பூத்திருக்கும் விழியெடுத்து – 15 | முகில் தினகரன்
அத்தியாயம் –15
“நேத்ரா ஷாப்பிங் மால்”
கேட்டில் நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் விசாரித்தான் அசோக்.
“ரெஸ்டாரெண்ட்.. எந்தப்பக்கம்?”
“இப்படியே நேராப் போ ரைட்ல திரும்புங்க சார்…”
நிதானமாய் நடந்தான் அசோக். நடையில் லேசாய்த் துள்ளல் முளைத்திருந்தது. “கிட்டத்தட்ட இருபத்தி நான்கு… இருபத்தி ஐந்து வருஷத்துக்கு பின்னாடி வைசாலி கூடப் பேசப் போறேன்!… எப்படி ஆரம்பிக்கலாம்?… “என்ன வைசு?”ன்னு தொடங்கலாமா?”… “ம்ஹும்…வேண்டாம்… “நல்லாயிருக்கியா வைசாலி?”ன்னு ஆரம்பிக்கலாம்!… யெஸ் அதுதான் கரெக்ட்…”
குறுக்கே வந்த ஒரு இளைஞன், “சார்.. தியேட்டர் எந்த ஃப்ளோர் சார்?” கேட்டான்.
உதட்டைப் பிதுக்கி, “தெரியாதுப்பா… நான் ஊருக்குப் புதுசு” என்றான் அசோக்.
முனகிக் கொண்டே நகர்ந்தான் அந்த இளைஞன்.
ரெஸ்டாரெண்டை அடைந்ததும், ஐந்தாம் எண் மேஜையைத் தேடினான். அதில் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் இவனுக்கு முதுகைக் காட்டியபடி அமர்ந்திருக்க, “என்னது… ஐந்தாம் நெம்பர் டேபிள்ல வேற ஒரு ஜோடி உட்கார்ந்திருக்கு? தனக்குத்தானே சொல்லிக் கொண்டு அதனருகே சென்று அவர்களுக்கு எதிரே நின்றவனைக் குழப்பத்திலாழ்த்தும் விதமாய், வைசாலியும் சீஃப் ஜட்ஜ் சிவராமகிருஷ்ணனும் அமர்ந்திருந்தனர்.
“உட்காருங்க மிஸ்டர் அசோக்” சிவராமகிருஷ்ணன் சொல்ல,
தயங்கித் தயங்கி அமர்ந்தான் அசோக்.
“ஆச்சரியமாயிருக்கு… “என்னடா இவர் இங்க வந்திருக்கார்?”ன்னு அப்படித்தானே மிஸ்டர் அசோக்?”
தலையை மேலும் கீழும் ஆட்டினான்.
“நேத்திக்கு உங்க கிட்ட நான் கேட்டேன் “உங்களுக்கும் இந்த வைசாலிக்கும் என்ன உறவு?”ன்னு இப்ப நான் சொல்றேன் எனக்கும் இந்த வைசாலிக்கும் என்ன உறவு?ன்னு…”
அமைதியாய் அவர் முகத்தைப் பார்த்தான் அசோக்.
“நாங்க ரெண்டு பேரும் கடந்த பதினாறு வருஷமா… ஒண்ணா வாழ்ந்திட்டிருக்கோம்!… அதாவது “லிவிங் டுகெதர்” முறைல…”
அசோக்கின் இருதயப் பகுதியில் அவனுக்கு மட்டுமே கேட்கும் விதத்தில் சின்னதாய் ஒரு வெடிச் சத்தம்.
அவன் முகம் அவனையும் மீறி சோக முலாம் பூசிக் கொள்ள, தலைஅயைக் குனிந்து கொண்டான்.
“பொதுவா “லிவிங் டுகெதர்” முறைன்னா… அவங்க கிட்டத்தட்ட கணவன் மனைவி போலத்தான் வாழுவாங்க!… அந்த வாழ்க்கை திருப்தியாயிருந்த ஒரு காலகட்டத்துக்குப் பின்னாடி கல்யாணம் பண்ணிக்குவாங்க!…ஆனா நாங்க ரெண்டு அப்படி வாழலை!… “லிவிங் டுகெதர்”க்கு பதிலாய் ”ஸ்டேயிங் டுகெதர்”ன்னு தான் வாழ்ந்தோம்!…”
“ஆர்டர் ப்ளீஸ்” அருகில் வந்து நின்ற டை கட்டிய இளைஞன் கேட்க, அசோக்கைப் பார்த்தார் சிவராமகிருஷ்ணன்.
வாயைத் திறந்து பதில் சொல்லாமல் தோள்களைக் குலுக்கினான் அசோக்.
