கரை புரண்டோடுதே கனா – 15 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 15 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 15

 “பெரிதாய் உரிமை, உடமை என்று பேசுகிறாயாமே..? அப்படி உனக்கு இங்கே என்ன உரிமை இருக்கிறது..?” ஆத்திரத்துடன் தன் முன் வந்து நின்று கேட்ட இளைஞனை முகம் சுளித்து பார்த்தாள் ஆராத்யா..

யாரிவன்..? பரிட்சய ஜாடை தெரிகிறது.. ஏதோ ஓர் உறவுக்காரன்தான், முகம் சொல்கிறது.. இவ்வளவு உரிமையோடு பேசுகிறானென்றால்..

“அரவிந்த் தானே..? சதுரகிரி மாமாவோட இரண்டாவது பையன்.. பெங்களூரிலிருந்து எப்போது வந்தாய்..?”

“என்னை எப்படிக் கண்டுபிடித்தாய்..? என் போட்டோவை யாராவது முன்பே காட்டிவிட்டார்களா..?” அவன் விழித்தான்..

“அதெல்லாம் இல்லைப்பா.. உன்னைத் தெரியாதா எனக்கு.. உனக்கு அப்படியே நம் தாத்தாவின் ஜாடை தெரியுமா..? உன்னைப் பார்த்ததுமே இந்தக் குடும்பத்து வாரிசு என்று தெரிந்ததே..”

ஆராத்யாவின் போற்றல் பேச்சில் அரவிந்த் பரவசமானான்.. பாரம்பரியம் பேசும் குடும்பத்து ஆண் பிள்ளைகளுக்கு நீயே இக்குடும்ப வாரிசு எனச் சொல்வது செங்கோல் கொடுத்து சிம்மாசனத்தில் உட்கார வைப்பதற்கு ஒப்பானது.. ஆராத்யா வலையை விரித்தாள்.. அரவிந்த் வசமாக சிக்கினான்..

“நிஜமாகவே நான் நம் தாத்தா மாதிரி இருக்கிறேனா ஆராத்யா..?” அரவிந்த் தன் பாக்கெட்டிலிருந்து போனை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொண்டான்..

“ஆமாம் அரவிந்த்.. அப்படியே தாத்தா மாதிரியே இருக்கிறாய்.. தாத்தாவுக்கு முடி உதிர்ந்து வழுக்கையாகி விட்டது.. உனக்கு இன்னமும் கருகருன்னு முடி இருக்குது அவ்வளவுதான் வித்தியாசம்..”

தானும் அவனருகே வந்து போனில் அவனைப் பார்த்தபடி சொன்னாள் ஆராத்யா..

“டேய் என்ன செய்து கொண்டு இருக்கிறாய்..?” ஆர்யனின் சத்தத்தில் தனது போனை தவற விட்டு கடைசி விநாடியில் அதனை கேட்ச் பிடித்து தன் சட்டைப் பையில் பத்திரப்படுத்திய அரவிந்தன்..

“அண்ணா ஆராத்யா சொன்னதைக் கேட்டீர்களா..? நான் தாத்தா போல் இருக்கிறேனாம்.. நம் வீட்டில் எல்லோரும் உங்களைத்தானே அப்படி சொல்வார்கள்.. இவள் என்ன சொல்கிறாள் பாருங்கள்.. நான்தான் தாத்தா போல் இருக்கிறேன்..” இல்லாத மீசையை நீவி விட்டுக் கொண்டான்..

“இது இப்போது ரொம்ப முக்கியம்.. உன்னை என்ன செய்ய சொன்னேன்..?” ஆர்யனின் சிக்கன பேச்சு சத்தம் காதுகளை தீட்டிக் கொண்டிருந்த ஆராத்யாவிற்கு நன்றாகவே கேட்டது..

ஆக, இவன் தான் ஏதோ சொல்லி தூண்டி விட்டு தம்பியை அனுப்பி வைத்திருக்கிறான்..

