தங்க மீன்! | நத்தம் எஸ். சுரேஷ்பாபு

 தங்க மீன்! | நத்தம் எஸ். சுரேஷ்பாபு

பட்டினப்பாக்கம் என்ற கடற்கரையோர கிராமத்தில் மணியன் என்றொரு மீனவன் வசித்து வந்தான். அவன் கடலுக்கு படகில் சென்று மீன்களை வலைவீசி பிடித்து விற்று வாழ்ந்து வந்தான். சில சமயம் நல்ல வருமானம் கிடைக்கும். சில சமயம் மீன்கள் கிடைக்காமல் வருமானம் இருக்காது. அதற்காக அவன் அந்த தொழிலை விட்டுவிடவில்லை.

ஒருநாள் அவன் தன் படகில் கடலுக்குச் சென்று வலைவீசினான். நீண்ட தொலைவு சென்று நெடுநேரம் கழித்து திரும்பி வலையை எடுத்தான். அந்தோ பரிதாபம்! அவன் வலையில் ஒரேயொரு பெரிய மீன் மட்டுமே சிக்கி இருந்தது. அடச் சே! இன்று நமக்கு நாள் சரியில்லை!ஒரேமீன் சிக்கி இருக்கிறது. சரி இதை விற்று இன்றைய பொழுதை ஓட்ட வேண்டியதுதான் என்றவாறு மீனை வலையில் இருந்து விடுவித்து கூடையில் போட முயன்றான்.

அப்போது அந்த மீன் பேச தொடங்கியது, மணியா! என்னை கடலில் விட்டுவிடு! எனக்கு அதிசய மந்திரங்கள் தெரியும். அந்த மந்திரத்தை சொன்னால் தீராத நோய்கள் எல்லாம் தீரும். என்னிடம் ஒரு சங்கு இருக்கிறது. அதை இழைத்து நான் சொல்லும் மந்திரத்தை கூறி நோயாளிகளுக்கு தந்தால் நோய்கள் குணமாகும். அந்த சங்கையும் மந்திரத்தையும் உனக்குத் தருகின்றேன். பதிலுக்கு என்னை நீ விட்டு விடு! என்றது.

மணியன், மீனே நீ சொல்வதை எப்படி நம்புவது? என்று கேட்டான்.

மணியா! நீ என்னை நம்பித்தான் ஆக வேண்டும். என்னை விட்டுவிடுவதால் உனக்கு இந்த அதிசய சக்தி கிடைக்கும் இது சத்தியம்! என்றது.

மணியன் யோசித்தான்! இந்த ஒரு மீனை விற்றால் பெரிய தொகை ஒன்றும் கிடைக்காது. விட்டு விடலாம் அப்படிவிடுவதால் மந்திரங்கள் கிடைத்தால் லாபம்! கிடைக்காவிடினும் பெரிய நஷ்டம் ஒன்றும் இல்லை. எனவே மீனை விட்டு விட முடிவு செய்தான்.

அதை வலையில் இருந்து விடுவித்து கடலில் விட்டான். உடனே அது ஜொலி ஜொலிக்கும் தங்க மீனாக மாறியது. மணியா! என்னை விடுவித்தமைக்கு நன்றி! இந்தா ஔஷத சங்கு! காதைக் கொடு மந்திரம் ஓதுகிறேன்! இதை 108 முறை ஜபித்துக் கொள். பின்னர் இந்த சங்கினை இழைத்து நீரில் சிறிது கலந்து அந்த மந்திரத்தை கூறி நோயாளிக்கு ஊற்று. தீராத வியாதிகள் தீரும். நலமாய் வாழ வாழ்த்துக்கள் என்றபடி மறைந்தது.

மணியன் அந்த சங்குடன் வீட்டிற்கு வந்தான். மீன் சொன்ன மந்திரத்தை 108 முறை ஜபித்தான். அவன் வீட்டருகே ஒரு கிழவி கடும் ஜுரத்தால் பாதிக்கப் பட்டு இருந்தாள்.சங்கினை இழைத்து மந்திரம் ஓதி சிறிதளவு அவளுக்கு புகட்ட அவளது ஜுரம் தணிந்தது. மீன் பொய் சொல்லவில்லை என்று முடிவு செய்தான்.

அன்று முதல் நோயால் வேதனைப்படுவோருக்கு வைத்தியம் செய்து சிறிதளவு கட்டணம் வசூலித்து பிழைத்து வந்தான். மீன் பிடிக்க செல்வதை விட்டுவிட்டான். சில நாட்கள் செல்ல அவன் பெயர் ஊரெங்கும் பரவியது. தீராத நோய்களை எல்லாம் மணியன் தீர்த்து வைப்பதாக பரவியது. பல ஊர்களில் இருந்தும் அவனைத் தேடி நோயாளிகள் வர ஆரம்பித்தார்கள்.

