காலம் ஒருநாள் மாறும் (சிறுகதை )| வி.பிரபாவதி

மணி இரண்டிருக்கும்.   செல்லாயி தனது குடிசை வீட்டுக்கு வந்து தாழ்ப்பாளின் மாட்டிய கொக்கியை அகற்றி விட்டு உள்ளே நுழைந்தாள். திருட்டுப் போக வீட்டில் ஒன்றும் இல்லை.  கொக்கி போட்டு வைத்தால் நாய் பூனை வராது.

காலை எழுந்ததும் கொஞ்சம் பழைய சாதத்தை கரைத்து ரெண்டு சாம்பார் வெங்காயத்தை பச்சைமிளகாயுடன் நுணுக்கி சாப்பிட்டுருந்தாள்.

வெளியில் சுள்ளிகளோடு ஒரு விறகையும் வைத்து அலுமினிய குண்டானில் ஒரு உழக்கு அரிசி போட்டு சோறு பொங்கினாள்.   சாம்பார் வெங்காயம், தக்காளி, முருங்கைக்காய் போட்டு கொஞ்சம் புளிக்குழம்பு வைத்தாள்.

கையில் கொண்டு வந்திருந்த ரெண்டு வடை துணுக்குகளை தொட்டுக் கொண்டு சாப்பிட்டு கொஞ்சம் கண்ணயர்ந்தாள்.

நான்கு மணி போல எழுந்து அடுப்புத் தணலில் வைத்திருந்த கருப்பட்டி டீயை குடித்து விட்டு பருப்பு டப்பியை எடுத்தாள்.

தேவையான பருப்புகளை அளந்து எடுத்து வைத்தாள்.  கையில் வாங்கி வந்த காய்ந்த மிளகாய்கள், இஞ்சி, சோம்பு, கல் உப்பு ஆகியவற்றையும் ஒரு தட்டில் பரப்பி வைத்தாள்.

மறுநாள் காலை ஊறவைத்து அரைத்து மாமரத்தடியில் ‘வடை கடை’ போட்டு விற்க துவங்குவது அன்றாட வழக்கம்.

கொஞ்சம் கருவ முள்ளு கொண்டு வந்து ஒன்னரை முழம் அளவுக்கு வெட்டி வெட்டி கட்டி வைத்தாள்.

கை எரிச்சலை தவிர்க்க கொஞ்சம் தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டாள்.

“என்ன ஆயா, பாக்கலாமா”?  வாசு வந்தான்.  எக்சல் சூப்பரை ஓரமாய் நிறுத்தி விட்டு வந்தான்.

வாப்பா வாசு, ஒக்காரு வாறேன் என்றாள்.

அந்த குடிசையின் வாசலில் இருக்கும் குட்டி மண் திண்ணையில் இருவரும் அமர்ந்தனர்.

வேலாயி சுருக்கு பையை அவனிடம் கொடுத்தாள்.  சில்லரைகளும், ஐந்து, பத்து, இருபது , ஐம்பது, நூறு ரூபாய் நோட்டுக்களை எண்ணி வாங்கிக்கொண்டு போனான்.

தினசரி ஆயாவிற்கு பருப்பு, எண்ணெய், உப்பு, மிளகாய், அரிசி, காய்கறி வாங்கித் தருவான்.

மீதிப் பணத்திற்கு கணக்கு வைத்துக் கொண்டு வங்கியில் சேர்த்து விடுவான். இவனுக்கென்ன அக்கறை?  இவன் யார்?

முருகேசனும் வேலாயியும் மனமொத்த தம்பதி.  ஓரளவு வசதியுடன் வாழ்ந்தவர்கள்.  ஒரே மகன் கணேசன்.  பள்ளிப்படிப்பு முடித்து அப்பாவுடன் விவசாயம் பார்த்தான்.  இருபத்து மூன்று வயதில் இருபது வயது சாந்தியை திருமணம் செய்து வைத்தனர்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது.  இரண்டு வருடத்தில் ஒரு மகன் பிறந்தான்.

அடுத்த பத்து வருடத்தில் முருகேசன் நெஞ்சு வலியால் இறைவனிடம் போய்ச் சேர தனியாளாய் விவசாயம் பார்த்தான் கணேசன்.  அடுக்கடுக்காய் துன்பங்கள்.  வானம் பார்த்த பூமியானது விவசாயம்.  சாந்தி இரண்டாவது பிரசவத்தில் ஜுரம் வந்து இறந்து போனாள்.  கணேசன் இடிந்து போனான்.  ‘குடி’ அவனுள் குடி புகுந்தது.

பிறகென்ன விஷச் சாராயம் குடித்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இறந்தே போனான்.

வேலாயி திக்கற்று போனாள்.  பெரிய வீட்டின் முன் பகுதியை வீட்டோடு சேர்த்து விற்று கடனை அடைத்தாள்.

சோர்ந்து போகவில்லை.  சோர்ந்து போக முடியவில்லை.  சந்து வழியாக கொல்லைப் பக்கம் குடிசை போட்டுக் கொண்டாள்.

தன் வயிறை வளர்க்க வேண்டும்.  எல்லாம் போனாலும் தன் பேரன் தினேசை வளர்க்கும் பொறுப்பு அவளுக்கு இடப்பட்ட விதி.

