பொங்கல் ரிலீஸ் ‘பேட்டரி’ படம் பற்றி – டைரக்டர் மணிபாரதி பேட்டி

 ‘பேட்டரி’ படத்தை இயக்கி முடித்துவிட்டு பொங்கல் ரிலீசுக்குக் காத்திருக்கிறார் டைரக்டர் மணிபாரதி. இவர், மணிரத்னம், சாய் எஸ். வஸந்த், சரண், லிங்குசாமி, ஹரி ஆகிய டைரக்டர் களிடம் பணியாற்றிய அனுபவம் பெற்றவர். அவரிடம் ‘பேட்டரி’ படம் குறித்தும், இன்றைய சினிமா பற்றியும், தியேட்டர் மற்றும் ஓ.டி.டி. தளம் பற்றியும் பேசினோம்.

‘பேட்டரி’ என்கிற கதையின், படத்தின் பொருள் என்ன?

மருத்துவ உலகில் எத்தனையோ தில்லுமுல்லுகள் நடக்கின்றன. அதில் ஒரு தில்லுமுல்லை துகிலுரித்துக் காட்டுகிற படமாக பேட்டரி இருக்கும். அதற் காக, டாக்டர்களையோ, ஹாஸ்பிட்டல் நடத்துபவர்களையோ குறைசொல்ற படமில்லை. தெரிந்த பிரச்சனைதான். ஆனால், சினிமாவில் இதுவரை சொல்லப்படாத பிரச்சனை. படம் பார்க்கும்போது புரியும், அட இப்படி ஒரு பிரச்சனை இருக்கிறதா என்றும், பேட்டரி என்கிற டைட்டிலுக்கான அர்த்தமும் திரைக்கதை – கிரைம் திரில்லர் பட வரிசையில் அமைத்திருக்கிறோம்.

கதாநாயகன், கதாநாயகி பற்றிச் சொல்லுங்கள்?

கதாநாயகன் செங்குட்டுவன். ஏற்கெனவே டிக்டாக் மூலமாகப் பிரபலமானவர். ஐந்து லட்சம் ரசிகர்களைப் பெற்றவர். இப்போது, இன்ஸ்டாகிராமில் அதே ரசிகர்களைத் தொடர்ந்து தக்கவைத்து வருகிறார். படத்தில் சப்இன்ஸ்பெக்டராக நடித்திருக்கிறார் என்று சொல்வதைவிட, வாழ்ந்திருக் கிறார் என்று சொல்லலாம். படம் பார்த்தால், புதுமுகம் என்று தோன்றாது. ஒரு ஜெயம்ரவி, அருண் விஜய்க்கு இணையாகப் பண்ணியிருக்கிறார்.

கதாநாயகி – அம்மு அபிராமி. ராட்சன், அசுரன் என இவர் நடித்த படங்கள் பெரிய ஹிட் அடித்திருக் கிறது. பேட்டரிக்காக இவரை அணுகியபோது, பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்டார். படித்துவிட்டு சம்மதத்தைச் சொல்வதாகக் கூறினார். ஆனால், அதற்கு முன்பாக அவரிடம் பத்து நிமிடம் கதை சொன் னேன். கதையைக் கேட்டதுமே நடிப்பதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகு, படம் முடியும் வரை பவுண்டட் ஸ்கிரிப்ட் கேட்கவில்லை. காரணம், கதையின்மேல் அவருக்கு ஏற்பட்ட நம்பிக்கை. திறமையான நடிகை. ரேவதி யின் இடத்தை நிரப்பக்கூடியவர்.

உங்கள் திரைப் பயணத்தில் எவ்வளவு தூரம் வரை பயணப்பட்டுள்ளீர்கள்?

ஏவி.எம். புரடக்சன்ஸ் தயாரித்த ‘அன்பே அன்பே’ படத்தின் மூலமாக டைரக்டராக அறிமுகமானேன். அதன்பிறகு ‘அந்த நாள் ஞாபகம்’ படத்தை இயக்கினேன். இப்போது பேட்டரி. இடைப்பட்ட காலத்தில் சன் டி.வி.யில் மூன்று சீரியல்களும், ஜெயா டி.வி.யில் ஒரு சீரியலும், ஜீ தமிழில் ஒரு சீரியலும் இயக்கினேன். பேட்டரி படம் நிச்சயம் என் பெயர் சொல்லும். படம் பார்த்த சில வி.ஐ.பி.க்கள், படம் முடிந்ததும், சூப்பரா பண்ணிருக்கீங்க எனப் பாராட்டினார்கள். 25க்கும் மேற்பட்ட சர்வதேசப் பட விழாக்களில் கலந்து கொள்ள, படத்தை அனுப்பி இருக்கிறோம். எப்படியும் விருதுகளை அள்ளிக் கொண்டு வரும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

தற்போதைய ஓ.டி.டி. தளம் தமிழ் சினிமாவிற்கு வரமா? சாபமா?