“அ… அது.. ஆமாம்.. சொன்னீர்கள்.. இ.. இந்தாம்மா இது எங்கள் வீடு.. சொந்தங்களை மதிக்காமல் போனவர்களுக்கு எல்லாம் இங்கே இடம் கிடையாது.. நீ எதையாவது பெரிதாக நினைத்துக் கொண்டிராதே.. சரிதானே அண்ணா..?” அரவிந்தன் கடைசியாக கேட்ட சரிதானேக்கு ஆர்யனுக்கு தலையிலடித்துக் கொள்ளலாம் போலிருந்தது..

“தமிழண்ணா நீங்களும் வாங்க, வந்து இவளை நாலு வார்த்தை கேளுங்க..” அரவிந்தன் அழைக்கவும் தான் அறைக் கதவின் பின் மறைந்து நின்று எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த தமிழரசனை கவனித்தாள் ஆராத்யா..

அவள் இதழ்களில் தேன் புன்னகை ஒன்று பட்டாம்பூச்சியாய் வந்து ஓட்டிக் கொண்டது.. ஆஹா எல்லோருமாக சேர்ந்து திட்டம் போட்டுத்தான் வந்திருக்கிறீர்களா..? தலையசைத்துக் கொண்டாள்..

“ஹாய் தமிழ் அத்தான்.. நீங்கள் ஏன் அங்கே மறைந்து கொண்டு நிற்கிறீர்கள்..?” குயிலாய் கூவினாள்..

“மறைந்து கொண்டா.. இல்லையே.. நான் இப்போது தான் வந்து கொண்டே இருந்தேன்.. உன்னை நன்றாகத் திட்டுவதற்குத்தான் வந்தேன்.. நீயென்ன இத்தனை வருடமாக இருந்த இந்த வீட்டுப் பழக்கத்தை மாற்றுகிறாயே..? எதற்காக எப்போதும் தாத்தா ரூமில போய் போய் உட்கார்ந்து கொள்கிறாய்..? எதற்காக எங்கள் அண்ணனின் கடமைகளில் தலையிடுகிறாய்..? இதெல்லாம் சரியில்லை.. ஒழுங்காக நடந்து கொள் சரியா..?”

அவன் இறுதியாக முடித்த சரியா.. தன்னைப் பார்த்து இருக்க ஆர்யனுக்கு இன்னமும் அதிகமாக தலையிலடித்துக் கொள்ள தோன்றியது.. இவனுங்களை வைத்துக் கொண்டு..

“உங்களைத்தான் கேட்கிறார்கள் ஆர்யன்.. பதில் சொல்லுங்களேன்..” ஆராத்யா குரல் இப்போது ஆர்யன் புறம் திரும்பியிருந்தது..

“அவர்களுக்கு நான் பதில் சொல்லிக் கொள்கிறேன்.. நீ எனக்கு பதில் சொல்லு.. சொர்ணா கல்யாணம் முடிந்ததும் நீயும், உன் அம்மாவும் வந்த தடம் தெரியாமல் உங்கள் சென்னைக்கு ஓடிவிட வேண்டும்.. அதைவிட்டு விட்டு இங்கே பாட்டி, தாத்தா, அத்தை, மாமா, சித்தி என்று கொஞ்சிக் கொண்டு யாரையாவது இம்ப்ரெஸ் பண்ண வேண்டுமென்று நினைத்தாயோ, நடப்பதே வேறு..” ஒற்றை விரலாட்டினான்..

“அப்போது நான் தாத்தாவிடம் பேசவே கூடாதா ஆர்யன்..?”

“அதைத்தான் இவ்வளவு நேரமாக சொல்லிக் கொண்டிருந்தேன்..”

“போங்கப்பா நேற்று நைட் ஒன்று சொன்னீர்கள்.. இன்று பகலில் ஒன்று சொல்கிறீர்கள்.. நான் எதைத்தான் பாலோ செய்வது..?” கைகளை உதறி அலுத்துக் கொண்டாள்..

“நைட்டா..? அண்ணாவா..? என்ன சொன்னார்…?” அரவிந்தனும், தமிழரசனும் ஒன்று போல் கோரசாகக் கேட்டு ஆர்யனையும், ஆராத்யாவையும் மாற்றி மாற்றி பார்த்தனர்.. ஆர்யன் இப்போது நிஜமாகவே தலையில் அடித்துக் கொண்டான்..

