கரை புரண்டோடுதே கனா – 14 | பத்மா கிரக துரை
அத்தியாயம் – 14
“இந்த வீட்டில் எதைச் சாப்பிடவும் பயமாக இருக்கிறது.. வார்த்தைகளில் விசம் வைத்திருப்பவர்கள்.. சோற்றில் விசம் வைக்கவும் தயங்க மாட்டார்களென்றே தோன்றகிறது..” ஆராத்யா தன் மன வேதனையை வார்த்தைகளாகக் கொட்டினாள்..
“தாத்தா என்ன சொன்னார்..?”
தான் பேசிய பேச்சிற்கு தாம் தூமென குதிப்பான் என ஆராத்யா எதிர்பார்த்திருக்க அவன் அமைதியாக விபரம் கேட்டுக் கொண்டிருந்தான்.
“உங்கள் தாத்தா அல்லவா.. அதையே நிரூபிப்பது போல் சொன்னார்.. நிறைய சொன்னார்.. பேசிக் கொண்டிருக்கும் போதே தாத்தாவின் பேச்சு நினைவு வந்துவிட குரல் தழுதழுக்க ஆரம்பிக்க, அதனை ஆர்யனுக்கு காட்டாமல் இருக்க, வெளிப்புறம் முகத்தை திருப்பிக் கொண்டாள்..”
“தாத்தாவின் ஏமாற்றம் மிகப் பெரியது ஆரா.. அதில் நாம் குற்றம் சொல்லவே முடியாது.. அவரது வேதனைகளின் வீரியத்தை நாம் தாங்கியே ஆக வேண்டும்.. அதற்காக வயிற்றைப் பட்டினி போட வேண்டிய அவசியமில்லை.. நம் இருவருக்குமிடையே இருக்கும் போட்டியை மறந்து விட்டாயென நினைக்கிறேன்.. என்னோடு சண்டை போடுவதற்கு உடலில் வலு வேண்டாமா..? அதற்காகவாது சாப்பிடு..”
சிறு வேண்டலோடு ஒலித்த அவனது பரிவுக்குரலை மறுக்கும் எண்ணம் ஆராத்யாவிற்கு வரவில்லை.. அத்தோடு நூடுல்சின் மசாலா மணம் வேறு அவள் பசியைத் தூண்டி விட்டது.. அவள் கிண்ணத்தை வாங்கிக் கொண்டாள்.. சாப்பிடத் துவங்கினாள்.. அவள் சாப்பிட ஆரம்பிக்கவும் படியிறங்கி கீழே போன ஆர்யன் சொம்பில் தண்ணீரோடு வந்தான்..
நூடுல்சை வேகமாக உறிஞ்சி புரையேறியவளின் தலையில் தட்டி “மெல்ல” என்றபடி குடிக்க தண்ணீர் கொடுத்தான்..
“சாப்பாடு போட்டே என்னை விரட்டத் தானே ப்ளான் செய்திருந்தீர்கள்.. இப்போது இது எப்படி..?” நூடுல்ஸ் கிண்ணத்தைக் காட்டினாள்..
“அது வேறு.. இது வேறு நீ உண்ணக் கூடப் பிடிக்காமல் மனம் நொந்து வீட்டை விட்டு போவதை நான் விரும்பவில்லை..”
“உண்மைதான் இந்த வீட்டில் சாப்பிடுவது கூட நான் என் அப்பாவிற்கு செய்யும் துரோகம் தான்.. நான் பாட்டி, அத்தை, சித்தி என இந்த வீட்டுப் பெண்களுக்காக பார்க்கிறேன்.. அவர்கள் என் மேல் உண்மையான அன்பு காட்டுகிறார்கள்.. அவர்களிடம் முகம் முறித்துப் போக யோசனையாக இருக்கிறது..”
“எங்கள் ஹெல்மெட்டுக்கள் தரம் வாய்ந்தவை என விபரம் சொல்லியபடி தலை நிமிர்ந்து என் கம்பெனியில் வந்து நின்றாயே.. அந்த ஆரத்யாவை எங்கே..? இவள் ஏன் இப்படி கோழை போல் ஓட நினைக்கிறாள்..”
