சென்னையில் மொழிப்போர் தியாகிகள் நினைவு நாள்
தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்தி திணிப்பை எதிர்த்து, தமிழ் மொழியைக் காக்க உயிர் நீத்த தியாகிகளின் நினைவாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.
இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் நடந்த 1965-ம் ஆண்டு மாபெரும் போராட்டம் வெடித்தது. எத்தனையோ உயிர்களை பலி கொண்ட அந்த போராட்டம், வரலாற்று அரசியலில் மிகுந்த முக்கியத்துவம் பெற்று திகழ்கிறது.. குறிப்பாக, தமிழகத்தில் காங்கிரஸை வீழ்த்தி, திமுக ஆட்சியை பிடிக்க இந்த போராட்டம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
கடந்த 1965 ஜனவரி 25ம் தேதி திமுக சார்பில் துக்க நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது.. அன்றைய தினம் நடைபெற்ற போராட்டம் உச்சக்கட்ட தீவிரத்தையும் எட்டியது.. பின்னர், அடுத்தடுத்த நாட்களில் போராளிகள், மொழிக்காக தீக்குளித்து கருகினர்.. இந்த போராட்டத்தில் உயிர்நீத்த தியாகிகளுக்கு வருடந்தோறும் வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது. ஜனவரி 25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளாகவும் கடைபிடிக்கப்படுகிறது.
எனவே, உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு, வருடந்தோறும் ஜனவரி 25ம் தேதி திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம். அந்தவகையில் இன்றும் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.
அந்தவகையில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று திமுக சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. சென்னையில் நடைபெறும் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இதுதொடர்பாக திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அந்த அறிக்கையில்: உலக வரலாற்றில் நாட்டின் விடுதலைக்காகவும், இனப் போராட்டத்துக்காகவும் தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பலர். ஆனால் ஒரு மொழிக்காக தங்களது வாழ்க்கையையே சுருக்கி கொண்டு கருகியவர்கள் தமிழக மக்கள் மட்டுமே.
அந்தவகையில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த நூற்றுக்கணக்கானோரின் தீரத்தை நினைவுகூரும் வகையில் ஜன.25-ம் தேதி மொழிப்போர் தியாகிகள் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுக மாணவர் அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.
சென்னை அண்ணாநகரில் நடைபெறும் மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார். திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவடியிலும், டி.ஆர்.பாலு எம்.பி., மன்னார்குடியிலும், அமைச்சர் கே.என்.நேரு திருச்சியிலும் பேசுகின்றனர்.
தென்காசியில் கனிமொழி கருணாநிதி எம்.பி, உரையாற்றுகிறார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தா.மோ.அன்பரசன் ஆகியோர் இணைந்து காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் பகுதியில் நடைபெறும் வீரவணக்க பொதுக்கூட்டங்களில் பங்கேற்க உள்ளனர். திருச்சி சிவா எம்.பி., கும்மிடிபூண்டியிலும், ஆர்.எஸ்.பாரதி உளுந்தூர் பேட்டையிலும், அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கோவையிலும் உரையாற்றுகின்றனர்.
இதேபோல தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கூட்டங்களில் திமுகவின் முக்கிய தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.