அண்ணாத்த ஊசி பட்டாசு
தஞ்சாவூருக்கு அருகிலிருக்கும் சூரக்கோட்டையைச் சேர்ந்த காளையன் (ரஜினிகாந்த்). தங்கை தங்க மீனாட்சி (கீர்த்தி சுரேஷ்).
ஏழையின் நிலத்தை அடித்துப் பிடுங்கியதற்காக அடித்துத் துவைத்த பிரகாஷ் ராஜின் மகனுக்கே தான் உயிராக வளர்த்த தங்கையைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் ரஜினிகாந்த்.
திருமணத்திற்கு முதல் நாள் தங்கையைக் காணவில்லை. தங்கை தங்க மீனாட்சிக்கு என்ன ஆனது, அவருடைய பிரச்னைகளில் இருந்து அண்ணன் அவரை எப்படி மீட்கிறார் என்பது மீதிக் கதை.
கல்யாணமாகி நடுத்தர வயதில் இருக்கும் குஷ்புவும் மீனாவும் ரஜினி யைக் கல்யாணம் செய்துகொள்ள ஆசைப்படுகிறார்கள். பிறகு, தங்கை மீது ரஜினி எப்படி பாசத்தைப் பொழிகிறார் என்பதைக் காட்ட சில காட்சிகள்.
இதற்கு நடுவில் நயன்தாராவுடன் காதல். ரஜினியும் நயன்தாராவும் வரும் தொடக்கக் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ஆனால் ஏனோ நயன்தாராவின் பாத்திரம் திடீரென காணாமல் போய்விடுகிறது. பிற்பாதியில் மீண்டுவரும் நயன்தாரா, ஒரு வழக்கமான நாயகியைப்போல வந்து போகிறார்.
இந்தப் படத்தில்தான் ரஜினி மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார். காமெடி காட்சிகளிலும் சரி, சண்டைக் காட்சிகளிலும் சரி 90களின் ரஜினி யைப் பார்க்க முடிகிறது. ஆனால், கதையிலும் திரைக்கதையிலும் சொதப்பி யிருப்பதால், அவரது உழைப்பு முழுக்க வீணாகியிருக்கிறது.
தங்கை மீது உயிராக இருக்கும் அண்ணன், அவளுக்கு வரும் துன்பத்தை அவளுக்கே தெரியாமல் நீக்கி, அவளைக் காப்பாற்ற நினைக் கிறான் என்பதுதான் இந்தப் படத்தின் ஒன்லைன். ஆனால், அதற்கு தேர்ந் தெடுத்த கதையும் திரைக்கதையும் படு சொதப்பலாக இருக்கிறது.
ஒரு வில்லன் என்று நினைத்தால், இன்னொரு வில்லன். இரண்டு வில்லன்கள் என்று நினைத்தால், இன்னொரு வில்லன். மொத்தம் மூன்று வில்லன்கள். ரஜினிக்கு மூன்று கதாநாயகிகள். ஏகப்பட்ட கேரக்டர்கள். ஏகப்பட்ட சம்பவங்கள் ஏகப்பட்ட காட்சிகள்.
கீர்த்தி சுரேஷ் ஸ்கோப் இல்லை. சூரி, சதீஷ், சத்யன் என பல நடிகர்கள் இருந்த போதும் நகைச்சுவைக் காட்சிகளில் சிரிப்பு வரவில்லை. இமானின் இசையில் பாடல்கள் சிறப்பாக இருக்கின்றன.
அண்ணாத்த என்னாத்த சொல்ல?