கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் | சதீஸ்
சென்னை கிளாம்பாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னை, பிராட்வேயில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காக, கோயம்பேட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகரித்ததால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் 40 ஏக்கர் பரப்பளவில் 400 கோடி ரூபாய் செலவில் மிகப்பெரிய பேருந்து முனையம் கட்டப்பட்டது.
குறிப்பாக, போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. அனைத்து பணிகளும் நிறைவு பெற்றதை அடுத்து எப்போது இந்த பேருந்து நிலையம் திறக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்து வந்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, 100 அரசுப் பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள் அனுப்பி ஊரப்பாக்கம் வழியாக வெளியே வரும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. ஆகையால் வரும் பொங்கல் தினத்தன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என கூறப்பட்டு வந்த நிலையில் புத்தாண்டுக்கு முன்னதாகவே அதாவது டிசம்பர் 30 திறக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.