தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்வு..!
தமிழ்நாட்டில் மின்கட்டணம் 4.83 சதவீதம் வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் என்பது ஜுலை 1 முதல் முன்தேதியிட்டு
செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி 4.83 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்தப்பட்டுள்ளது.
அதன்படி வீட்டு பயன்பாட்டுக்கான மின்கட்டணம் இதுவரை 400 யூனிட் மின்சாரத்துக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 காசுகள் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் இனி ரூ.4.80 காசுகள் வசூலிக்கப்பட உள்ளது. அதேபோல் 401 – 500 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.15 காசுகளில் இருந்து ரூ.6.45 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 501 முதல் 600 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.18 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகள் ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
601 – 800 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ9.20 காசுகளில் இருந்து ரூ.9.65 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 801 – 1000 யூனிட் வரையிலான மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 காசுகளில் இருந்து ரூ.10.70 காசுகள் ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் மின்கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.11.25 காசுகளில் இருந்து ரூ.11.80 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கு யுனிட் ஒன்றுக்கு ரூ.10.15 காசாகவும், ஒரு கிலோ வாட்டுக்கு ரூ.322 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மின்கட்டணம் ஜுலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. இதே போன்று புதிய மின் இணைப்பு வாங்குபவர்களுக்கும் கட்டணம் உயர்த்தபட்டுள்ளது.