பாவம் வேலாயி. எவ்வளவு அழுவாள்?   சுதாரித்து கொண்டாள்.  தன் அக்கா மகனிடம் தான் வீட்டை விற்றிருந்தாள்.   அவனுக்கும் அவன் மனைவிக்கும் இவள் மீது பாசந்தான்.  இவள் நிலமும் அவர்களுக்கே குத்தகைக்கு விட்டிருந்தாள்.  அவர்கள் மகன் வாசு தான் வேலாயிக்கு தற்போது துணை.

இதோ பேரன் தினேஷ் காலேஜ் வந்து விட்டான்.  மிகவும் நன்றாக படிப்பான்.  பாட்டி வேலாயி தனக்காக எண்ணெய் சட்டியின் சூட்டின் முன் அமர்ந்து வடை, குணுக்கு, போண்டா என செய்து விற்று சம்பாதிக்கிறாள் என்பதை அறிந்திருந்தான்.

நன்றாக படித்தான்.

நிலக் குத்தகை வருமானத்தை தொடாமல் சேர்த்து வைத்தாள்.  பேரனுக்கு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்று அக்கா மருமகளிடம் சொல்வாள்.

தினமும் சம்பாதிப்பதை சேர்த்து வைத்து பேரனை படிக்க வைத்து கொண்டிருந்தாள்.

இதோ இப்போது பிட்ஸ் பிலானியில் சேர்ந்துள்ளான்.  மூன்று வயது மூத்தவனான வாசு உள்ளூர் போஸ்ட் மாஸ்டராக இருக்கிறான்.

வருடங்கள் ஓடி விட்டன.  தினேஷ் படிப்பை முடித்து விட்டு வந்திருந்தான்.  ஆயாவை பார்த்ததும் கட்டிக் கொண்டான்.  எலும்பும் தோலுமாக பத்து வயது அதிகமாக தெரிந்தாள்.

வாசுவிடமும், ஆயாவிடமும் நிறைய பேசினான்.

தனக்கு கூடிய சீக்கிரம் வேலை கிடைத்து விடும் என்றான்.

ஆசை ஆசையாய் ஆயாவிடம் நிறைய பேசினான்.  இரண்டு நாட்களாக வடை வியாபாரம் செய்யவில்லை.

ஆயாவை அழைத்துக் கொண்டு அந்த ஹோட்டலில் நுழைந்தான்.  வாங்க ஆயா, ஒக்காருங்க என்று சொல்லி மெனு கார்டு பார்த்து ஆர்டர் செய்தான்.  இருவரும் சாப்பிட்டார்கள்.  வேலாயி வாழ்வாங்கு வாழ்ந்தவள் தானே.  பேரனுடன் சாப்பிடுவதில் பேரானந்தம்.

சாப்பிடும்போது அம்மா, அப்பா, தாத்தா எல்லோரையும் பற்றி நிறைய பேசினார்கள்.  வேலாயிக்கு உலகத்தையே வில்லாய் வளைத்துவிட்ட பெருமை.  வீட்டிற்கு வந்தும் சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தாள்.

“எனக்கு வயசாயிருச்சு தங்கம், ஒன்னுகிட்ட சில விசயம் சொல்லோனும் என்றாள்.

கோடி வீட்டு சரசுவிடம் கொடுத்து வைத்திருந்த தன்னுடைய, மருமகளுடைய பத்து பன்னிரண்டு பவுன் நகைகளை வாங்கி வந்து பேரனிடம் ஒப்படைத்தாள்.

வாசுவிடம் சொல்லி பேங்கில் இருக்கும் பணத்தை பற்றியும் சொன்னாள்.

ஏதோ இந்த ஆயாவால முடிஞ்சதை உனக்கு சேத்து வச்சுட்டேம்ப்பா என்றாள்.  பேரனிடம் ஒப்படைத்துவிட்ட நிம்மதி.

குலதெய்வத்துக்கு பொங்கல் வெக்கோணும் என்றாள்.

கோவிலில் சாமியிடம் தினேஷ் ஆணித்தரமாக வேண்டிக்கொண்டான்.  எங்கம்மா அப்பா ஆயிசையும் சேர்த்து எங்க ஆயாவுக்கு கொடு என்று கோரிக்கை வைத்தான்.

இதோ வேலாயி வடை போடுவதை விட்டு பேரனுக்கும் அவன் மனைவிக்கும் ருசியாக சமைத்து போடுகிறாள்.  அருகில் அமர்ந்து ரசிக்கிறாள்.  டிவி பார்க்கிறாள்.

பேரன் வாங்கியிருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் மகிழ்ச்சியாக இருக்கிறாள். மகனையும் மருமகளையும் நினைத்து வருந்தவும் செய்கிறாள்.

இதோ தினேஷின் முதல் மகனுக்கு காது குத்து.  வேலாயி முன் வரிசையில் தினேஷ் வாங்கிக் கொடுத்த பட்டுப் புடவையுடன்!

சொந்தங்களோடு பெருமையாக அமர்ந்திருந்தாள்.  காலம் மாறியது.  கண்களில் ஆனந்த கண்ணீர்.  மனதில் பெரு மகிழ்ச்சி.

வி பிரபாவதி

மடிப்பாக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!