மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்..!

 மீன் பிடி தடைக்காலம் இன்று முதல் அமல்..!

மீன்களின் இனப்பெருக்க காலம் தொடங்கிய நிலையில், வங்கக்கடலில் நள்ளிரவு முதல் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது.

வங்கக் கடலில் ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன்களை பிடித்தால், மீன்களின் முட்டை அழிக்கப்பட்டு மீன்களின் இனப்பெருக்கம் பாதிக்கப்படும். இதனால், மத்திய அரசு இந்த 61 நாட்களில் ஆழ்கடலில் மீனவர்கள் மீன்பிடிக்க தடை விதித்துள்ளது. இதனை அடுத்து நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

இதன் காரணமாக மீன்பிடிக்க சென்ற விசைப்படகுகள் அனைத்தும் நேற்று மாலை 6 மணியளவில் துறைமுகத்திற்கு கரை திரும்பினர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் நிறுத்தப்பட்டுள்ளதால் 50,000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. நாகப்பட்டினம்,
நாகூர், நம்பியார் நகர் உள்ளிட்ட துறைமுகத்தில் விசைப்படகுகள்
நிறுத்தப்பட்டுள்ளன.

இதேபோல் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள சுமார் 11 மீனவ கிராமத்தை சேர்ந்த 10,000த்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மேலும் மண்டபத்தூர் முதல் வடக்கு வாஞ்சூர் வரையிலான 11 மீனவ கிராமத்தில் உள்ள சுமார் 300 விசைப்படகுகள் காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.  மேலும், 5 குதிரைத்திறன் கீழே உள்ள எஞ்சின்களை பயன்படுத்தி நாட்டுப் படகில் மீன்பிடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மட்டும் பைபர் படகுகளில் குறைந்த தூரம் மட்டுமே சென்று மீன் பிடித்து கரை திரும்ப அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன்களின் விலை கடுமையாக உயரும் என
எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மீன்பிடி தடைகாலத்தில், பெரும்பாலான மீனவர்கள் தங்கள் படகு மற்றும் மீன்பிடி சாதனங்களை பழுதுபார்ப்பதில் தீவிரமாக செயல்படுவார்கள்.  மீன் பிடி தடை காலத்தால் வேலை இழந்துள்ள மீனவர்களுக்கான தடை கால நிவாரண தொகையை உடனடியாக தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...