கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 13 | பத்மா கிரக துரை

 

அத்தியாயம் – 13

 “இந்தச் சிகப்பு சேலையை கட்டலாமா..?” ஸ்ரீமதி கொண்டு வந்து காட்டிய சிகப்பு சேலையை தராசின் ஒரு தட்டிலும், சொர்ணாவை மறு தட்டிலும் வைத்தாள் நிச்சயம் சேலை இருக்கும் தட்டுத்தான் கீழே இறங்கும் என்பதில் ஆராத்யாவிற்கு சிறிதும் சந்தேகமில்லை..

பாவம் அந்த சிறு பெண் இவ்வளவு பெரிய சேலையை எப்படி சுமப்பாள்..? ஆராத்யாவிற்கு பரிதாபம் தோன்றியது.. இந்த இக்கட்டிலிருந்து அவளைக் காப்பதென்று யோசித்தாள்..

சொர்ணா திருமணம் செய்து போகப் போகும் மாப்பிள்ளை வீட்டிலிருந்து சில உறவினர்கள் அவளைப் பார்க்க வருவதாக தகவல் சொல்லிவிட, அதற்காக சொர்ணாவை தயார்ப்படுத்தும் ஏற்பாடுகளில் இருந்தார்கள் அவர்கள்..

“இவ்வளவு பெரிய சேலை வேண்டாம் ஸ்ரீ.. கொஞ்சம் சின்ன சேலையாக ஏதாவது இருக்கிறதா..?” கேட்ட ஆராத்யாவை தனது உடைகள் இருக்கும் மர ப்ரோவிற்கு அழைத்துப் போனாள் சொர்ணா..

“நீங்களே ஒன்று செலக்ட் செய்யுங்கள் அக்கா..”

மெல்லிய சரிகை கோடுகளை பார்டராக கொண்ட நவாப்பழ நிற பட்டுச் சேலையை ஆராத்யா தேர்ந்தெடுத்தாள்..

“இதென்ன இதில் பார்டரே இல்லையே.. ரொம்ப சாதாரணமாக இருக்கிறதே..” வரலட்சுமி அதிருப்தி காட்ட,

“நான் சேலை கட்டி கூட்டி வருகிறேன் பிறகு சொல்லுங்கள் பாட்டி..” ஆராத்யா சமாளித்தாள்..

அவள் சொன்னது போன்றே அடுக்காய் மடிப்புகள் வைத்து, உடலோடு பொருத்தி சேலை கட்டி சிற்பம் போல் சொர்ணாவை அவர்கள் முன் நிறுத்திய போது எல்லோருமே விழி விரித்தனர்..

“வெறும் ஐயாயிரம் ரூபாய் பட்டுபுடவை.. நீ கட்டிய விதத்தில் இருபதினாயிரம் மதிப்புடைய புடவை போல் தெரிகிறது ஆரா..” சௌடாம்பிகை முதல் ஆளாக பாராட்டினாள்..

“அலங்காரம் கூட ஆராவையே பண்ணச் சொல்லுங்கள் அண்ணி.. அளவாக, அழகாக செய்து விடுவாள்.. ஏதாவது பங்ஷன் என்றால் எனக்கே அவள்தான் மேக்கப் போட்டு விடுவாள்..” மனோரமா மகளின் பெருமிதத்தை சொன்னாள்..

“அப்போ சரிதான்.. நீயே அலங்காரமும் பண்ணிடும்மா..” சுப்புலட்சுமி சொல்ல ஆராத்யா தலையசைத்து விட்டு சொர்ணாவை உள்ளே அழைத்து போகும் போது பரமசிவத்தை ஓரக் கண்ணால் பார்த்தபடி போனாள்..

பரமசிவத்தின் முகத்தில் சிறு சங்கடம் தெரிந்தது.. காசு, பணத்திற்காக இங்கே வந்து ஒட்டிக் கொள்ளப் பார்க்கிறீர்களா..? என அவளைக் கேட்டவர்.. இப்போது ஆராத்யா தன் வீட்டு வேலை போல் இழுத்துப் போட்டு வேலை செய்வதை பார்த்து கொஞ்சம் சங்கடமுற்றார்..

“சீக்கிரம் வேலையை முடிங்க.. தோப்பை ஒரு சுற்று சுற்றி விட்டு வருகிறேன்..” எழுந்து வெளியே போய்விட்டார்..