இந்த தகவல் அரசனுக்கும் எட்டியது. அரசனின் குமாரத்தி இளவரசி இந்திராணி தேவிக்கு ஓர் மனநோய் பிடித்து வாட்டியது. சித்தம் கலங்கி பிரமை பிடித்தது போல இருந்தார். மணியனை அழைத்து இந்த நோயை போக்கிவிட்டால் இளவரசியை அவனுக்கே மணமுடித்து வைப்பதாககூறினார் அரசர்.

மணியனும் அதற்கு இசைந்து இளவரசியை குணப்படுத்துவதாக கூறினான். மனதிற்குள் தங்க மீனை நினைத்து அது சொன்ன மந்திரத்தை நூற்றி எட்டு முறை ஜெபித்தான். அவன் முன் மாயத் திரை ஒன்று தோன்றியது. அதில் தங்கமீன் தோன்றி, மணியா! இந்த அரசன் பொல்லாதவன்! இவனது தீமையின் பலன்களே இளவரசியை வாட்டுகின்றது! இவன் செய்த பாவங்கள் இளவரசியை பீடித்து உள்ளது. வெறும் சங்கு நீர் அவள் வியாதியை குணப்படுத்தாது. கடல் நடுவே சாவகத் தீவு உள்ளது அங்கே ஓர் அதிசய மூலிகை உள்ளது. அதை பகல் பொழுதில் காண முடியாது. நள்ளிரவில் தங்கம் போல் ஜொலிக்கும். அந்த மூலிகையின் வாசம் பட்டால் இவளது பிரமை நீங்கி விடும். அந்த மூலிகையை அவ்வளவு சுலபத்தில் எடுக்க முடியாது. அதை ஒரு பிரம்ம ராட்சசன் காவல் காத்து வருகிறான். அவனுக்கு மனிதர்கள் என்றாலே பிடிக்காது. அவனை ஏமாற்றி அந்த மூலிகையைக் கொண்டு வந்தாள் இளவரசியின் நோய் தீரும் என்றது.

மணியன் தனக்கு ஓர் கப்பலும் சில வீரர்களும் தேவை என்றும் இளவரசியை குணப்படுத்த தேவையான மூலிகை சாவகத் தீவில் இருப்பதாகவும் அங்கே சென்று எடுத்து வந்து இளவரசியை குணப்படுத்துவதாகவும் கூறினான். அரசனும் கப்பலையும் சில வீரர்களையும் உடன் அனுப்பி வைத்தான். சில மாத பயணங்களுக்குப் பிறகு சாவகத் தீவை கப்பல் நெருங்கியது. அந்த சமயம் இரவு நேரம் என்பதால் அங்கிருந்த மலை உச்சியில் மூலிகை ஜொலிப்பதைக் கண்டான். அதே சமயம் பெரிய ராட்சதன் ஒருவன் அந்த மலையை சுற்றி வருவதையும் காண முடிந்தது.

மணியன் தன்னுடன் வந்த வீரர்களை அந்த ராட்சதனுடன் போரிடுமாறும் தான் அந்த மூலிகையை பறித்து வந்துவிடுவதாகவும் கூறினான். ஆனால் அந்த வீரர்கள் ராட்சதர்களின் தோற்றத்தைக் கண்டு வீரர்கள் அஞ்சி மறுத்துவிட்டார்கள். சரி நீங்கள் வராவிட்டால் பராவாயில்லை! நானே சென்று கொண்டுவருகிறேன் என்று மணியன் கிளம்பினான்.

அச்சமயம் மணியா! நில்!என்றொரு குரல் ஒலித்தது! மணியன் யாரது இந்த நேரத்தில் இங்கெ நம்மை அழைப்பது என்று பார்த்தான். மணியா! நான் இங்கே இருக்கிறேன் என்று பாய்மரக் கப்பலின் தூணின் மீதிருந்து ஒரு குரல் ஒலித்தது.

அது ஒரு ஆந்தை! இரவில் அதன் கண்கள் மின்னியது!மணியா! நீ என்னை அழைக்காவிட்டாலும் நானே தேடி வந்துவிட்டேன்! என்றது அது.