“தாத்தா எதையாவது சொல்வாரு.. அதையெல்லாம் கண்டுக்காதே.. நானும் உங்கள் பேத்தி தான், எனக்கும் உங்ககிட்ட உரிமை இருக்குதுன்ன..” இழுத்து பேசி மூச்சு வாங்குவது போல் நிறுத்த..

“கேட்க சொன்னாரா..? அண்ணாவா..?” மீண்டும் இருவரும் கோரஸ்பாட..

“ம்.. அவர்தான் எனக்கு நூடுல்ஸ் போட்டு வந்து கொடுத்து விட்டு..”

“என்னது..? நூடுல்ஸ் போட்டு வந்தாரா..?” இருவரும் இப்போது தங்கள் அண்ணனை இருபுறமும் நின்று நெருக்க, ஆர்யன் தலையில் வைத்த கையோடு சோபாவில் சாய்ந்து விட்டான்..

வெடித்து வெளியேறிய சிரிப்பை அடக்கியபடி ஆராத்யா வெளியே ஓடி வந்துவிட்டாள்.. எனக்கு எதிராக உன் தம்பிகளை தூண்டி விடுகிறாயா..? நல்லா அவர்கள் கிட்டேயே மாட்டிக்கிட்டு முழி.. மனதிற்குள் கறுவினாள்..

“ஏய் உனக்கு திமிராடி..?” பதினைந்தாவது நிமிட முடிவில் அனல் பறக்க அவள் முன் வந்து நின்றான் ஆர்யன்.. தம்பிகளிடையே அவஸ்தைப்பட்ட அவனது நிமிடங்களை சொல்லின அவன் வார்த்தைகள்.

“ஆமாண்டா இத்தனைவருடமாக நெய்யும், வெண்ணைய்யுமாக ஊற்றி ஊற்றி என்னை வளர்த்தாய் பார் அந்த திமிர்..” ஆராத்யா எகிறினாள்.

“டா.. உடனே பதிலுக்கு பதில், பொறுமையும் கிடையாது.. பொறுப்பும் கிடையாது.. நல்லா வளர்த்து வச்சிருக்காங்க உன்னை..”

சட்டென எதற்கும் அவன் தன் தாய் தந்தையை தாக்குவதை ஆராத்யாவால் ஒத்துக் கொள்ள முடியவில்லை..

“என் வளர்ப்பு சரியில்லையா..? உன் வளர்ப்பு எப்படியோ..? சென்னையில் உன் லட்சணத்தை இங்கே எல்லோர் முன்பும் போட்டு உடைக்கவா..?”

“ஆராத்யா..” அதட்டினான்..

அடப்பார்றா.. என அவனது அதட்டலை வியந்து பார்த்தாலும்.. ஆழ்ந்து அழுத்தமான அந்த அதட்டலை ஆராத்யாவால் மீற முடியவில்லை.. வாயசைக்காமல் விழிகளில் தன் எதிர்ப்பை தேக்கி அவனைப் பார்த்தாள்..

“அன்று நடந்தது ஒரு தவறான புரிதலால் வந்த பிசகு.. அதைப் பற்றி உனக்கு நான்..”

கையுயர்த்தி அவன் பேச்சை நிறுத்தினாள்..

“பிசினஸ் பேசலாமென்று தனியாக வரச் சொல்லி, நம்பி வந்தவளை பியர் கொடுத்து மயக்கி உன் ஆசைக்கு இணங்க வைக்க.. சீச்சீ இந்த தகாத செயல்களுக்கெல்லாம் என்ன காரணம் சொல்லி விடப் போகிறாய் நீ..? உன்னுடைய இத்தனை தவறுகளையும் குடும்பத்தினருக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டு இங்கே உத்தமபுத்திரனாக நடமாடிக் கொண்டிருக்கிறாய் பார்.. அதைத்தான் என்னால் தாங்க முடியவில்லை.. இங்கே எல்லோருக்கும் உன் முகமூடியைக் கிழித்துக் காண்பிக்கிறேன் பார்..”

ஆராத்யா பேசி முடிக்கும் வரை கைகளைக் கட்டிக் கொண்டு முழுவதும் பொறுமையாக கேட்டான்.. பிறகு அவளை உற்றுப் பார்த்தான்.