சாபம் என்றுதான் சொல்வேன். ஒரு படத்தை, தியேட்டரில் பார்ப்பதுபோல், 100 சதவிகித ரசிகர்கள் ஓ.டி.டி. தளத்தில் பார்ப்பார்களா என்பது சந்தேகம்தான். காரணம், சிட்டியில் வசிக்கும் ரசிகர்களிடம் வேண்டுமானால், அதற்குரிய வாய்ப்பு வசதிகள் இருக்கும். செங்கல்பட்டை தாண்டினால், எல்லோரி டமும் அந்த வசதி இருக்குமா என்பது சந்தேகம்தான். அத்துடன், ஒரு படத்தை குடும்பத்துடன் தியேட்டரில் உட்கார்ந்து பார்த்து மகிழ்வதற்கும், வீட்டில் டிராயிங் ரூமில் உட்கார்ந்து பார்ப்பதற்கும் வித்தியாசமிருக்கிறது.  சீரியலுக்கும், சினிமாவிற்கும் வித்தியாசமில்லாமல் போகிறது. ஒரு பிரமாண்டமான காட்சியையோ, வெளிநாட்டில் படம்பிடித்த ஒரு பாடலையோ ஸ்மால் ஸ்கிரீனில் பார்ப்பதற்கு அதை எதற்காகப் பிரம்மாண்டமாக எடுக்கவேண்டும் சொல்லுங்கள். கதையை மட்டும் இன்ட்ரஸ்டிங்காக அமைத்துக்கொண்டால் போதுமானதாயிற்றே. டைட்டானிக் படத்தையும், ஜூராஸிக் பார்க் படத்தை யும் ஸ்மால் ஸ்கிரீனில் பார்த்தால் என்ன எஃபெக்ட் கிடைத்துவிடும்? மீண்டும் சூழ்நிலை மாறும். நம்பிக்கை இருக்கிறது. அதற்குச் சமீபத்திய உதாரணம், டாக்டர் படமும் அரண்மனை -3 படமும்.

ஓ.டி.டி. தளம் படங்களில் ஆபாச வசனங்கள், காட்சிகள் வருகின்றன. அதைக் குடும்பத்துக் குள்ளே சிறுவர்களுடன் அமர்ந்து பார்க்க நேரிடு கிறதே?

நீங்க வெப்சீரியஸ் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். முக்கியமா அதுக்கு சென்ஸார் இல்லை. சென்ஸார் பண்ணினதுக்கப்புறமாதான் வெளியிடணும்னு ஒரு ரூல் கொண்டுவந்தா, அந்த நிலைமை மாறிடும். இன்னொரு விஷயம், சினிமாவ பாக்குற மாதிரி, யாரும் குடும்பத்தோட உட்கார்ந்து வெப்சீரியஸ பாக்குறது இல்ல. பெரும்பாலும் இளைஞர்கள்தான் பாக்குறாங்க. அதுவும் செல்ஃபோன்லயே பாத்துடுறாங்க. அவங்க, அப்படிப்பட்ட காட்சிய பார்த்தா மட்டும் நியாயமான்னு கேட்டா, நியாயமில்லதான். எடுக்குறவங்க, பாக்குற வங்க ரெண்டு பேருக்குமே பொறுப்பு வேணும். காசு பண்றதுதான் நோக் கம்னா, அதுக்கு வேற தொழில் பண்ணிட்டுப் போகலாமே. எதுக்காக வந்து இந்த மீடியாவ கெடுக்கணும்.

தற்போது திரில்லர், ஹாரர், பேய்ப் படங்கள் நிறைய வருகின்றனவே, கதைக்குப் பஞ்சம் வந்து விட்டதா?

