தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக இன்று 2ம் கட்ட கல்வி விருது விழா..!
தவெக சார்பாக இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று சென்னை திருவான்மியூரில் நடைபெறுகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 2024-ம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பாராட்ட உள்ளார். முதற்கட்டமாக கடந்த மாதம் 28-ம் தேதி சென்னை திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் 10 வகுப்பு மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
இதில் 800க்கும் மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர். தொடர்ந்து 10 மணி நேரம் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்தது. மாணவ மாணவிகளுக்கு வைரத் தோடு கம்மல் மோதிரம் பரிசாக வழங்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக நடிகர் விஜய்யின் ‘தளபதி விஜய் கல்வி விருது வழங்கும் விழா’ இன்று (ஜூலை 3) திருவான்மியூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இதில் தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், காரைக்கால், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், வேலூர், விழுப்புரம் ஆகிய 18 மாவட்ட மாணவ மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் புதுச்சேரி மாநில மாணவ, மாணவியருக்கு விருதுகள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளன. தவெக தலைவர் விஜய் மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார். இந்த விழா இன்று காலை 10 மணியளவில் தொடங்குகிறது.
இந்த விழாவில் கலந்துகொள்ள தவெக தலைவர் விஜய் நிகழ்விடத்திற்கு வருகை தந்தார். துபாயில் இருந்து 20க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். மொத்தம் சுமார் 100க்கும் மேற்பட்ட பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழங்கப்பட்ட பாஸை காண்பித்தால் மட்டுமே அவர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். விழாவில் கலந்துகொள்பவர்களுக்கு காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை சைவ உணவு வழங்கப்படுகிறது.