“அது தொழில்.. இது குடும்பம்.. தொழிலில் அப்படி நிமிர்ந்து நிற்கும் போதே சில வல்லூறுகள் கொத்திப் பிடுங்க வந்து விடுகின்றன..”
ஆராத்யாவின் குத்தல் ஆர்யன் எதிர்பார்த்தது தான்.. அவன் பாறை போல் முகத்தை வைத்திருந்ததை பார்த்த ஆராத்யாவிற்குத்தான் தானெறிந்த அம்பின் இலக்கு குறித்த சந்தேகம் வந்தது..
“அன்றைய சம்பவத்தை இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம் ஆரா.. இப்போது இதை சொல்.. தாத்தா உன்னை என்ன சொன்னார்..?”
“அவருடைய சொத்துக்காக நானும், அம்மாவும் இங்கே வந்திருக்கிறோமாம்.. அதுவும் அப்பாவே எங்களை அனுப்பி வைத்திருக்கிறாராம்.. இங்கே வரக் கூடாது என்று அப்பா அம்மாவுடன் எவ்வளவு சண்டை போட்டார் தெரியுமா..? அவரைப் போய்..” ஆராத்யா குரல் கம்ம பேச்சை நிறுத்தினாள்..
“ஆமாம்.. அப்படித்தான் என உன் தாத்தாவிடம் சொல்வது தானே..”
“என்ன..?”
“என்னிடம் மட்டும் எனக்கும் உரிமை இருக்கிறது.. நானும் பரமசிவம் தாத்தாவின் பேத்திதான் என்று வாய் கிழிய பேசுகிறாய்.. அங்கே தாத்தாவிடம் மட்டும் ஊழு ஊழுன்று அழுது கொண்டு வந்து விடுவாயா..? உங்கள் சொத்தில் எனக்கு உரிமையில்லையா தாத்தா..? எனக்கு தரமாட்டீர்களா..? எனத் திருப்பிக் கேட்டிருக்க வேண்டியது தானே..?”
ஆராத்யா விழி விரித்தாள்.. இவன் தாத்தாவையே எதிர்த்து பேசக் கற்றுத் தருகிறானா..? அதுவும் அவள் இவன் சொன்னபடி கேட்டால்..
“அப்படி நான் தாத்தாவிடம் கேட்டால் பாதிக்கப்படுவது நீங்கள் தான்.. உங்கள் உரிமை, பங்கு குறைந்து விடும் தெரியுமா..?”
“ப்ச் அது அடுத்த பிரச்சினை.. அப்படியே எனக்கு பிரச்சினை வந்தாலும் அதனை சமாளிக்க எனக்குத் தெரியும்.. நான் உன்னைப் பற்றித்தான் இப்போது யோசிக்கிறேன்.. இனியாவது தாத்தாவிடம் பேசும் போது இது போல் தைரியமாக பேசு.. உன் உரிமையை விட்டுக் கொடுக்காதே..” அறிவுறுத்தியபடி சாப்பிட்டு முடித்த அவள் கிண்ணத்தை வாங்கினான்..
“நானே கொண்டு போய் வைக்கிறேன்..” கையை இழுத்தவளிடமிருந்து கிண்ணத்தை பிடுங்கியவன்..
“இது ஒன்றும் பெரிய விசயமில்லை.. கொண்டா.. எனக்கு உறுத்துவது வேறொன்று.. மகள் சாப்பிட்டாளா இல்லையா என்று கூட உன் அம்மா கவனிக்க மாட்டார்களா..? அப்படி என்ன கவனக்குறைவு..?”
கிடைத்த சந்தர்ப்பத்தை அவன் தன் தாயை சாட உபயோகிப்பதை உணர்ந்தவள்..
