தண்டையார்பேட்டை ஐஓசியில் இந்தியன் ஆயில் பாய்லர் டேங்க் வெடித்து சிதறியது..! | சதீஸ்
சென்னை தண்டையார்பேட்டையில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ஆலையில் பாய்லர் டேங்க் வெடித்த விபத்து குறித்து புதிய தகவல்கள் கிடைத்தன.
தண்டையார்பேட்டை ஐஓசி நிறுவனத்தில் 5 எத்தனால் டேங்குகள் வைத்து சேமிக்கப்பட்டு வருகிறது. இவற்றை பெட்ரோல் பயன்பாட்டுக்காக சேமித்து வைத்திருக்கிறார்கள்.
இந்த அலுவலகத்தில் 500- க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்களும் நிரந்தர தொழிலாளர்களும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிறுவனத்தில் இருந்து பெட்ரோலியம். எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் டேங்கர் லாரிகள் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த நிறுவனத்தில் திடீரென எண்ணெய் கசிவு ஏற்பட்டு பாய்லர் பயங்கர சப்தத்துடன் வெடித்தது. இதையடுத்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினர். தகவலறிந்த தீயணைப்புத் துறை, போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரவணா, பெருமாள் ஆகியோர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பெருமாள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சரவணாவுக்கு மட்டும் சிகிச்சை தொடர்கிறது. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. அதாவது இந்த ஆலையில் 5 எத்தனால் சேமிப்பு கிடங்குகள் உள்ளன. அவை தலா 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்டவை.
அவற்றில் 2 டேங்குகள் வெடித்து சிதறின. எத்தனாலை சேமிக்கும் குழாய் சேதம் ஏற்பட்டதை அடுத்து அதை சில தொழிலாளர்கள் வெல்டிங் செய்ய சென்றனர். அவர்கள் அங்கிருந்த வால்வை மூடிவிட்டு வெல்டிங் செய்தனர். அப்போது சூடு தாங்காமல் எத்தனால் தீப்பிடித்து எரிந்தது.
பொதுவாக இது போல் எளிதில் தீப்பிடிக்கும் எத்தனால் உள்ளிட்டவைகளின் குழாய்களை வெல்டிங் செய்யும் போது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதாவது வெல்டிங் செய்த குழாயை குளிர்ச்சிபடுத்தி விட்டு பிறகுதான் வெல்டிங் செய்திருக்க வேண்டும் . எனவே வெல்டிங் செய்யும் போது எந்தவித பாதுகாப்பு நடவடிக்கைகளும் பின்பற்றப்படவில்லை.