சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியல் ரத்து..!
சிவில் நீதிபதிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக இருந்த 245 சிவில் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வுகளை நடத்திய, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த 16ஆம் தேதி முடிவுகளை வெளியிட்டது. இதில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் அமர்வு, உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி, இட ஒதுக்கீட்டின் கீழ் அதிக மதிப்பெண் பெற்றவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக சிவில் தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்க்க உத்தரவிட்டது. திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிடவும் டிஎன்பிஎஸ்சிக்கு ஆணையிட்டது.