திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம்..!

 திமுக மாணவர் அணி சார்பில் நீட் தேர்வை எதிர்த்து இன்று ஆர்ப்பாட்டம்..!

தேசிய தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி திமுக மாணவர் அணி சார்பில் இன்று சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

“சமூகநீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான “நீட்” தேர்வை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறியுள்ள மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக அரசின் ஆணைப்படி, தேசிய தேர்வு முகமை (National Testing Agency) மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட் (NEET), க்யூட் (CUET), நெட் (NET) உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணையேற்று, உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, திமுக மாணவர் அணிச் சார்பில், இன்று 03.07.2024 காலை 09.00 மணியளவில், சென்னை, வள்ளூவர் கோட்டம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது.

திமுக மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், எம்.எல்.ஏ., தலைமையில், சென்னை மேற்கு மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரக, மாணவர் அணியின் தலைவர் இரா.ராஜீவ்காந்தி, இணைச் செயலாளர்கள் பூவை சி.ஜெரால்டு, எஸ்.மோகன், துணைச் செயலாளர்கள் மன்னை த.சோழராஜன், சேலம் ரா.தமிழரசன், அதலை பி.செந்தில்குமார், கா.அமுதரசன், பி.எம்.ஆனந்த், கா.பொன்ராஜ், வி.ஜி.கோகுல், பூர்ணசங்கீதா சின்னமுத்து, ஜெ.வீரமணி ஆகியோர் முன்னிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள திமுக மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கல்லூரிகளில் உள்ள தமிழ் மாணவர் மன்ற (TSC) நிர்வாகிகள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொள்ள உள்ளனர்.

இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, எம்.பி. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, Ex. M.P., திமுக மருத்துவர் அணிச் செயலளர் மரு. என். எழிலன், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தோழமை மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்துக் கொண்டு, கண்டன உரையாற்ற உள்ளனர்”

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...