இன்றைய முக்கிய நிகழ்வுகள் (21.11.2024)
உலக தொலைக்காட்சி நாள்
நவம்பர் 21,1996-ம் ஆண்டு நடைபெற்ற அனைத்துலக தொலைக்காட்சி கருத்தரங்கத்தின் பரிந்துரையின் பேரில் நவம்பர் 21-ம் தேதியை உலக தொலைக்காட்சி நாளாக அறிவித்தது ஐ.நா. சிறிய கதவுகள் வைத்த டி.விக்கள் 90-களில் படு ஃபேமஸ். தற்போது, அந்த கதவு சைஸிலேயே தொலைக்காட்சி வந்து நம் வீடுகளை அலங்கரித்து வருவது தனிக் கதை.
உலகத்தின் எந்த மூலையில் எது நடந்தாலும் அடுத்த நிமிடமே நம் கண் முன் கொண்டு வந்து காட்டுகிறது, கேட்க வைக்கிறது தொலைக்காட்சி பெட்டிகள்.
இன்று ஒவ்வொரு குடும்பத்திலும் அது ஒரு அங்கமாகிவிட்டது. அதிகரிக்க அதிகரிக்க மனிதனின் சுயம் தொலைந்து போவது ஒருபுறம்மென்றால், மனிதனுக்கு அனைத்தையும் கற்று தருவதும் தொலைக்காட்சிகளாகவே உள்ளன. ஒருகாலத்தில் அது பணக்காரர்கள் பயன்படுத்தும் கருவியாக இருந்தது, இன்று அது குப்பைகள் போல் குவிந்துக்கிடக்கின்றன. அரசாங்கமே தொலைக்காட்சியை இலவசமாக தந்த சூழலெல்லாம் தெரியும்.
இந்தியாவின் தொலைக்காட்சி கண்காணிப்பு அமைப்பான பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிசர்ச் கவுன்சிலின் (BARC) சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, சுமார் 210 மில்லியன் இந்திய குடும்பங்கள் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்திருக்கிறார்கள், 2018 இல் 197 மில்லியனாக இருந்த இந்த எண்ணிக்கை தற்போது 6.9% அதிகரித்துள்ளது. டிவி பார்ப்பவர்கள் 2018 இல் 836 மில்லியனில் இருந்தது, தற்போது 6.7% அதிகரித்து 892 மில்லியனாக உயர்ந்துள்ளது.
தற்போதைய தரவுகளின்படி, ஒரு நபர் ஒரு நாளைக்கு டிவி பார்ப்பதில் செலவிடும் 3 மணி 46 நிமிடங்களாக உள்ளது. இதில் 77 சதவீதம் பொழுதுபோக்கு மற்றும் திரைப்பட சேனல்கள் பார்க்கவே செலவிடுகிறார்கள். இந்தியாவில் 43 சதவீத தொலைக்காட்சி சேனல்கள் செய்தி சேனல்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பொதுமுடக்கத்தின் போது மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால் தொலைக்காட்சி பார்வையாளர்கள் அதிகரித்தும் அதனால் சீரியல்களுக்கு அடிமையானோர் எண்ணிக்கை எகிறியதும் கூட தனி எபிசோட்..
எனி வே ஹேப்பி டிவி டே
உலக ஹலோ தினம்
ஹலோ..-இது ஒரு வார்த்தை இல்லை உணர்வின் வெளிப்பாடு..
அன்பை சொல்ல, அபிமானத்தை வெளிப்படுத்த ,நம்மை அறிமுகப்படுத்திக்கொள்ள, ஆசையாய் பேச, நலம் அறிய ,இப்படி எத்தனையோ உணர்வு பரிமாறங்களுக்கான ஒரு மந்திரச்சொல்தான் ஹலோ ..!
இன்றைய நவீன உலகில் விஞ்ஞானமும், விவசாயமும், பொருளாதாரமும், மனிதனின் வாழ்க்கைத்தரத்தையும், வசதிகளையும் வேண்டுமானால் அதிகமாக்கி விட்டிருக்கலாம் ..ஆனால்,மனித கலாச்சாரத்தின் மிக முக்கிய அம்சமாக உள்ள ‘உறவுகளின்‘ உன்னதத்தை மறந்து மனிதன் எந்திரமாய் வாழும் வேதனை நிலை இன்று..!