“ஓ.கே… மூணு வெஜிடபிள் சூப் குடுங்க”
பேரர் நகர்ந்ததும், “பெரிய பணக்காரக் குடும்பத்தின் வாரிசாய் இருந்தும்… தாய் தந்தையரை இழந்து நின்ற வைசாலிக்கு உதவ உறவினர்கள் யாரும் முன் வரலை!… ஆனா கல்யாணம் செய்து கொள்ளாமல் தனி ஆளாய் இருந்தவளின் சொத்தை அபகரிக்க மட்டும் நாலாத்திசையிலும் முயற்சி பண்ணினாங்க!… அவங்க ஒரு பக்கம் அட்டாக் பண்ணிட்டிருந்த அதே நேரத்துல இவங்க அப்பாவோட பிசினஸ் பார்ட்னர்ஸ் “பிசினஸ்ல பெருத்த நஷ்டம்”ன்னு பொய்க்கணக்கு காட்டி… ஒட்டு மொத்தமா சுருட்டிட்டாங்க!… பிசினஸுக்காக இவங்க அப்பா செக்யூரிட்டியா வெச்சிருந்த வீட்டை பேங்க்காரங்க ஜப்தி செய்யும்படி பண்ணிட்டானுக…! ஒரே இரவில் வீடு… வாசல்… சொத்து… சுகம்… எல்லாத்தையும் இழந்து தெருவுக்கு வந்திட்டா இந்தப் பெண்”
கண்களில் பாசத்துடன் வைசாலியைப் பார்த்தான் அசோக்.
“சம்பாதிச்சாத்தான் சாப்பிடவே முடியும்ங்கற நிலைமைலதான் விசாகா காலேஜ்ல புரபஸரா ஜாய்ன் பண்ணினா… என்னதான் லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருந்தாலும்… மேரேஜ் ஆகாம.. தனியா வாழுற பொண்ணுக்கு ஏற்படும் சோதனைகள் அத்தனையும் இவளுக்கு ஏற்பட்டிச்சு… அப்பத்தான் நான் இவங்களை சந்திச்சேன்!… அப்ப நானும் அதே விசாகா காலேஜ்லதான் வேலை பார்த்திட்டிருந்தேன்!… இப்ப ரிஸைன் பண்ணிட்டு வேற காலேஜுக்குப் போயிட்டேன்!…”
“சார்… சூப்” சொல்லி விட்டு பேரர் மூன்று சூப் கோப்பைகளை வைத்து விட்டு நகர,
“காலேஜ்ல ஒரு நாள்… ரொம்ப சோகமா இருந்தாங்க… நான் கேட்டேன்… அப்பத்தான் என்கிட்ட தன்னோட கதையைச் சொன்னாங்க!… மனசுல ஒருத்தனை சுமந்துக்கிட்டு… இன்னொருத்தரைக் கல்யாணம் பண்ணிக்க முடியாத இவங்களுக்கு நான்தான் இந்த “ஸ்டேயிங் டுகெதர்” ஐடியா குடுத்தேன்!.. ஆரம்பத்துல மறுத்தாங்க!… “அம்மா…நாம ஒரு பாதுகாப்புக்காகத்தான் சேர்ந்து இருக்கப் போறோம்… ஊர் ஆயிரம் சொன்னாலும்… நம்ம மனசுக்கு நாம ஒழுக்கமா இருந்தால் போதும்!ன்னு எடுத்துச் சொன்ன பிறகு ஒத்துக்கிட்டாங்க!… அதுக்கப்புறம் பதினாறு வருஷம் ஒண்ணாத்தான் ஒரே வீட்டில்தான் இருக்கோம்!.. குறிப்பா… கண்ணியமா இருக்கோம்”
ஒரு சிறிய அமைதிக்குப் பின், அசோக்கின் தாடையைத் தொட்டுத் தூக்கிய சிவராமகிருஷ்ணன், “த பாருங்க அசோக்… பதினாறு வருஷமா நான் அவளுக்குக் காவலாளியாகவும், அவள் எனக்கு காவலாளியாகவும்தான் வாழ்ந்திருக்கோம்!… வாழ்க்கைல தொடர்ந்து வாங்கிய அடிகள் அவலை மொத்தமா மாத்தியிருக்கு… “நான்தான் ஜெயிப்பேன்… நான் மட்டும்தான் ஜெயிப்பேன்!.. என்னை மீறி எவனும் வர முடியாது… நான் எதுக்கும் பயப்பட மாட்டேன்!… எவனுக்கும் கீழ்ப்படிய மாட்டேன்!”ன்னு இருந்த வைசாலி போயிட்டா… இப்ப இங்க இருக்கறது பண்பட்ட…. பக்குவப்பட்ட வைசாலி!… உனக்காக காத்திருந்தவளை… உன் கிட்டேயே ஒப்படைக்க நான் தயாராயிருக்கேன்!… ஏத்துக்க நீ தயாரா? நீங்க… உங்க முடிவை இப்பவே சொல்லணும்னு அவசியமில்லை,…. டேக் யுவர் ஓன் டைம்!… நல்லா யோசிச்சு… ஒரு நல்ல முடிவைச் சொல்லுங்க” என்றவர் ஆறிக் கொண்டிருந்த சூப்பைக் கை காட்ட, மூவரும் எடுத்துப் பருகினர்.
“சார்… ஒரு அஞ்சு நிமிஷம் நான் வைசாலி கிட்ட தனியா பேசணும்” அசோக் சொன்ன மறு விநாடியே எழுந்த சிவராமகிருஷ்ணன், “வெரி குட்…” என்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
-( மலரும்… )
முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16