தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நேற்றுடன் நிறைவு..!

 தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நேற்றுடன் நிறைவு..!

தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நேற்றுடன் நிறைவு பெற்றதால் தென் மாவட்ட ரயில்கள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் காரணமாக, விரைவு, மின்சார ரயில் சேவையில் கடந்த ஜூலை 23-ம் தேதி முதல் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி, பல மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.  ஆகஸ்ட் 14 வரை அறிவிக்கப்பட்ட இந்த மாற்றம் பின்னர் 18ம் தேதி (நேற்று) வரை நீட்டிக்கப்பட்டது.சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தின் பிரதான போக்குவரத்தான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டதால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

மின்சார ரயில்கள் ரத்து காரணமாக மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட்டாலும், பேருந்துகளில் கடும் கூட்ட நெரிசல் காணப்பட்டது. இதற்கிடையே, சிக்னல் மேம்பாடு, புதிய பாதை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் நேற்று பிற்பகல் முதல் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்க தொடங்கின. இந்த நிலையில் தாம்பரம் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் நிறைவு பெற்றதால் தென் மாவட்ட ரயில்கள் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளதாக என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளதாவது,

“சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தை சர்வதேச தரத்தில் மேம்படுத்தும் பணிகள் கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்று வந்தன. தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதல்
நடைமேடை இணைப்பு பாதைகள் மற்றும் ரயில்களின் சீரான இயக்கத்திற்கு தேவையான பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று முதல் தென் மாவட்ட ரயில்கள் அனைத்தும் வழக்கம் போல் இயக்கப்பட உள்ளன.

கடந்த சில தினங்களாக அந்தியோதயா போன்ற ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையும் காணப்பட்டது, இந்நிலையில் நேற்று பிற்பகலுடன் தாம்பரம் ரயில் நிலையத்தில் பணிகள் நிறைவுற்றதால் இன்று முதல் வழக்கம் போல் அனைத்து ரயில்களும் இயக்கப்படும். சென்னை எழும்பூர் – நெல்லை சந்திப்பு வந்தே பாரத் ரயில் கடந்த மூன்று தினங்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் இன்று முதல் வழக்கம் போல் இயக்கப்படும்.

அதேபோல் செந்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ், கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், நெல்லை எக்ஸ்பிரஸ், பொதிகை எக்ஸ்பிரஸ் ஆகிய அனைத்து ரயில்களும் வழக்கமான நேரத்தில் சென்னை எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.”

இவ்வாறு தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...