ஆராத்யா தன்னிடமிருந்த மேக்கப் சாதனங்களின் உதவியுடன் சொர்ணாவை அழகாக அலங்கரித்து முடித்தாள்..

கண்ணாடியில் தெரிந்த தன் உருவத்தை தானே நம்ப முடியாமல் திகைத்தாள் சொர்ணா..

“அண்ணி நானே தானா..? எப்படி என்னை இவ்வளவு அழகாக மாற்றினீர்கள்..?”

“நான் மாற்றவில்லை.. உன்னிடம் இருக்கும் அழகை வெளிப்படுத்தினேன்.. அவ்வளவு தான்..”

“உண்மையாகவே நான் அழகா அண்ணி.. அதுவும் உங்களைப் போல் அழகா..?”

“மக்கு.. நீ என்னை விட அழகு.. ஆனால் நீ அதை உணரவில்லை.. நீ மட்டுமல்ல.. ஸ்ரீ, தேனு கூட என்னை விட அழகானவர்கள் தான்..”

“போங்கக்கா எதையாவது சொல்லாதீர்கள்..”

“இல்லைம்மா.. இதுதான் உண்மை.. உங்களைவிட நிறத்தில், முக அழகில் நான் கம்மி தான்.. என்னுடைய குறைகள் வெளியே தெரியாமலிருக்கம் படி நான் என்னை அலங்கரித்துக் கொள்ள கற்றிக்கிறேன்.. அவ்வளவு தான்..”

“ஆஹா என்ன வெளிப்படையான பேச்சு.. எனக்கு உன்னை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது ஆராத்யா..” சொன்னவன் தமிழரசன்.

அவனது குரலுக்கு திரும்பிப் பார்க்காமல் தன் அலங்கரித்தலிலேயே கவனமாக இருந்தபடி “நான் என்ன அதிசயப்பிறவியா அத்தான்.. என்னைப் பார்த்து ஆச்சரியப்பட..?” என்றாள்..

“என் குறைகளை அலங்காரத்தால் மறைத்துக் கொள்கிறேன் என்று வெளிப்படையாக சொல்லும் ஒரு இளம் பெண் நிச்சயம் அதிசய பிறவி தான்..” இந்தக் குரல் தமிழரசனுடையதில்லையே..

வேகமாக திரும்பிப் பார்த்த ஆராத்யா தமிழரசனருகே ஆர்யனும் நிற்கக் கண்டு முகம் சுளித்து திரும்பிக் கொண்டாள்.. இவனும்.. இவன் தாத்தாவும்.. இவர்களுக்கெல்லாம் பதிலே சொல்லக் கூடாது..

“உன் அண்ணியின் குறைகள் என்னவென்று விசாரித்தாயா சொர்ணா..?” தங்கையிடம் கேட்பது போல் இவளை விசாரித்தான்..

“போடா உன்னிடம் சொல்லத்தானே காத்துக் கொண்டிருக்கிறேன்..” உதடு சுளித்து தலையை சிலுப்பிக் கொண்டாள்..

“பெண்களின் அலங்காரம் நடக்கும் இடத்தில் ஆண்களுக்கென்ன வேலை..? உன் அண்ணன்களை வெளியே போகச் சொல்லு சொர்ணா..”

ஆராத்யாவின் குரலிலிருந்த உறுதிக்கு இரு ஆண்களும் அறையை விட்டு வெளியேறியே ஆக வேண்டியதிருந்தது..

“இந்தப் பூவை வைத்து விட்டுடும்மா..” சுப்புலட்சுமி பெரிய மூங்கில் கூடை நிறைய பூவை கொண்டு வந்து வைத்தாள்..

“ஐயோ இத்தனை பூவையுமா..?”

“நிறைய பூ வைத்தால் தான்மா கல்யாணப் பொண்ணு மாதிரி தெரியும்..? வச்சு விட்டுடு..” சுப்புலட்சுமி போய்விட, ஒரு கூடை பூவை தலையில் ஏற்றி தான் இதுவரை செய்த அலங்காரத்தைக் கெடுக்க ஆராத்யா விரும்பவில்லை..

அறையை விட்டு வெளியே வந்து கண்களால் தேடினாள்..

