தென்மாவட்டங்களில் நிவாரண உதவி வழங்கிட நேரில் வரவிருக்கும் நடிகர் விஜய்..! | சதீஸ்
தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களை கடந்த 17, 18 தேதிகளில் கனமழை புரட்டிப்போட்டது. கனமழை மற்றும் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க இருக்கிறார்.
முதல் கட்டமாக தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்க இருக்கிறார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி நகரில் இருந்து 400க்கும் மேற்பட்டோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்துச்சென்றனர். தூத்துக்குடியில் இருந்து 27 வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்ட மக்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
வாழ்வாதாரத்தை இழந்த பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் களத்தில் நின்று பல உதவிகளை செய்து வந்தாலும், கூடுதலாக ஏராளமான வீட்டு உபயோக பொருட்களை விஜய் வழங்க இருக்கிறார். நெல்லை மாவட்டம் கே டி சி நகரில் உள்ள மாதா மஹாலில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் விஜய் வருகை தருகிறார். இந்த நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் சார்பில், விஜய் மக்கள் இயக்க தென் மண்டல நிர்வாகிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.’
ஏற்கனவே விஜயின் அரசியல் நகர்வுகள் தமிழ்நாடு அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், மழை வெள்ளம் பாதித்த பகுதியில் உள்ள மக்களை விஜய் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். மருத்துவர், வழக்கறிஞர்கள்,மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்து வந்த நடிகர் விஜய் , தற்போது பிரதான அரசியல் நிகழ்ச்சிகளிலும் அவரின் தலைமை நிர்வாகிகளை அனுப்பி பங்கேற்க வைக்கிறார். இந்த நிலையில் தூத்துக்குடி, திருநெல்வேலியில் கனமழை வெள்ளத்தால் அதிக பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அந்த மாவட்ட மக்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க இருக்கிறார். விஜயின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என்பதே தற்போதைய பிரதான கேள்வியாக இருக்கிறது.