தலைவர்கள் பிறந்தநாளில் பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு உத்தரவு..!
முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளில் மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்புப் பொங்கலும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சத்துணவுத் திட்டம் அமலில் உள்ளது. அதேபோல 1 முதல் 5 வரை உள்ள ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தி உள்ளார். இந்நிலையில், தற்போது முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணை அறிவிப்பில் தெரிவித்திருப்பதாவது :
“இதற்கு முன்பாக முக்கிய தலைவர்களின் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் மட்டும் வழங்கப்பட்டு வந்தது. சத்துணவு வழங்கப்படாமல் இருந்தது. ஆனால் இனிமேல் மதிய உணவுடன் சேர்த்து, சர்க்கரை பொங்கலும் தனியாக வழங்கப்படும்.
சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடைந்து வரும் 1 ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முக்கிய பிரமுகர்களின் பிறந்த நாளன்று மதிய உணவுடன் இனிப்புப் பொங்கல் வழங்கிட அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது. இதற்கு ஆகும் கூடுதல் செலவினம் ரூ.4,27,19,530/-ஐ ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது”
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.