இப்போது எதற்கு இப்படி பார்க்கிறான்..? ஆராத்யா அவன் பார்வையின் வீர்யம் தாங்காமல் மெல்ல பின்னடைய, அவன் கைநீட்டி அவள் தலையை தொட்டான்..

“முடியை விரித்து போடவில்லையா..?” ஆராத்யா விழித்தாள்..

“என்னது..? எதுக்கு..?”

“சபதம் போட்டியேம்மா, பொதுவாக பொண்ணுங்க சபதம் போடும் போது தலை முடியை விரித்து போட்டுக்குவாங்க.. கண்ணகி, பாஞ்சலி இவுங்கெல்லாம் அப்படித்தான், ஆனால் அவுங்களுக்கெல்லாம் கூந்தல் நீளமாக இருந்தது.. விரித்துப் போட்டு சபதமிடுவதென்றால்..” அவன் பேசப் பேச கோபம் பொங்க ஆராத்யா குனிந்து கீழேயிருந்து கற்களை எடுத்தாள்.

“அடேய்..” கத்தியபடி, அவளது குட்டை முடி சபத தோற்றத்தை கற்பணையில் காண்பவன் போன்ற பாவணை யோசனையில் நின்றவனின் மீது கற்களை எறிய ஆரம்பித்தாள்..

கவனிக்காமல் முதல் கல்லை மேலே வாங்கி விட்டவன், அடுத்தடுத்த கற்களிலிருந்து லாவகமாக நகர்ந்து தப்பித்தபடி கூச்சலிட்டான்..

“அடிப்பாவி.. பாதகி.. கொலைகாரி..” ஆராத்யா விடாமல் குனிந்து கற்களை எடுத்து அவன் மீது எறிந்து கொண்டே இருக்க..

“நல்ல வேளைடி.. அன்னைக்கு உன்னை வீட்டை விட்டு வெளியேத்தி விட்டுட்டேன்.. இல்லைன்னா இன்னைக்கு என்னைப் புதைச்ச இடத்துல புல்லு முளைச்சிருக்கும்…” மேலே கற்கள் படாமல் நகர்ந்து கொண்டிருந்தவனை எட்டி சட்டையைப் பிடித்தாள்.. உலுக்கினாள்..

“யு.. ரோக்.. பொறுக்கி.. பொம்பளை பொறுக்கி…” ஆராத்யாவின் ஆவேச குரல் இடையே சிறிது உடைந்து கீற, ஆர்யன் அவள் தோள்களை அழுத்திப் பற்றினான் ..

“ஆரா ரிலாக்ஸ்டா.. ஐ வில் எக்ஸ்ப்ளய்ன் யு.. ப்ளீஸ் வெயிட்..”

“நோ ஐடோன்ட் வான்ட் எனி ஆப் யுவர் எக்ஸ்ப்ளனேசன்ஸ்.. ஐ ஹேட் யு..” கத்திய ஆராத்யா அவனை உதறி விட்டு வீட்டிற்குள் ஓட ஆர்யன் வேதனை தோய்ந்த முகத்துடன் அவளைப் பார்த்தபடி இருந்தான்..

ஆர்யனிடமிருந்து வந்த ஆராத்யா நேரிடையாக போனது தாத்தாவின் அறைக்குத்தான்.. அப்போது அவளுக்கிருந்த வேகத்திற்கு பரமசிவம் அங்கு இருந்திருந்தாரானால் ஆர்யனைப் பற்றி அவள் அறிந்த எல்லாவற்றையும் கொட்டி தீர்த்திருப்பாள்.. ஆனால் பரமசிவன் அங்கே இல்லை..

ஆராத்யா தாத்தாவின் கட்டிலிலேயே அமர்ந்து கண்களை இறுக மூடியபடி சில நிமிடங்கள் அமர்ந்திருந்து தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டாள்.. பிறகு எழுந்து வெளியேற போன போது தலையணைக்கடியில் இருந்து அந்த நோட்டு தெரிந்தது.. அடிக்கடி தாத்தாவின் கையில் இதனைப் பார்க்கிறாள்.. இதைக் கைகளில் வைத்திருக்கும் போது தாத்தாவின் முகம் இறுக்கத்தையும், கண்டிப்பையும் தொலைத்து இலகும், மலர்வுமாக இருப்பதைக் கவனித்திருக்கிறாள்..

