மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியல் வெளியீடு..!
மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு தர வரிசை பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிடுகிறார்.
மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5 ஆம் தேதி நீட் தேர்வு நடத்தப்பட்டது. இந்த ஆண்டு நீட்தேர்வு வினாத்தாள் கசிவு மற்றும் முறை கேட்டால் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கால தாமதம் ஆகியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் இளநிலை 2024- 25 மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆகஸ்ட் 14ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் 2024-25-ம் ஆண்டிற்கான மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் ஜூலை 31 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது.
அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 15 சதவீதம் போக மீதமுள்ள 85 சதவீத இடங்களுக்கு மருத்துவ கலந்தாய்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வரும் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதற்கட்ட கலந்தாய்வு தொடங்குகிறது. தமிழ்நாடு மருத்துவ தேர்வு குழு மூலமாக நடத்தப்படும் கலந்தாய்விற்கான மெரிட் லிஸ்ட்டை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் இன்று வெளியிடுகிறார். 21 ஆம் தேதி ஆன்லைன் வழியாக பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கப்படும்.
22 மற்றும் 23 ஆம் தேதிகளில் 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு ஒதுக்கீடு மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், முன்னாள் ராணுவத்தினர், விளையாட்டு வீரர்கள் என 4 வகை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும்.சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நேரடியாக நடத்தப்படும். எந்த இடத்தில் நடக்கும் என்று விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.