“தன் பிறந்த வீட்டில் தன் மகளுக்கு எதிராக இப்படி ஒரு அநியாயம் நடக்குமென்று அம்மா எதிர் பார்த்திருக்க மாட்டாள்.. அதனால் தான் என்னைக் கவனிக்கவில்லை..” தானளித்த பதிலில் அவர்கள் குடும்ப முழுமையையும் குத்தினாள்..
“திமிர்டி உனக்கு.. பட்டினியாய் கிடக்கிறாயேன்னு பாவப்பட்டு சாப்பாடு கொண்டு வந்தால், எங்க குடும்பம் முழுக்க தூற்றுகிறாயா..?”
“அதென்ன உங்க குடும்பம்..? நானும் என் அம்மாவும் அதில் சேர்த்தி இல்லையா..?”
“அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இப்படி பேசுவாயா..?”
சற்றுமுன் இருந்த நிலை மாறி ஒருவர் கழுத்தை ஒருவர் பிடிக்கும் வெறிக்கு இருவரும் வந்திருந்தனர்..
“இனிமேல் உனக்கு பச்சைத் தண்ணீர் என் கையால் கொடுத்தால் ஏன்னு கேளு..”
“இனிமேல் உன் மூஞ்சியில் விழித்தால் என்னை ஏன்னு கேளு..”
“போடி..”
“போடா..”
தான் முடிக்கும் முன் பட் பட்டென பதில் வார்த்தைகளை வெடியாய் சிதற விட்ட ஆராத்யாவை முறைத்தபடி படியிறங்கிய ஆர்யன், நான்கு படி இறங்கிய பின்பு திரும்ப மேலேறி முதல் படியில் நின்றபடி..
“இந்த நூடுல்ஸ் உடம்புக்கு கெடுதி.. இன்று உடனடியாக ஒரு உணவு வேண்டுமென்று தான் இதைத் தயாரித்துக் கொண்டு வந்தேன்.. அடிக்கடி இதை சாப்பிடாதே..” என்று விட்டு போனான்..
ம்க்கும் பெரிய இவன்.. சொல்ல வந்துட்டான்.. தலையை சிலுப்பிக் கொண்டாள் ஆராத்யா..
“குட் மார்னிங் தாத்தா..”
மழையில் நனைந்து பளீரிடும் ஒற்றை ரோஜா போல் ப்ளீரென்று காலையில் தன் அறைக்குள் வந்து நின்ற பேத்தியை திகைப்பாய் பார்த்தார் பரமசிவம்.. முதல் நாள் அவர் பேசிய பேச்சு பேத்தியை மிகவும் பாதித்து விட்டதை அவர் உணர்ந்தே இருந்தார்.. இனி தன்னருகே அவள் வரமாட்டாள் என அனுமானித்து வைத்திருக்க, காலையிலேயே வந்து நிற்கிறாளே.. முகத்தை கடுமையாக மாற்றிக் கொண்டு..
“என்ன..?” அதட்டலாக கேட்டார்..
“சும்மா கண் விழித்ததும் உங்களைப் பார்க்க வேண்டும் போலிருந்தது.. அதுதான் வந்தேன்.. நீங்க காபி குடிச்சாச்சா..?”
“உன் தாத்தா காலையில் நீச்சு தண்ணீர் தான்மா குடிப்பார்..” வரலட்சுமி சிறிய மண் கலயத்துடன் உள்ளே வந்தாள்..
“நீச் சு தண்ணீர்.. அப்படின்னா..?”
“ராத்திரி மீந்த சோற்றில் தண்ணீர் ஊற்றி வைத்திருந்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் வடித்துக் குடிப்பது.. நிசி முழுவதும் ஊறுவதால் நிசி தண்ணீர், நீச் சு தண்ணீர், நீராகாரம் என்று சொல்வார்கள்..”
“இன்ட்ரஸ்டிங் தாத்தா எனக்கு கொஞ்சம் கொடுங்களேன்.. டேஸ்ட் பார்க்கிறேன்..” தன்னருகே வந்து அமர்ந்து கொண்டு, தான் குடித்துக் கொண்டிருப்பதில் பங்கு கேட்ட பேத்தியை என்ன செய்வதென தெரியாமல் விழித்தார் பரமசிவம்..