“யாரை நீ தேடுகிறாய்..? என்ன வேண்டும்..?” கேட்டபடி வந்து நின்றான் ஆர்யன்..

உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போடா, எனச் சொல்லும் ஆசைதான் அவளுக்கு.. ஆனால் இப்போது காரியமாக வேண்டும்..

“தமிழரசன் அத்தானை தேடுகிறேன்.. கொஞ்சம் வெளியே போக வேண்டும்..”

“எங்கே..?”

“பூக் கடைக்கு.. நான் சொல்வது போல் பூக்கட்டி வாங்க வேண்டும்..”

“தமிழரசனை வேறொரு வேலையாக அனுப்பியிருக்கிறேன்.. என்னுடன் வா.. நான் அழைத்துப் போகிறேன்..”

“வேண்டாம்.. நான் சொல்கிறேன்.. அது போல் சொல்லி நீங்களே வாங்கி வந்து விடுங்கள்..”

“ம்ஹீம்.. இந்த விபரமெல்லாம் என் மனதில் தங்காது நீயே வந்து விபரம் சொல்லி வாங்கிக் கொள்..”

ஆராத்யா திரும்பி நடந்தாள்.. “எனக்கு வேண்டாம்..”

“ஏன்..?” ஆர்யன் அவள் வழியை மறித்து நின்றான்..

“உங்களுடன் தனியாக வருவதென்றால் எனக்குப் பயமாக இருக்கிறது..”

ஆர்யனின் முகம் கோபத்தில் சிவந்தது..

“என்ன நினைத்துக் கொண்டு இப்படி பேசிக் கொண்டு இருக்கிறாய்..?”

“நான் எதனால் இப்படி பேசுகிறேனென்று உங்களுக்குத் தெரியாதா..?”

ஆர்யன் கண்களை இறுக மூடி ஒரு நிமிடம் நின்றான்..

“அது நம் இருவருக்குமிடையே இருக்கும் பிரச்சனை.. அதனைப் பிறகு பார்க்கலாம்.. இப்போது நமக்கு வேலை முக்கியம்.. சொர்ணாவிற்காக வா..” நடக்க ஆரம்பித்தான்..

ஆராத்யா அசையாமல் நின்றாள்..

“ஆராத்யா நீ பயப்படுவது போல் எதுவும் நடக்காது.. நான் உனக்கு உறுதி தருகிறேன்..”

ஆர்யன் அளித்த உறுதியின் பின்னும் ஆராத்யாவிற்கு அவன் மேல் நம்பிக்கை வரவில்லை.. அரை மனதோடு தான் அவனோடு நடந்தாள்.. அவனது பைக்கில் மிக ஜாக்கிரதையாக அவனோடு பட்டுக் கொள்ளாமல் தள்ளியே அமர்ந்தாள்..

ஒரு சிறிய வீட்டின் முன் பைக்கை நிறுத்தினான்.. இவன் எங்கு கூட்டி வந்திருக்கிறான்..? இது யார் வீடு..? ஆராத்யா சந்தேகமாக விழி உருட்ட..

“பூக்கடைகளில் வழக்கமான மல்லிகை, முல்லை, கனகாம்பர சரங்கள் தான் இருக்கும்.. இது பூக்கடைக்காரரின் வீடு.. அவர் மனைவி தான் பூ கட்டி தருபவர்.. உள்ளே போய் உனக்கு தேவையான வடிவத்தை சொன்னால் அது போல் கட்டித் தருவார்..” விளக்கி விட்டு அவளை உள்ளே அழைத்துச் சென்று அறிமுகப்படுத்த, அங்கே கூடைகளில் நிரம்பியிருந்த பூக்களில் தனக்கு தேவையான பூக்களை சொல்லி, எளிமையாக ஒரு நவீன ஆரத்தை கட்டி வாங்கிக் கொண்டு வீடு திரும்பினாள் ஆராத்யா..

இவளோண்டு பூவா.. முதலில் முகம் சுளித்த பெரியவர்கள் அந்த ஆரத்தை அவள் சொர்ணாவின் தலையில் வைத்துக் காட்டியதும், ஓரளவு திருப்திப் பட்டுக் கொண்டனர்..