ஒரு தட்டில் பிணைந்து அன்பொழுக சோறு தந்து பாசத்தை உணவில் ஊட்டி வளர்த்த அம்மா ..இன்று பாட்டியாக மாறிய பின், அதே வீட்டில், அதே குடும்பத்தில் நான்கு அடுப்பில் தனித்தனி சமையல் ..ஒரு பாயில் உறங்கிய ,ஒருதாய் வயிற்று பிள்ளைகள் இன்று ஒருவருக்கொருவர் பேசக்கூட நேரமின்றி , அடுத்த தேசத்து விரோதிகளாய் அண்ணன் தம்பிகளை பார்க்கும் கொடுமை ..!
இப்படி… நம் அன்பை, அபிமானத்தை, அக்கறையை, அடுத்தவரிடம் சொல்லாத இடங்களில் எல்லாம் இதே நிலைதான் ..இந்தநிலை மாற நான் என்ற அகங்காரம் இல்லாத அன்பின் வார்த்தையான ‘ஹலோ’ வை சொல்வோம் அனைவரிடமும்..
“ஹலோ” ஒரு ஆனந்தத்தின் ஆரம்பம்..
“ஹலோ” இது ஒரு மொழியின் சொல் அல்ல ..இது மற்றவர் கவனத்தை தன் மீது ஈர்க்கச் செய்யும் ஒரு வசிகர ஓசை ..
எகிப்து மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் 1973ம் ஆண்டு, தங்களுக்கு இடையே ஏற்பட்ட சண்டை முடிந்த தினத்தைத்தான், உலக ஹலோ தினமாக கொண்டாடினர். அதன் பிறகு தற்போது 180 நாடுகளில் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
இன்று கொண்டாடப்படும் உலக ஹலோ தினத்தில், குறைந்தது 10 பேரிடம் “ஹலோ’ சொல்வதன் மூலம், இத்தினத்தில் நீங்களும் பங்கேற்கலாம்
ஹலோ
உலக தத்துவ தினம்
தத்துவத்தின் முக்கியத்துவத்தை, இளைஞர்களிடம் கொண்டு சேர்த்து, பல பிரச்னைகளுக்கு தீர்வு காண ஐ.நா சார்பில் நவம்பர் மூன்றாவது வியாழன் (நவ. 21) உலக தத்துவ தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
மனித நாகரிகத்தை வழிமொழிவதில் தத்துவஞானிகளின் பங்கு அளப்பரியது. நீதி, நேர்மை, அமைதி, சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது. சாக்ரடீஸ் போன்ற அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை மாணவர்கள் படித்துணர்ந்து நடக்க வேண்டும்.இந்த தினத்தைக் கொண்டாடுவதன் மூலம் மனித சிந்தனை வளர்ச்சியில் தத்துவங்கள் வகிக்கும் நீடித்த பங்கினை நினைவு கூற முடியும்; நீதி, நேர்மை மற்றும் சுதந்திரத்தை தத்துவங்கள் மூலம் வழங்க முடியும் என யுனெஸ்கோ கருதுகிறது.இத்தகைய சிறப்பு வாய்ந்த தத்துவங்களால் மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முடியும் என்றும், தத்துவங்களே உலகை ஆள்கின்றன என்றும் கருதப்படுகிறது.
இந்நாளில் நம் ஆந்தை ரிப்போர்ட்டர் குழுவினருக்காக ஒரு குட்டிக் கதை
ஒரு பள்ளியில் ஆசிரியை தன் வகுப்பில் உள்ள மாணவர்கள் எல்லோருக்கும் ஆளுக்கொரு பலூன் கொடுத்தார். ஒரு மார்க்கர் பேனாவால், ஒவ்வொரு பலூனிலும் அவரவருடைய பெயரை எழுதச் சொன்னார். மாணவர்கள் அப்படியே செய்தார்கள். எல்லா பலூன்களையும் சேகரித்து, பள்ளி உதவியாளரை அழைத்து வேறோர் அறையில் கொண்டுபோய் போடச் சொன்னார் ஆசிரியை.