இல்லை. கதைக்கு எப்போதும் பஞ்சம் இருந்ததில்லை. வித்தியாசமாக யோசிக்கிற ஆட்கள்தான் நம்மிடையே குறைவு என்பேன். வெற்றி பெற்ற ஒரு சிலரிடம், சினிமா அகப்பட்டுக்கொண்டிருக்கிறது. 100 படங்களுக்குமேல் டைரக்ட் பண்ணின பாலசந்தருக்கு என்றைக்காவது கதைப் பஞ்சம் வந்திருக்கிறதா? ஸ்ரீதருக்கும், பாரதிராஜாவிற்கும், மணிரத்னத்திற்கும், பாலு மகேந்திராவிற்கும், மகேந்திரனுக்கும், பாக்யராஜுக்கும் என்றைக்காவது கதைப் பஞ்சம் வந்திருக்கிறதா? இன்றைய டைரக்டர்களில் வெற்றிமாறனுக் குக் கதைப் பஞ்சம் வந்திருக்கிறதா? ஏன், பக்கத்து மாநிலமான கேரளாவுல என்னிக்காவது கதைப் பஞ்சம் வந்திருக்கிறதா? ஒவ்வொரு கதையும் ஒரு பிரச்சனைய சொல்லும். சமீபத்திய உதாரணம் – ஹோம். பேட்டரிகூட, அதுபோல ஒரு வித்தியாசமான கதைதான். ஸோ, கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தால், கதைப் பஞ்சம் என்பது வரவே வராது. புதியவர் களுக்கும் வழிவிட வேண்டும். எத்தனையோ இளைஞர்கள் நல்ல கதையுடன் கோடம்பாக்கத்தில் அலைந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், வெற்றி பெற்ற வர்கள் அவர்களைச் சந்திப்பதே இல்லை. இதுதான் பிரச்சனை.

அடுத்த உங்கள் படங்கள் என்ன?

சமூகப் பிரச்சனைகளை அடிப்படையாகக்கொண்ட மூன்று கதைகள் தயாராக எழுதி வைத்திருக்கிறேன். பேட்டரிக்குப் பிறகு பெரிய தயாரிப்பாளர், பெரிய ஹீரோ கிடைப்பார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. ஒருவேளை, செங்குட் டுவனேகூட, அந்தப் பெரிய ஹீரோவாக மாறுகிற சூழ்நிலையும் இருக்கிறது. அப்படியிருந்தால் அவரையே வைத்துக்கூட பண்ணுவேன். நிச்சயம் அது ஒரு யூஷ்வல் படமாக இருக்காது.

தற்போது கேமராமேன், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என்று அனை வரும் கதாநாயகனாக நடிக்க வருகிறார்களே. இதை எப்படிப் பார்க்கிறீர் கள்?

திறமை இருக்குற யாரும் இங்கு முன்னுக்கு வரலாம். ஆனால் ஒரு துறையை விட்டுவிட்டு, மற்றொரு துறைக்கு வரும்போது அதில் வெற்றி பெற்றுவிட வேண்டும். இல்லாவிட்டால், ஏற்கெனவே வகித்துவந்த துறை யில், அவர்களை யாரும் கூப்பிடமாட்டார்கள். என்னுடைய கருத்து என்பது, நாம் தேர்ந்தெடுத்த துறையில், முழு கவனம் செலுத்தி பிரகாசிப்பதே சாலச் சிறந்தது – இளையராஜா போல் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார்தான். அவர் அளவுக்கு இளையராஜாவும் பெயர் எடுத்தவர்தானே.

பெரிய படங்கள் வரும்போது சிறிய படங்களுக்கு தியேட்டர் கிடைப்ப தில்லையே?

பெரிய படம் என்பது ஓப்பனிங் பெருசா இருக்கும். மினிமம் கியாரண்டியும் இருக்கும். சின்ன படத்துக்கு அந்த ரெண்டும் இருக்காது. ஆனால், எந்தப் படமாக இருந்தாலும், அது நல்ல படமாக இருந்தாதான் ஓடும். சின்னப் படத்துக்கு ஓப்பனிங் இல்லாவிட்டாலும், தியேட்டருக்கு வந்த பிறகு, நல்ல படமாக இருக்கும்பட்சத்தில், மவுத் பப்ளிசிட்டி மூலமாகவே கூட்டம் கூட ஆரம்பித்துவிடும். அதுபோல், பெரிய படம் நல்லா இல்லாதபட்சத்தில், கூட்டம் குறைய ஆரம்பித்துவிடும். எல்லாம் ரசிகர்கள் கையில்தான் இருக் கிறது. அதைப் புரிந்துகொள்ளாத சில இடைப்பட்டவர்கள், சின்னப் படத்தின் வெளியீட்டில் ஆர்வம் காட்டுவதில்லை. சேதுவும், காதல் கொண்டேனும், பீட்சாவும், அட்டக்கத்தியும் சின்ன படமாக வெளிவந்து பெரிய படமாக ஜெயித்த படங்கள். பேட்டரியும் அப்படி ஜெயிக்கும்.

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...