தொழிற்சாலையை மூட வேண்டும்” – எண்ணூர் மக்கள் போராட்டம்..! | சதீஸ்
அமோனியா வாயு கசிவால் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி எண்ணூர் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று இரவு சென்னை எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கடலுக்கும் கோரமண்டல் தொழிற்சாலைக்கும் இடையேயான குழாய் வழியாக கடல் பகுதியில் அமோனியம் கேஸ் கசிவு ஏற்பட்டது. இதனால் பெரியகுப்பம் ,சின்ன குப்பம் தாளங்குப்பம் ஆகிய பகுதிகளில் உள்ள மக்களுக்கு மூச்சுத்திணறல், கண்ணெரிச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் உள்ள 30க்கும் மேற்பட்ட மக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து இந்த பகுதிகளில் சென்னை மாநகராட்சியின் சார்பில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு மருத்துவர்கள் மூலம் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு கோரமண்டல் தொழிற்சாலையை தற்காலிகமாக மூட உத்தரவிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து கோரமண்டல் தொழிற்சாலையினை நிரந்தரமாக மூட வேண்டும் என காலை முதல் சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெறும் இடத்தில் மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் பேச்சுவார்த்தை நடத்தியும், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாத நிலையில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது.