நீ என் மழைக்காலம் – 14 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 14 | இ.எஸ்.லலிதாமதி

அத்தியாயம் – 14

‘அரிசி சாப்பிடாதே…! சாப்பிட்டால் கல்யாணத்தின் போது மழைவரும்… ’இது அம்மா சொன்ன கதைகளில் ஒன்று. அந்தக் கதையைக் கேட்டு,   ஊறவைத்த அரிசியை அப்படியே பாத்திரத்தில் போட்டு விட்டு ஓடியிருக்கிறாள் நிவேதிதா. இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக வந்தது. நிறைய அரிசி தின்றிருக்கலாமோ என்று தோன்றியது கூட தோன்றியது. காரணம் இவள் திருமணத்தின் போது மழையும் வரவில்லை… சாரலும் அடிக்கவில்லை.  ஆனால் அரிசி சாப்பிட்டால் மழை வரும் என்று ஏன் சொன்னார்கள்? என்று யோசித்துப் பார்த்தாள். ‘திருமணம் என்பது, திருவிழா போன்றது. உறவிர்கள் ஒன்று கூடி மகிழ்ந்திருக்கும் ஒரு தருணம். அந்தத்தருணத்தில் மழை வந்தால்,  வெளியில் செல்ல முடியாது. அணிந்திருக்கும் பட்டாடைகள் நனையும்… வந்த விருந்தினர் வீடு திரும்புவது சிரமம்… இப்படி பல காரணங்களால் திருமணத்தின் போது பெய்யும் மழை இடைஞ்சலாக இருக்கும் என்று கருதிதான்,  அரிசி தின்றால் மழை வரும்’ என்று கதைக் கட்டியிருக்கிறார்கள். அதை அம்மாவும் சொல்லியிருக்கிறாள்.

ஆனால் ஒருநாள் கூடவா நான் சாப்பாட்டுக்கு ஊறவைத்த அரிசி சாப்பிடாமல் இருந்திருப்பேன்? அதற்காகவாவது கொஞ்சம் மழை வந்திருக்கலாம்… என்று தாலி கட்டிய கையோடு கார்த்தியிடம் சிணுங்கினாள் நிவேதிதா.

அவளுக்கு மழைப்பிடிக்கும். மழையினால் பாசி படிந்த கோயில் படித்துறைகளைப் பிடிக்கும்.  தொடர் மழை பெய்து ஊரில் உள்ள ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுவதை பார்க்கப் பிடிக்கும்.  கண்ணாடி போல் ஓடும் வாசல் நீரில் காகிதக் கப்பல் செய்து விடுவது பிடிக்கும். தாழ்வாரத்தில் ஒழுகும் மழைநீரை கைகளில் ஏந்தி விளையாடப் பிடிக்கும். மழைபெய்து முடித்தப்பின் மரத்தில் இருந்து காற்றில் அசைந்து விழும் நீர்த்துளிகளைப் பிடிக்கும்… இப்படி அவளுக்கு பிடித்த நிறைய விஷயங்களை மழை தனக்குள் அடைத்து வைத்துக் கொண்டிருந்தது.

ஆனால் சொல்லிவைத்தாற் போல், அவள் திருமணத்தன்று மட்டும் மழை வரவேயில்லை. அது அவளுக்கு கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும், கார்த்தியை கரம் பிடித்த மகிழ்ச்சி அவள் முகத்தில் வழிந்து கொண்டிருந்தது. அந்த மகிழ்வுடன் தன் கணவனின் அருகில் நிம்மதியாக உறங்கி கொண்டிருந்தாள் நிவேதிதா. .

கார்த்தி தான் உறக்கம் வராமல் சேனலில் ஒன்றில் செய்தியை பார்த்துக் கொண்டிருந்தான். தமிழக அரசியல் நிலவரங்களைக் கடந்து, நெகிழ்வூட்டக்கூடியதாக ஒரு செய்தி ஓடியது.  குட்டியானை ஒன்று ஆற்றில் இருந்து கறையேறுவதற்கு மிகவும் சிரமப்படுகிறது. எவ்வளவு முயன்றும் அதனால் ஏற முடியவில்லை. சிரமப்படும் யானைக்குட்டியை தாய் யானை பார்த்து விடுகிறது. அது தண்ணீரில் இறங்கி, தன் துதிக்கையால் குட்டியின் கால்களை மேலேற்றி தள்ளி விடுகிறது. தரையேறிய யானைக்குட்டி குதுகலமாய் தன் அம்மாவிற்கு முன்பாக காட்டுப்பாதையில் ஈர நடை போடுகிறது….

தாய்ப்பாசம் என்பது மனிதர்களுக்கு மட்டும் அல்ல, அது அனைத்து ஜீவன்களுக்கும் பொதுவானது என்பதை புரிய வைத்தது, அந்த வீடியோ காட்சி.

யானை பற்றிய செய்தியை பார்த்ததுமே கார்த்திக்கு முன் எப்போதோ புத்தகம் ஒன்றில் படித்த செய்தி ஞாபகத்துக்கு வந்தது. இந்த உலகில் பார்க்க, பார்க்க சலிக்காத விஷயங்கள் நிலா, கடல், யானை என அந்த நூலில் குறிப்பிடப்பட்டிருந்தது.  உபடநிடதங்களில் இந்தச்செய்தி இருப்பதாகவும் அந்தநூல் விளக்கம் தந்திருந்தது.

அந்த மூன்று செய்திகளில் இரண்டை அவனால் ஏற்றுக் கொள்ள முடிந்தது. மூன்றாவது விஷயத்தை தான் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

நிலா கொள்ளை அழகு.  அதன் வெண்மையிலும் தண்மையிலும் மனம் மயங்காத மாந்தர்கள் யாரும் இருக்க முடியாது.  குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் ரசிக்கக்கூடிய, விரும்பக்கூடிய ஒன்றாக நிலா இருக்கிறது. அவரவர் கற்பனைக்கும் மனவோட்டத்துக்கும் தகுந்தாற்போல் அதுமுகமாகவோ தட்டாகவோ வட்டப் பொட்டாகவோ, ஒருகுட்டிப் பெண்ணின் கற்பனையில் அம்மா சுட்டு வைத்த தோசையாகவோ இருக்கிறது. நிலவின் காலடியில் காலந்தோறும் கவிஞர்கள் மனதை தொலைத்து, கவிதை வடிப்பவர்களாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள். அதனால் நிலாவை சலிக்காத விஷயமாய் சொன்னதில் வியப்பில்லை.

நீலக்கடலும் எண்ணற்ற ரகசியங்களை தன்னுள் அடக்கி வைத்துக்கொண்டு அமைதியாக இருக்கிறது.  பலநேரம் பொங்குகிறது . சிலநேரம் ஆர்ப்பரித்து அலையாக எழுகிறது. முன்னோக்கியும் பின்னோக்கியும் வந்து,  வாழ்வில் உயர்வும் தாழ்வும் இயல்பு என்பதை அலைகளின் வாயிலாக உலகிற்கு உணர்த்துகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக உலகிற்கு தேவையான நீராதாரத்தை வழங்கும் கருணைத் தாயாக,  மழைக்கு ஆதித்துளியை வழங்குவது கடல் தான். அதனால் கடலையும் சலிக்காதவிஷயமாக ஏற்றுக்கொள்ளலாம்.

ஆனால் இந்த யானையில் என்ன இருக்கிறது? அவ்வளவு பெரிய உருவத்துக்கு துளியும் பொருந்தாத குட்டியாய் இருகண்கள்? முறம் போன்ற பெரிய காது, தூண் போன்ற நான்கு கால்கள்? காதில் எறும்பு நுழைந்து விட்டால் கூட பொறுத்துக் கொள்ள முடியாமல் எப்போது ஆட்டிக்கொண்டே இருக்கும் கரிய யானையைப் போய் எப்படி உபநிடதங்கள் சலிக்காத விஷயம் என்று சொல்கிறது?

அவனுக்கு பெருத்த சந்தேகம் எழுந்தது. பலரிடம் கேட்டுவிட்டான். யாருமே சரியான பதிலை சொல்லவில்லை. அல்லது இவன் திருப்தி அடையும் வகையில் அவர்களின் பதில் இல்லை என்றே சொல்லவேண்டும். இப்போது செய்தியில் யானையைப் பார்த்ததும் அவனுக்கு மறுபடியும் அந்த தீராத சந்தேகம் எழுந்தது. உடனே தன்மீது கைப்போட்டு படுத்திருக்கும் நிவேதிதாவை உலுக்கி எழுப்பினான்.

 “ என்னடா?  மறுபடியும் ஒரு முத்தம் வேணுமா? நீ எனக்கு எவ்ளோ வேணாகுடு…நான் வாங்கிக்கிறேன்….” அவள் காதலிக்கும் போது சொன்ன, அதே பழைய பல்லவியை பாடினாள்.  மல்லாந்து படுத்திருக்கும் அவன் மார்பில் இருந்து கையை எடுத்தவள், அவனுக்கு இன்னும் நெருக்கமாய் வந்தாள்.

“உன் முத்தமெல்லாம் எனக்கு வேணாம்…. ஒரு சந்தேகம் ”  என்றான். அவள் கூந்தல் கலைந்த நிலவாய் இருந்தாள்.

“அடபாவி. ஒருவாரத்திற்குள் கசந்து போய் விட்டேனா நான்?” அவள் அரைகுறை தூக்கத்தில் முனகினாள்.

“ நான் அப்படி சொன்னேனா? நீ தான் தர முடியாதுன்னு சொன்னே… நான் எங்க சொன்னேன்”

“அப்ப நீ சொன்னதுக்கு என்ன அர்த்தம்?”

“நீ மட்டும் எப்பப்பாரு… நீ குடு நான் வாங்கிக்கிறேன்…. என்கிட்ட முத்தம் கேட்காதேன்னு சொல்றியே அதுக்கு என்ன அர்த்தம்…-”

“வேண்டாம்னு சொன்னா தானே தப்பு. நான் தான் குடுன்னு சொன்னேனே… ” அவள் அவிழ்ந்த கூந்தலை முடித்துக்கொண்டு எழுந்து உட்கார்ந்தாள்.

“அடிப்பாவி சண்டை போடறதுக்குன்னே எழுந்து உட்கார்ந்துட்டே போலிருக்கே…”  அவன்போலியாய்பயந்தான்.

“பயப்படாதே மவனே!  முத்தம் கொடுக்கத்தான் எழுந்தேன்… ’’என்று கூறியவள், அவன் கையைப்பிடித்து கடித்து வைத்தாள்.

“ஐயே…  கல்யாணத்துக்கு முந்திகை ஒகே. இப்பவும் அதே தானா? ’’அவன் கேலி செய்ய, அவள் சிரித்தாள்.

‘‘ ஐ .லவ் யூ டா கார்த்தி’’ என்றாள். அவன் உதடு நோக்கி குனிந்தாள்.

அவள் முத்தக்குளியலில் அவன் கேட்டக் கேள்வியை மறந்துவிட்டான்.

அவள் தான் நினைவுப் படுத்தினாள்.

‘‘கேளு… இப்போ என்ன சந்தேகம் உனக்கு ?’’

யானையைப் பற்றி சொன்னான். அது எப்படி சலிப்படையாத ஒன்றாக இருக்கும்?  ஏன் பெண்ணை குறிப்பிடவில்லை? அவள் தானே உலகிற்கு ஆதாரமாக இந்தப்புவியை இயக்குபவளாக இருக்கிறாள்? அப்படி இருக்கையில் ஏன் உபநிடதம் எழுதியவர்கள் யானையைக் குறிப்பிட்டார்கள்? பெண்தானே தாயாய், மனைவியாய், மகளாய், தோழியாய், குழந்தையாய்…  எப்போதும் வியப்புக்குரியவளாய்… இருக்கிறாள். ரசிக்கத் தகுந்தவளாய் இருக்கிறாள்? அப்புறம் ஏன் அவளைக் குறிப்பிடாமல் யானையைக் குறிப்பிட்டார்கள்?

அவன் தனக்கு எழுந்த சந்தேகத்தைக் கேட்டான்.

பெண் என்பவள் நீ குறிப்பிட்ட எல்லாவற்றிலும் அடங்குவாள் தான். ஆனால் அதுமட்டுமே பெண்ணல்ல. அவளுக்கென்று ஆசைகள், நிராசைகள், விருப்பங்கள், கோபதாபங்கள், வெறுப்புகள் இருக்கின்றன. அதை பெண் என்ன செய்வாள்? எதிரில் இருக்கும் நபர் மீது காட்டுவாள். அப்படி காட்டும் போது எதிரில் இருப்பவர் யாராக இருந்தாலும் துவசம் ஆவார்கள். அப்படி துவசம் செய்து துன்பத்தைக் கொடுக்கக் கூடிய ஒரு பெண் எப்படி எப்போதும் சலிப்பூட்டாதவளாக இருக்க முடியும்? யோசிச்சுப்பாரு… எப்போதும் பணத்தாசைக் கொண்டு அளவுக்கு அதிகமாய் ஆசைப்பட்டு கண்டதையும் வாங்கிக் கொடுக்கச் சொல்லி கணவனை நச்சரிக்கும் ஒருபெண்,  எப்படி அவனுக்கு சலிக்காதவளாகத் தோன்றுவாள்? சதா நைநை என்று கணவனை நிம்மதியாக தூங்கவிடாமல் பேசும் ஒருபெண் எப்படி சலிப்படையாதவளாக இருக்க முடியும்? இப்படியே ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒரு காரணம் சொல்லிக் கொண்டு போகலாம் கார்த்தி. அதனால் பெண் இந்த வரிசையில் வர மாட்டாள்….’’ அவள் சொல்வதும் ஒருவகையில் யோசித்துப் பார்த்தால் சரிதான் என்று தோன்றியது கார்த்திக்கு.

என் பொண்டாட்டி சரியான புத்திசாலி தான் என்றவன்,

“மத்தப் பெண்கள் எப்படியோ, ஆனால் நீ எனக்கு எப்போதும் சலிக்காத விஷயமாகத்தான் தோன்றுகிறாய்…’ ‘ அவன் கண்ணடித்தான்.

“இதை இன்னும் ஒரு பத்து வருஷம் கழிச்சு சொல்லு… ” என்றவள்,

“யானையில் ஏதோ தத்துவம் இருக்க வேண்டும். பிரமாண்டமான அதன் உருவத்தில், கருமை போர்த்திய அதன் நிறத்தில், குட்டியான அதன் வாலில்! ஏதாவது இருக்கும் கார்த்தி. இல்லாமல் உபநிடதத்தில் வராது. தெளிவாய் நாளைக்கு யார் கிட்டயாவது கேட்டு சொல்றேன்.   இப்போதைக்கு பேசாமல் படு” என்றாள்.

“முடியாது”  என்றான்.

“அப்புறம்?”  அவள் அவனை சந்தேகமாய் பார்த்தாள்.

“உன் அப்பா அம்மாவுக்கு ஒருபோன் போட்டு ஒரு நன்றி சொல்லிட்டு வரேன்…”

“ அதான் எந்த மறுப்பும் இல்லாமல் கல்யாணம் பண்ணி வச்சுடாங்க இல்ல, அப்புறம் எதுக்கு நன்றி…”

‘‘நீ தானே பயந்துட்டு இருந்தே?  நம்ப கல்யாணம் நடக்குமோ நடக்காதோன்னு? அப்படி எதுவும் இல்லாமல் நடந்ததுக்கு நன்றி சொல்லணுமா வேண்டாமா?’’

‘‘அப்படி சொல்லணும்னா நீ என் அக்காவுக்கு தான் சொல்லணும்…! அவள் ரகசிய திருமணம் செய்து கொண்டதால் தான் அப்பா, அம்மா அவளை கூப்பிட்டு பேசி, ஊர் அறிய இன்னொருவாட்டி கல்யாணம் பண்ணி வச்சாங்க. என்னையும் கருணை கொண்டு‘ நீ யாரையாவது விரும்பறியான்னு கேட்டாங்க. நானும் உன் பேரைச் சொன்னேன்.  இல்லாட்டி மூன்றே வாரங்களில் நம் கல்யாணம் இவ்வளவு சீக்கிரமாக நடந்திருக்குமா…? ’’

“சரி உன் அக்காவுக்கு போன் போடட்டா?”  கல்யாண மயக்கம் இன்னும் தெளியாமல் இருந்தான்.

“அடபாவி!  மணி பன்னிரெண்டு ஆகப் போகுது. அடங்கவே மாட்டியா நீ ? என்றவள்,

“வேணும்னா வேற ஒருத்திக்கு போன் போட்டு தரேன். அவள்கிட்ட பேசு” என்றாள்.

“யாரு?”

“நம்ம கல்யாணப் பத்திரிகையைப் பார்த்துட்டு சாபம் விட்டுட்டு போனாளே, நல்லாவே இருக்கமாட்டீங்கன்னு திட்டிட்டுப் போனாளே, அந்த நிர்மலாவுக்கு ” என்றாள்.

“அம்மா தாயே சரணம்….” அவன் அவளை இறுக்கி கட்டிக்கொண்டான்.

-முற்றும்

முந்தையபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...