வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தகவல்..!
வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்து வந்தது. அதிலும் வெப்பஅலை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சுமார் 110 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவானது. ஈரோடு போன்ற மாவட்டங்களில் 112 டிகிரி அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வந்தது. சென்னையில் 105 டிகிரிக்கு உள்ளாகவே வெப்பநிலை பதிவாகி வந்தது. வெப்ப அலை கடுமையாக இருந்த காரணத்தினால் மக்கள் அனைவரும் கடுமையாக அவதி அடைந்தனர்.
இதனிடையே, கோடை மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிப்பு வெளியானது. அதேபோல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. சென்னையில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்து வந்தது. இதன் காரணமாக கோடை வெப்பம் தணிந்து சில பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ”வளிமண்டல கீழடுக்கு சுழற்சியானது நகர்ந்து குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும், இது மேலும் தீவிரமடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தமிழ்நாட்டை விட்டு நகர்ந்து புயலாக மாறும். கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.