சிறிது நேரம் கழித்து ஆசிரியை சொன்னார்…“இப்போ எல்லாரும் பலூன் இருக்குற ரூமுக்குப் போங்க. உங்க பேரை எழுதிவெச்சீங்கள்ல… அந்த பலூனைப் பார்த்து எடுத்துட்டு வாங்க… அஞ்சு நிமிஷம்தான் டைம்.’’
மாணவர்கள் அந்த அறைக்கு ஓடினார்கள். ஆனால், அந்த 50 மாணவர்களில் ஒருவரால்கூட தங்களுடைய பலூனை 5 நிமிடத்துக்குள் கண்டுபிடிக்க முடியவில்லை. பதிலாக, கூச்சலும் குழப்பமும்தான் எழுந்தன. ஆசிரியை விசில் ஊத, எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.
“சரி… இப்போ மறுபடியும் அந்த ரூமுக்குப் போங்க. யாருக்கு எந்த பலூன் கிடைக்குதோ, அதுக்கு உரிய மாணவனைக் கூப்பிட்டுக் குடுங்க. 5 நிமிஷம் டைம்…’’ என்றார் ஆசிரியை.
மாணவர்கள் மறுபடியும் ஓடினார்கள். கையில் ஒரு பலூனை எடுத்ததும் ஒருவன், `சுரேஷ்…’ என்று கத்தினான். சுரேஷ் வந்து பலூனை வாங்கிக்கொண்டான். இன்னொருவன். `பிரகாஷ்’ என்றான். பிரகாஷ் வந்து வாங்கிக்கொண்டான். நான்கு நிமிடங்களுக்குள் அவரவர் பலூன் அவரவர் கைகளில் இருந்தது. எல்லோரும் வகுப்பறைக்குத் திரும்பினார்கள்.
ஆசிரியர் சொன்னார்… “இந்த பலூனைப் போலத்தான் நம்ம வாழ்க்கையிலயும் நடக்குது. நாம் ஒவ்வொருத்தரும் மகிழ்ச்சியை சுத்தி எங்கெங்கேயோ தேடுறோம். அது எங்கே இருக்குன்னுதான் யாருக்கும் தெரியறதில்லை. நம்முடைய மகிழ்ச்சி அடுத்தவரிடம்தான் இருக்குது. மத்தவங்களோட மகிழ்ச்சி நம்மகிட்ட இருக்குது. மத்தவங்களுக்கு நீங்க சந்தோஷத்தைக் குடுத்தீங்கன்னா, உங்களோட சந்தோஷமும் உங்களுக்கு மத்தவங்ககிட்டருந்து கிடைச்சே தீரும்.’’
சர்.சி.வி.இராமன் இவரின் 54வது நினைவு தினம்
உலகம் போற்றும் இந்திய அறிவியல் மேதை சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி திருச்சி மாவட்டத்திலுள்ள திருவானைக்காவலில் பிறந்தார்.
இவர் ஒளி ஒரு பொருளில் ஊருவிச் செல்லும் பொழுது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை கண்டுபிடித்தார்.
அந்த சிதறும் ஒளியின் அலைநீள மாற்றத்திற்கு இராமன் விளைவு என்று பெயர்.
இக்கண்டுபிடிப்புக்குத் தான் இவருக்கு 1930ல் இயற்பியல் துறைக்கான நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
இந்தியாவில் மட்டுமே படித்த ஒருவர் நோபல் பரிசு பெற்றது அதுவே முதல் முறை.
இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது 1954ஆம் ஆண்டில் இவருடைய வாழ்நாளிலேயே அளிக்கப்பட்டது.
பெரும் புகழ்பெற்ற இந்திய அறிவியல் அறிஞர் சர்.சி.வி.இராமன் தன்னுடைய 82வது வயதில் (1970) மறைந்தார்.
கல்வியாளர் மால்கம் ஆதிசேஷையா நினைவு தினம் இன்று.
கல்வியாளர், பொருளியல் மேதை,யுனெஸ்கோ இயக்குநர், பல்கலைக்கழகத் துணைவேந்தர், நாடாளுமன்ற உறுப்பினர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர்.
1971இல் தமிழ்நாட்டில் , தன் சொந்த செலவில் சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தை துவக்கி நடத்தியவர்.
