85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் அஞ்சல் வழியில் வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு..!
சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மக்களவைத் தேர்தலில் அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்கு படிவம் 12 Dயை பூர்த்தி செய்து வழங்க இன்றுதான் கடைசி தேதி என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு “இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, நடைபெறவுள்ள மக்களவைப் பொதுத்தேர்தல்-2024னை முன்னிட்டு, சென்னை மாவட்டத்தில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அஞ்சல் வழியில் வாக்களிப்பதற்குரிய நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 3 மக்களவைத் தொகுதிகளில் உள்ளடங்கிய 16 சட்டமன்றத் தொகுதிகளிலுள்ள மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் பொருட்டு, அஞ்சல் வழியில் வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் விருப்பத்தை பெறுவதற்கு வசதியாக அவர்களது இல்லங்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் படிவம் 12D மற்றும் வாக்காளர் பட்டியலுடன் நேரில் வருகை தருவார்கள்.
அவ்வாறு தங்களது இல்லங்களுக்கு வருகை தரும் போது உரிய படிவத்தில் தங்களது விருப்பத்தை படித்து பார்த்தோ அல்லது படிக்க கேட்டோ, ஆதாரங்கள் ஏதும் கோரும் பட்சத்தில் அதன் நகலை சமர்ப்பித்து, ஒப்பம் செய்து தங்களது ஒத்துழைப்பை மாவட்ட நிர்வாகத்துக்கு வழங்கலாம்” என்று அவர் கூறியுள்ளார்.