன் எனச் சொன்னார்.

நான் சிரித்தேன் ஏன் எல்லா பேயும் பொண்ணாவேயிருக்கு ? மூக்குத்தி போட்டு இருக்குன்னு சொன்னீங்களே அது எங்கே வாங்கியிருக்கும் ? சிரித்தபடியே நான் கேட்க, அவர் முகத்தில் பயப்பீதி

சத்தியமாம்மா நான் கண்ணால பார்த்தேன் அதனாலதான் இந்த ரூட்டு வர்ற கொஞ்சம் யோசிப்பேன். தோழியின் தந்தை பெயரைச் சொல்லி அவரு தனியா பொம்பிளைப் பிள்ளை போகுதுன்னு சொன்னதாலதான் வந்தேன் என்றார்.

என் மனதில் ஒருவேளை பேசியதைவிடவும் அதிகமா காசுக்கு அடி போடுகிறாரோ என்று தோன்றிய வேளை ஒரு பெண்ணும், சிறுமியும் கைகாட்டினார்கள் வண்டியை நிறுத்தச் சொல்லி அவர் வேகமாய் நிற்காமல் வண்டியைச் செலுத்தினார். இதுதான் நான் அன்னைக்குப் பார்த்த பொண்ணு என்று சொல்லியபடியே,

அடர்த்தியான இருட்டில் அவர்களைப் பார்த்ததும் பேய் பற்றிய நம்பிக்கை இல்லையென்றாலும் எங்கோ அலறும் ஆந்தை, ஊளையிடும் நாயின் சத்தம் எல்லாம் கலந்து இலேசாக பீதியை கிளப்பிட நான் இப்போது பயத்தில் உலகில் உள்ள எல்லாக் கடவுளையும் வேண்டிக்கொண்டு தூக்கம் வருவதைப் போல கண்களை மூடிக்கொண்டேன். எனது முதுகுதண்டு சில்லிடுவது எனக்கேத் தெரிந்தது.

ஆத்தூர் வீட்டை வந்தடையும் வரையில் மனதில் பயம் பிராண்டிக் கொண்டு இருந்தது. சாமான்களை இறக்கி வைத்துவிட்டு, பணம் பெற்றுக்கொண்டு இருவரும் விடைபெற நன்றி சொல்லி அனுப்பிவைத்துவிட்டு, பத்திரமாக வந்துவிட்டதாக தோழிக்கு தகவல் தர போனை இயக்கினேன்.

ப்ரியா நான் நல்லபடியா வந்துட்டேன்டி ஜஸ்ட் 20மினிட்ஸ் ஆகுது.

சாரி உமா நானே உனக்கு போன் பண்ணனும்ன்னு நினைச்சேன் அப்பா ஏற்பாடு பண்ணின டிரைவர் நேற்று இரண்டு மணிக்கு ஒரு விபத்திலே இறந்திட்டாராம். உனக்கு தகவல் தெரிவிக்கிறதுக்குள்ளே, அம்மா பாத்ரூமில விழுந்து மயங்கிட்டதால அவசரமா ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போக வேண்டியதாகிவிட்டது. நான் மாமா வீட்டுலேயிருந்து காலையில் வந்தபிறகுதான் எனக்கு விவரமே தெரியும்.

விளையாடாதே ப்ரியா நான் பத்திரமா வீடு வந்து சேர்ந்தாச்சு அதே டிரைவர்தான் என்னை கொண்டு வந்து இறக்கிட்டுப் போனார். ரொம்ப நல்லமாதிரி.

அந்தப்பக்கம் ப்ரியா அதிர்வது கேட்டது என்னடி சொல்றே ? நீ இப்போ வாட்ஸ்அப் பாரு… என்றாள்.

மாலை செய்தித்தாளில் ஏப்ரல் 24 குடியாத்தம் அருகே மதியம் இரண்டு மணியளவில் நடந்த சாலை விபத்தில் லாரி டிரைவர் கந்தசாமி, கிளீனர் மோகம் ஆகிய இருவரும் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அவர்களின் புகைப்படத்துடன் வெளியாகி இருந்தது.

உங்களுக்கு பேய் பிசாசு மேலயெல்லாம் நம்பிக்கையிருக்கா மேடம், டிரைவரின் குரல் இப்போதும் காதில் ஒலிக்க உமா உமா லைனில் இருக்கிறியா என்று தோழியின் குரலுக்கு பதில் சொல்லமுடியா பதட்டத்துடனும் பயத்துடன் நான் இருக்கு ஆனா இல்லை.

பேய் இருக்கா இல்லையா ? டிரைவரின் குரல் உங்களுக்கு கேட்குதா சொல்லுங்களேன்.

 – உமா அபர்ணா

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...