தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

 தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமியின் வேலுக்கு தீர்த்தவாரி நடைபெற்றது. மேள தாளம் முழங்க கடலுக்கு கொண்டு வரப்பட்ட முருகப்பெருமானின் வேலுக்கு கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருச்செந்தூருக்கு வரும் பக்தர்கள் சர்ப்பகாவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

தைப்பூசம் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரணிய சுவாமி கோயிலுக்கு சர்ப்ப காவடி எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவித்துள்ளார். முருகன் கோவிலுக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் காவடியை சுமந்து கொண்டு ஆடிப்பாடி மகிழ்ந்து இறுதியில் கோவிலை அடையும்போது மனதில் உள்ள பாரங்கள் குறைந்து புத்துணர்ச்சி பெறுகின்றனர்.

முருகப்பெருமானுக்கு பக்தர்கள் வேண்டிக்கொண்டு பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, அக்னி காவடி, சந்தனக் காவடி, சர்க்கரைக் காவடி, சர்ப்பகாவடி, மச்சக்காவடி, இளநீர் காவடி, வேல் காவடி, கரும்புத் தூளி காவடி என பல காவடிகள் சுமக்கின்றனர். இதில் சர்ப்பக்காவடி சிறப்பானது. நல்ல பாம்பினைக் காவடியில் கட்டிக்கொண்டு வந்து காணிக்கை செலுத்துவது சர்ப்பக் காவடியாகும்.

சர்ப்பக்காவடி எடுப்பவர் கடும் விரதம் இருப்பார்கள். சர்ப்பக் காவடி எடுப்பவர்கள் 41 நாள் விரதம் இருப்பார்கள். அவர்கள் கனவில் ஒரு குறிப்பிட்ட பாம்பை காட்டில் எந்த இடத்தில் இருக்கிறது என்று கனவு வருமாம். அவர்களும் அந்தக் காட்டில் போய் ஒரு குறிப்பிட்ட அந்த இன பாம்பை போய் பிடித்து அதை ஒரு பெட்டியில் வைத்து உப்பிட்டு கொண்டு வந்து, அதைக் காவடியாக சுமந்து வந்து திருச்செந்தூர் கடற்கரையில் விடுவார்கள்.

அது வேறு எங்கும் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் நேரே கடலின் உட் பகுதிக்கு சென்று விடும். இந்த சர்ப்பக் காவடி முன்னாட்களில் ஒவ்வொரு ஆண்டும் நிறையவே வரும். இப்போது எப்போதாவது அபூர்வமாகத்தான் வருகிறது. இப்படி சர்ப்பக் காவடி எடுப்பது அவரவர்களின் நம்பிக்கை. இந்த நிலையில் சர்ப்பக்காவடி எடுக்க காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்துவர தடை உள்ளது. ஆனால் சிலர் அதைப் பொருட்படுத்தாமல் பாம்புகளுடன் வருவதாகத் தகவல் வருகிறது. பாம்புகளை எடுத்துவர அனுமதி இல்லை. அதை எடுத்து வருபவர்கள் சட்ட நடவடிக்கைக்கு உள்ளாவார்கள்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே தைப்பூசத்தை முன்னிட்டு சுவாமி தரிசனம் செய்வதற்காக திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். சாலையில் நடந்து வரும் பக்தர்கள் எப்போதும் வலது புறமாக நடந்து செல்ல வேண்டும். மேலும் கோயிலுக்குள் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் அச்சிடப்பட்ட உடைகளை அணிந்து வரக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவுகளை மீறினால் அந்த நபர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தற்போது கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் சுமார் 600 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தென்காசி மாவட்டம் கடையம் என்ற பகுதி அருகே அமைந்துள்ள தோரணமலை முருகன் கோவிலில் இன்றைய தினம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று முழக்கமிட்டு வழிபட்டனர்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...