சொர்ணாவிற்கு கல்யாணம் பேசியிருக்கும் மாப்பிள்ளை இளங்கோவின் வீட்டிலிருந்து அன்று அவளைப் பார்க்க வந்திருந்தவர்கள் இளங்கோவின் தந்தை வழி நெருங்கிய உறவினர்கள்.. சிங்கப்பூரில் வசிப்பவர்களாம்.. படித்து பேங்கில் மேனேஜராக இருக்கும் தங்கள் வீட்டுப் பிள்ளைக்கு, இன்னமும் படிப்பையே முடித்திராத இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணா.. எனும் வாதம் அவர்களுக்கு இருந்திருக்கிறது..

திருமணத்திற்கு முன் பெண்ணைப் பார்த்தேயாக வேண்டும் என பிடிவாதம் பிடித்துக் கிளம்பி வந்திருந்தவர்கள்.. பேசியிருந்த பட்டிக்காட்டு பெண் எனும் வார்த்தைக்குள் சிறிதும் சிக்காமல் நவ நாகரீக மணப்பெண்ணாய் முன் நின்ற சொர்ணாவைக் கண்டதும் மனம் குளிர நல்ல வார்த்தைகள் பேசி, வயிறார உணவுண்டு, மனமார வாழ்த்தி சென்றனர்..

வீட்டினர் அனைவரும் ஆராத்யாவை பாராட்ட பரமசிவம் இப்போதும் வாய் திறக்காமலேயே இருந்து கொண்டார்.. சதுரகிரி ஒன்றும் பேசாமல் ஆராத்யாவை பார்த்தபடி இருந்தவர், பின் மெல்ல எழுந்து அவளருகே வந்து மென்மையாக அவள் தலையை வருடிச் சென்றார்.. ஆயிரம் வார்த்தை பாராட்டுகளுக்கு இந்த ஒற்றை வருடல் இணையாகாது.. மனோரமா இதழ் சிரிக்க விழி கலங்கினாள்..

இந்த பாச வருடல் ஆராத்யாவிற்குமே நெகிழ்வு என்றாலும், அவள் அதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை, மென் புன்னகை ஒன்றுடன் மாடியேறி விட்டாள்..

அன்று இரவு மனோரமா தன் அண்ணன் புகழை பேசிப் பேசி ஓய்ந்த பின் தூங்கிப் போனாள்.. மனம் நிறைய வலிகளுடன் தூக்கம் வராமல் புரண்டு கொண்டிருந்த ஆராத்யா எழுந்து அறையை விட்டு வெளியே வந்து பால்கனியில் நின்றபடி இருளாய் கிடந்த தோப்பை வெறித்தபடி நின்றிருந்தாள்..

“வயிறு நிறையாவிட்டால் உறக்கம் வராது..” சொன்னபடி அவளருகே வந்து நின்றான் ஆர்யன்.. அவன் கையில் மூடப்பட்ட கிண்ணம் ஒன்று வைத்திருந்தான்..

“நீ மதியமும் சாப்பிடவில்லை.. இரவும் சாப்பிடவில்லை.. அது எனக்குத் தெரியும்.. வெறும் வயிற்றோடு இருந்தால் தூக்கம் எப்படி வரும்..? இதை சாப்பிட்டு விட்டு போய் படுத்துக் கொள்..”

கிண்ணத்தின் மூடியை திறந்து நீட்டினான்.. அதில் மசாலா வாசனையுடன் சூட்டின் ஆவி மெலிதாய் மேலெழும்ப பசியைத் தூண்டும் மணத்துடன் இருந்தது ஆராத்யாவிற்கு பிடித்தமான நூடுல்ஸ்..

இந்த நடு இரவு நேரத்தில் இதனை வேறு யாரும் சமைத்துக் கொடுத்திருக்க மாட்டார்கள்.. இப்போது இவனாகத்தான் இதனை செய்து எடுத்து வந்திருக்க வேண்டும்..

வீட்டை விட்டு விரட்டுவேன் என சபதமிட்டவன்.. அவளுக்கு பிடிக்காத உணவு வகைகளை சமைக்க வைத்து வலுக்கட்டாயமாக உண்ண வைத்தவன்.. இப்போது இந்த அர்த்த ராத்திரியில் அவளுக்காக நூடுல்ஸ் செய்து கொண்டு வந்து கொடுக்கிறான்..

ஆராத்யா புரியாமல் அவனைப் பார்த்தபடி நின்றாள்..

-(கனா தொடரும்…)

முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...