அப்படி என்ன நோட்டு இது..? அதை எடுத்து புரட்டினாள்.. அது நோட்டு அல்ல.. பழைய புகைப்பட ஆல்பம்.. அதன் அட்டைகள் கிழிந்திருக்க, அதற்கு ஏதோ ஒரு நோட்டு அட்டையை பொருத்தியிருந்ததால் அது நோட்டு போல் தோன்றியிருக்கிறது..

ஆராத்யா உற்சாகமாக அந்த ஆல்பத்தை புரட்ட ஆரம்பித்தாள்.. எல்லாமே கறுப்பு – வெள்ளை புகைப்படங்கள்.. தாத்தாவின் நான்கு பிள்ளைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் மட்டுமே, பிள்ளைகளின் குப்புற விழுந்த, மரக் குதிரை மேல் உட்கார வைத்த, கூடை வயர் நாற்காலியில் அமர்த்தியிருந்த, மொட்டை போட்ட, பள்ளிக்கு போன.. இப்படி நான்கு பிள்ளைகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் மட்டுமே முதல் பாதி பக்கத்தை நிரப்பியிருந்தது..

அடுத்த பாதியில் அதே போன்று பேரக் குழந்தைகளின் சிறுவயது புகைப்படங்கள்.. தன் பிள்ளைகளை எடுத்த அதே போசில் தன் பேரக் குழந்தைகளையும் எடுத்திருந்தனர்.. அதே போல் போட்டோக்கள் வர வர கலருக்கு மாறிக் கொண்டிருந்தன..

தன் பிள்ளைகள், பேரப் பிள்ளைகளின் சிறு வயது தோற்றங்கள் யாருக்குமே நெகிழ்வைக் கொடுக்கும் தானே.. தாத்தாவின் உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஆராத்யாவின் கண்கள் பனித்தன..

இப்போது இந்த ஆல்பத்தில் தனது போட்டோ இல்லாதது பெரிய குறையாகத் தெரிந்தது அவளுக்கு..

“ஏய் இங்கே என்ன பண்ற..?” பரமசிவம் அதட்டலுடன் வர,

“தாத்தா உங்க ஆல்பம் எடுத்துக்கிட்டேன்.. நான் பார்த்துவிட்டு தருகிறேன்..” தாத்தா மறுக்க மறுக்க கத்தி, அறிவித்தபடி ஆல்பத்துடன் தங்கள் அறைக்கு ஓடிவிட்டாள்..

ஆல்பத்தை பார்த்ததும் மனோரமா அழவே ஆரம்பித்துவிட்டாள்.. “ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அப்பா எல்லோரையும் தவறாமல் போட்டோ எடுப்பார்.. அதனை இப்படி ஆல்பமாக வைத்திருப்பார் என்று எனக்கே தெரியாது..” போட்டோக்களை வருடினாள்..

“உன் போன் கொடு மம்மி..”

“எதுக்கு ஆரா..?”

“என்னோட சின்ன வயசு போட்டோஸ் அதில் வச்சிருப்பியே.. அதை ப்ரிண்ட் போட்டு இந்த ஆல்பத்திலேயே வைக்க போகிறேன்..”

“வேண்டாம் ஆரா.. அப்பா கோபப்பட போகிறார்..”

“உன் அப்பாவுக்கு கோபம் வருமா..? அப்போது நான் நிச்சயம் இதை செய்தே ஆக வேண்டும்..”

ஆராத்யா பிடிவாதத்துடன் போனுடன் வீட்டை விட்டு வெளியேறி எப்படி ஸ்டுடியோக்கு போகலாம்.. என யோசித்தபடி நின்ற போது எதிரே ஆர்யன் வந்தான்..

அவனைப் பார்த்ததுமே ஆராத்யா ஏதோ ஓர் எச்சரிக்கை உணர்வுடன் போனை பின்னால் மறைக்க, அதனை ஆர்யனின் எக்ஸ்ரே விழிகள் படம் பிடித்து பத்திரப்படுத்தின..

-(கனா தொடரும்…)

முந்தையபகுதி – 14 | அடுத்தபகுதி – 16

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...