மால்கம் ஆதிசேசையா தமிழ் நாட்டின் வேலுரில் பிறந்தார். தந்தையார் தத்துவவியல் பேராசிரியர். தாயார் வேலூர் நகராட்சி உறுப்பினராகவும் மகளிர் மன்ற உறுப்பினராகவும் இருந்தவர். ஆதிசேசையா வேலூர் ஊரிசுப் பள்ளியிலும் கல்லூரியிலும் பயின்றார் பின்னர் சென்னை இலயோலா கல்லூரியில் பொருளியல் கல்வியில் இளங்கலை(ஆனர்சு) பட்டம் பெற்றார். பின்னர் இங்கிலாந்து நாட்டில் கேம்பிரிச்சு கிங்க்ஸ் கல்லூரியில் எம்.ஏ . பட்டம் பெற்றார். 1937-1940 ஆண்டுகளில் இலண்டன் பொருளியல் பள்ளியில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார்.1948இல் யுனஸ்கோ என்னும் ஐக்கிய நாடுகள் அவையின் உறுப்பு அமைப்பில் சேர்ந்தார். யுனஸ்கோ பொது உதவி இயக்குநராக இருந்து 1970 இல் ஒய்வு பெற்றார்.
அக்காலத்தில் பதவியில் இருந்தபோது மூன்றாம் உலக நாடுகளின் பொருளியல் வளர்ச்சிக்குத் தொழில் நுட்ப உதவிகள் புரிந்தார். யுனஸ்கோ பதவியில் இருந்தபோது பழந் தமிழ் இலக்கியங்கள் மொழி பெயர்ப்புக்கும், ராஜாஜியின் கம்பராமாயண அயோத்தியா காண்டம் மொழி பெயர்ப்புக்கும், ஏ கே இராமனுஜம் என்பவரின் சங்க இலக்கிய மொழி பெயர்ப்புக்கும் உதவி செய்தார்.
யுனஸ்கோ அமைப்பிலிருந்து வெளிவந்த கூரியர் என்னும் இதழ் தமிழ் மொழியிலும் இந்தியிலும் வெளிவருவதற்கு இவருடைய முயற்சிகளே காரணம். 1966 இல் பாரீசு நகரில் நிகழ்ந்த உலகத் தமிழ் மாநாடு சிறப்புற நடைபெற யுனஸ்கோ மற்றும் பிரஞ்சு அரசு உதவிகளைப் பெற்றார்.
தமிழ் நாடு அரசின் திட்டக்குழுவில் இடம்பெற்று 1971-76 ஆண்டுகளில் துணைத் தலைவராகப் பணியாற்றினார். கல்வி பொருளியல் முதலான திட்டங்களில் அவருடைய பங்களிப்பு இருந்தது.
வறுமை நீங்கவும் செல்வம் பெருகவும் மக்கள் கல்வி அறிவு பெறுதல் மிக இன்றியமையாதது என வலியுறுத்தினார்.
தேசிய மாவீரர் வாரம் தொடக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த வீரமறவர்களை நினைவுகூரும் மாவீரர் வாரத்தை 1989ஆம் ஆண்டிலிருந்து கடைப்பிடித்து வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 21ஆம் திகதியிலிருந்து 27ஆம் திகதி வரை மாவீரர் வாரம் கடைப்பிடிக்கப்படும்.
நவம்பர் 26ஆம் திகதி தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் கொண்டாடப்படும். மறுநாள் நவம்பர் 27ஆம் திகதி, மாவீரர் நாள் உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினம் தமிழீழ தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் மாவீரர் தின உரை முடிவடையும் தருணம், மாலை 6.05 மணிக்கு ஆலய மணி ஒலிக்க விடப்பட்டு, மாவீரர்களுக்கான நினைவுப்பாடலுடன், ஈகச்சுடரேற்றல் நடைபெறும்.
இந்த மாவீரர் வாரத்தில் நாம் கேளிக்கை நிகழ்வுகளைத் தவிர்த்து மான மறவர்களை நினைவேந்தி நிற்போம் என ஒவ்வொருவரும் உறுதி எடுத்துக்கொள்வார்கள்.