“கல்விமிகு நகராகும் கண்ணகி நகர்”

 “கல்விமிகு நகராகும் கண்ணகி நகர்”

இன்றைய காலை நிகழ்வு கண்ணகி நகரில் அய்யா இறையன்பு அவர்களின் தலைமையில், மருத்துவர் திருமதி.சாமுண்டிசங்கரி ஸ்ரூஸ்ட்டி மருத்துவமனை சேர்மன் அவர்களின் மருத்துவ முகாம், எனது தோழி திருமதி. சுபஸ்ஸ்ரீவனமாலி சைக்காலஜிஸ்ட் அவர்கள் மாணவர்களுடன் உளவியல் ரீதியான ஆலோசனைகளையும் நடத்தினார்கள்.

ஒருமுறை கண்ணகி நகர் வாருங்கள், அங்குள்ள பிள்ளைகளிடம் பேசுங்கள், சிறுவயதில் உங்களின் வறுமை, முயற்சி, உழைப்பு இப்போது நீங்கள் இருக்கும் நிலை என்று எடுத்துச் சொல்லுங்கள் அவர்களுக்கு உபயோகமாக இருக்கும் என்றார் அய்யா இறையன்பு அவர்கள். மனதிற்கு நிறைவானதொரு நிகழ்வு. இனிமேல் மாதம் ஒருமுறையாவது நேரம் ஒதுக்கி அந்த பிள்ளைகளுக்கு ஏதாவது உபயோகப்படும் வகையில் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யலாம் என்று இருக்கிறேன்.

முனைவர் இறையன்பு அவர்களின் மூலம் பயின்ற ,பயின்று கொண்டு இருக்கின்ற முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் அனைவருக்கும் தாங்கள் துணிகள் அளித்தது அவர்கள் எதிர்பார்க்காத ஒன்று. அய்யாவை சந்திக்க வருமாறு மட்டுமே மாணவர்களை அழைத்து இருந்தோம். வருவதாக தெரிவித்த 148 மாணவர்களுக்கு மட்டும் துணிகள் வழங்குவதற்கு முடிவு செய்து இருந்தோம். இன்று வரை மாணவர்களின் கல்விக்காகவும், தனித்திறன் மேம்பாட்டுக்காகவும், தேவைப்படும் அனைத்து உதவிகளையும் அய்யாவின் மூலம் அளித்து வருகிறோம்.

இன்று வரை எந்த பொருளையும் வழங்குவதாக தெரிவித்து யாரையும் அழைத்தது இல்லை. எந்த ஒரு எதிர்பார்ப்புடனும், எந்த செயலிலும் மாணவர்கள் ஈடுபடக்கூடாது என்று அய்யாவின் வழிகாட்டுதலின்படி கடந்த எட்டு ஆண்டுகளாக செயல்பட்டு கொண்டு வருகிறோம். தங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி,

23,704 குடியிருப்புகள் உள்ள கண்ணகி நகர் பகுதியில் ஒரு லட்சம் மக்கள் வசித்து வருகிறார்கள். அனைவரும் கல்வியிலும், பொருளாதாரத்திலும் மிகவும் பின் தங்கியவர்கள், தங்களைப் போன்றோரின் சந்திப்புகளும், ஆலோசனைகளும் தொடர்ந்து அவர்களுக்கு கிடைத்தால் கல்வியிலும் பொருளாதாரத்திலும் உயர்வதற்கு பேருதவியாக இருக்கும். தாங்கள் மாணவர்களை தொடர்ந்து சந்தித்து ஊக்கப்படுத்தி அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கல்விமிகு நகராக தன் முகத்தை மாற்றிக் கொள்ளும் கண்ணகி நகர். அதனை முன்னெடுத்து நடத்திவரும் திரு.இறையன்பு அவர்கள்.