“என்னங்க உங்க சொத்தை எழுதிக் கேட்டது போல் முழிக்கிறீங்க..? புள்ளை ஆசையா கேட்குது.. இரண்டு மடக்கு கொடுங்களேன்..” வரலட்சுமி பரிந்து வர..
“அப்படியே சொத்தை நான் கேட்கக் கூடாதா பாட்டி..? எனக்கு அந்த உரிமையில்லையா..?” தாத்தாவை ஓரக்கண்ணால் பார்த்தபடி கேட்டாள்..
“உனக்கில்லாத உரிமையாம்மா..? உன் அம்மாவிற்கு கல்யாணத்திற்கு கூட நாங்க எதுவும் செய்யலை.. உனக்கு கேட்க உரிமை இருக்கு.. எங்களுக்கு செய்ய கடமை இருக்கு..” வரலட்சுமி உறுதியாக பேசினாள்..
“அப்படியா தாத்தா..?” விசமமாக கேட்டபடி தாத்தா கையிலிருந்த மண் கலயத்தை வாங்கி அண்ணாந்து தன் வாயில் சிறிது ஊற்றிக் கொண்டவள், அதன் லேசான புளிப்பு சுவையில் முகம் சுளித்து நிமிர்ந்த போது அறை வாசலில் ஆர்யனை பார்த்தாள்..
இந்தக் காலை நேரத்தில் தாத்தாவின் அறையில் நீராகாரம் குடித்தபடி அவளை அவன் எதிர்பார்க்கவில்லை என அவன் முகம் சொன்னது..
“காலங்கார்த்தாலேயேவா..?” அவளைப் பார்த்து பல்லைக் கடித்தான்..
“உனக்கு மட்டும் இந்நேரமே இங்கே என்ன வேலை..?” ஆராத்யா அவனைப் பார்த்து உதட்டை பிதுக்க, அவன் வெளியே போ என விழியால் மிரட்டினான், அப்போது அவன் கையை கவனித்த ஆராத்யா எழுந்து அவன் கையை பற்றிக் கொண்டாள்..
“தாத்தாவிற்கு மூட்டுவலி தைலம் தானே.. கொடுங்க நானே தடவி விடுறேன்..”
“அதெல்லாம் வேண்டாம்.. நான் பார்த்துக்கொள்கிறேன்.. விடு..”
“ம்ஹீம் நான் தான் தடவி விடுவேன்..” ஆராத்யா பிடிவாதமாக இருக்க..
“ஏய் தீட்டிய மரத்தையே கூர் பார்க்கிறாயா..? உனக்கு ஐடியா சொல்லிக் கொடுத்ததுக்காக என் அடி மடியிலேயே கை வைக்கிறாயா..? ஓடிடுடி.. இல்லை என்கிட்ட அடி வாங்குவாய்..” முணுமுணுத்தான்..
“ஆங் பெரிய ஐடியா.. நீ சொல்லலைன்னா எனக்குத் தெரியாதாக்கும்..? நான் விட மாட்டேன்.. என்கிட்ட கொடுத்துட்டு ஓடுடா..” ஆராத்யாவும் பதிலுக்கு முணுமுணுத்தாள்..
“இரண்டு பேரும் நிறுத்துங்க.. ஏய் வரலட்சுமி நீ வாங்கி தைலத்தை தேய்ச்சு விடுடி.. இவுங்க இரண்டு பேரையும் வெளியே போகச் சொல்லு..”
ஆராத்யாவிற்கு பெரிய நிம்மதி.. ஹப்பாடி நான் வெளியே போவதில் கவலை இல்லை.. அவனும் வெளியே வர்றான்.. சந்தோசம்.. பரவசம் நிரம்பிய அவள் முகத்தை கொலை வெறியாகப் பார்த்தான் ஆர்யன்..
-(கனா தொடரும்…)
முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15