முன்னொரு சமயம் வேடன் ஒருவன் வலையில் சிக்கியிருந்த ஆந்தை அது. மணியன் அதை வலையில் இருந்து விடுவித்து முதலுதவி செய்து அனுப்பினான். அப்போது சமயம் வரும்போது உதவுவதாக அந்த ஆந்தை வாக்குறுதி அளித்து இருந்தது. அது நினைவுக்கு வர, ஆந்தையாரே! நல்ல காரியம் செய்தீர்! உங்கள் உதவி எனக்கு கட்டாயம் தேவை என்றான்.

தெரியும் மணியா! நீ இங்கேயே கப்பலை நிறுத்தி வை! நான் மலை மீது பறந்து அந்த மூலிகைச் செடியினை பறித்து வந்து விடுகின்றேன்!மனிதர்கள் வாசத்தை மட்டும் அந்த ராட்சதன் மோப்பம் பிடித்தானென்றால் அப்புறம் தின்றுவிடுவான். ஆகவே நீங்கள் வர வேண்டாம். நான் செடியினை கொண்டுவருகிறேன் என்றது.

ஆந்தை மலைக்கு பறந்து சென்று மூலிகைச் செடியை அலகால் பறித்து எடுத்துவர கப்பல் புறப்பட்டது. மீண்டும் சில மாதங்கள் பயணித்து கப்பல் நாட்டை அடைந்தது. மூலிகையுடன் மணியன் அரசவைக்கு சென்றான். அரசரிடம் மூலிகை கொண்டுவந்துவிட்டேன். இளவரசியைக் குணப்படுத்தி விடுகிறேன் என்று சொன்னான்.

அரசர் அவனை இளவரசியின் இருப்பிடம் அனுப்பி வைத்தார். மணியனும் இளவரசியிடம் சென்று அந்த மூலிகையை முகர வைத்தான். மறுநொடி அவள் பிரமை நீங்கியது. தன்னருகே அழகிய வாலிபன் நிற்பதைக் கண்டு நாணி, தாங்கள் யார்? என்று வினவினாள்.

மணியன் தான் ஒரு வலைஞன் என்றும் தற்சமயம் மருத்துவம் செய்து வருவதாகவும். கூறினான். அரசன் இளவரசி குணம் அடைந்ததை பார்த்து மகிழ்ச்சி அடைந்தான். மணியனுக்கு சில பொற்காசுகளை தந்து போய் வருமாறு கூறினான்.

“ அரசே! தங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து தருவதாகக் கூறினீர்களே?” என்று மணியன் கேட்டான்.

“ உண்மைதான்! என் மகளை குணப்படுத்துபவருக்கு அவளைத் திருமணம் செய்து வைப்பதாகக் கூறினேன். அது உண்மை! நீயா என் மகளை குணப்படுத்தினாய்? நீ கொண்டுவந்த மூலிகைதானே குணப்படுத்தியது. அதற்கு எப்படி மகளை மணமுடிக்க முடியும். இதோடு சென்றுவிடு! இல்லையேல் உன்னைச் சிரச்சேதம் செய்துவிடுவேன்! என்று மிரட்டினான் அரசன்.

ஒன்றும் பேச முடியாமல் கடற்கரையோரம் சென்று மணியன் அழுதுகொண்டு இருந்தான். அப்போது தங்க மீன் அவன் முன் தோன்றியது! மணியா! அப்போதே சொன்னேன்! அந்த அரசன் நல்லவன் இல்லை என்று! நீதான் அரசன் செய்த பாவத்திற்கு அவள் மகள் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று உதவி செய்தாய்! ஆனால் அரசனோ உன்னை ஏமாற்றிவிட்டான். ஒன்றும் கவலைப்படாதே!அந்த இளவரசி உனக்குத்தான்! மூலிகை இல்லாமல் போனதால் சாவகத் தீவு இராட்சதனும் அழிந்துவிட்டான். நான் பெரிய இராட்சத அலைகளை அனுப்பி அரண்மணையில் இருந்து இளவரசியை கடத்தி வருகிறேன்! நீ அவளுடன் சாவகத் தீவு சென்று அந்த தீவை ஆட்சி செய்து நலமுடன் வாழ்வாயாக என்றது.

அன்றைய மாலைப் பொழுதில் கடற்கரையோரம் அமைந்திருந்த அரண்மனைக்குள் ராட்சத அலைகள் புகுந்தன. அவை இளவரசியை அப்படியே தூக்கிச் சென்று மணியனிடம் ஒப்படைத்தன.அரசன் அலையில் சிக்கி மாண்டான். இளவரசியுடன் சாவகத் தீவு சென்ற மணியன் நீண்டகாலம் சிறப்பாக இளவரசியுடன் வாழ்ந்து மக்களின் நோய்கள் தீர்த்து வந்தான்.

– நத்தம் எஸ். சுரேஷ்பாபு

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...