அரபிக் கடலில் உருவாகும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! | சதீஸ்
அடுத்த 24 மணி நேரத்தில் அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக உள்ளது.
இதனிடையே கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டிசம்பர் 30ஆம் தேதி (இன்று) மற்றும் டிசம்பர் 31 (நாளை) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 1 மற்றும் 2ஆம் தேதிகளில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலும், ஜனவரி 3ஆம் தேதி தென் தமிழ்நாடு மற்றும் வட தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அப்பகுதிகளில் மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி தொடங்கியது முதல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அதோடு, வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் டிசம்பர் 30ஆம் தேதி வரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வலுவான வடகிழக்கு காற்று மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் நிலவுவதாகவும் வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.
அதன்படி, டிசம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது. மிக்ஜாம் புயல் சென்னையை ஒட்டி நிலைகொண்டிருந்ததால் மழை கொட்டி வெள்ளம் ஏற்பட்டது. இதேபோல, டிசம்பர் 17,18ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் மழை சாறெடுத்தது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் கடும் வெள்ளம் ஏற்பட்டு, லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.