2016ஆம் ஆண்டில் எங்கள் பகுதி மக்கள் ஏழ்மை நிலையில் உடல் உழைப்பினை நம்பி மட்டும் வாழ்வை நகர்த்தும் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக மாலை நேரங்களில் வகுப்புகள் எடுக்க நினைக்கிறோம் என்று திரு.இறையன்பு அவர்களிடம் உதவும்படி கேட்டோம். முதலில், பள்ளி ஒன்றில் மாலை வகுப்பிற்கு அனுமதி வாங்கி கொடுத்தார்கள். முதலில் 5 மாணவர்களுடன் ஆரம்பித்த வகுப்பு. முதல் வருடம் 70பேர். தற்போது 500 மாணவர்கள். “முதல்தலைமுறை கற்றல் மையம்” 228 பட்டதாரிகளை உருவாக்கி, அவர்களில் 54பேர் தாங்கள் கற்றதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுக்க எங்களுடன் மீண்டும் கை கோர்த்து இருக்கிறார்கள்.

வெறும் படிப்பு போதாது, யோகா, தற்காப்பு பயிற்சி, விளையாட்டு மற்றும் பண்பாட்டு பயிற்சி, கணிப்பொறி, வேலைவாய்ப்பு ஏற்படுத்திதரும் குடிசைத்தொழில் பயிற்சி, டெய்லரிங், ஆரி ஒர்க், என்று அத்தனையும் தேவை என்று ஏற்பாடு செய்து கொடுத்தார்.

எங்களுக்கு படிக்கும் சூழல் ஏற்படுத்துங்கள் என்றோம், இங்கே இருப்பவர்களைப் பட்டதாரியாக்கி, அவர்களே சொல்லிக் கொடுக்கும் சூழலை உருவாக்கிக் கொடுத்து இருக்கிறார் “அய்யா இறையன்பு” என்று சொல்கிறார் திரு.மாரிச்சாமி முதல்தலைமுறை கற்றல் மையம் நிறுவனர். மாரிச்சாமி திருமணம் செய்து கொள்ளாமல் தன் வாழ்வு முழுமையும் மக்களுக்காக அர்பணித்து இருக்கிறார். உண்மையான பீனிக்ஸ் மனிதர்.

இடமின்றி தவித்த காலம் போய் இன்று 12 சென்டர்களில் முதல்தலைமுறை பட்டதாரிகள் கல்வியும் வாழ்வையும் கற்கிறார்கள். உங்கள் பிள்ளைகள் உங்களைத்தான் மாடலாகப் பார்க்கிறார்கள், படிப்பினைத் தாண்டி உங்கள் சூழ்நிலையை மாற்றுங்கள் என்று கண்ணகி நகர் மக்களின் உளவியல் பிரச்சனைகளுக்கு ஆலோசனைகள் தர வாலண்டியர்கள் முன்வருகிறார்கள். 6 வயதில் இருந்து கல்லூரியில் சேரும்வரையில் அடிப்படை தேவைகள், படிப்பு என்று எல்லாவற்றிக்கும் பொறுப்பு ஏற்றுக் கொள்கிறோம், 6 ல் இருந்து 80வயது வரையில் மாணவமாணவிகள் எங்களிடம் இருக்கிறார்கள் இது அனைத்தையும் சாத்தியமாக்கி கொடுத்தவர் அய்யா இறையன்பு என்று நெகிழ்கிறார் மாரிச்சாமி.

இவர்களுக்கு பணம், பொருள், உதவி இதைத்தாண்டி, அவர்களின் மனஉறுதிக்கு தேவையான வார்த்தைகளைக் கூட நாம் தரலாம். விரைவில் தொடங்கப்போகும் அவர்களின் லைப்ரரிக்கு புத்தகங்கள் தரலாம் என்று இருக்கிறேன். நீங்களும் உங்களுக்கு இயன்றதை உதவலாம்.

திரு.மாரிச்சாமி

(முதல்தலைமுறை பட்டதாரிகள் அமைப்பின் நிறுவனர்)
அலைபேசி : எண்-9841304415

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...