தமிழ்நாட்டில் நாளை தொடங்குகிறது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு..!
தமிழ்நாட்டில் நாளை தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை, 9 லட்சத்து 38 ஆயிரம் பேர் எழுத உள்ள நிலையில், அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன்பின் 11 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 4 ஆம் தேதி தொடங்கி இன்றுடன் ( மார்ச் – 25) முடிவடைகிறது. இதையடுத்து, 12 ஆம் வகுப்பில் 7.72 லட்சம் மாணவ மாணவிகளும், 11 ஆம் வகுப்பில் 8.20 லட்சம் மாணவ மாணவிகளும் தேர்வு எழுதியுள்ளனர்.
இந்நிலையில், நாளை ( மார்ச் – 26 ) பத்தாம் வகுப்பு பொது தேர்வு தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 12,616 பள்ளிகளை சேர்ந்த 9.38 லட்சம் மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதில் தனித் தேர்வர்கள் 28,000 பேரும், 235 சிறைக் கைதிகளும் தேர்வு எழுத உள்ளனர்.
பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பு பணியில் 48,700 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களை பிடிக்க 4,591 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகள் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு அறைக்குள் கைப்பேசி எடுத்து வருவதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும், ஹால்டிக்கெட்டில் உள்ள விதிகளை பின்பற்றி மாணவர்கள் நடக்க வேண்டும் என்றும் தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தேர்வில் ஆள்மாறாட்டம், பார்த்து எழுதுதல் உள்ளிட்ட ஒழுங்கீன செயல்களில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வெழுதத் தடைவிதிக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்கப்படுத்த பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
தேர்வு முடிந்ததும் ஏப்ரல் 12ம் முதல் 22ம் தேதி வரை விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெற உள்ளன. இதற்காக தமிழ்நாடு முழுவதும் 88 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே மாதம் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.