எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 13 | ஆர்.சுமதி
அத்தியாயம் – 13
லதா !
குமணனின் முன்னாள் காதலி;. காதலித்து கழற்றிவிட்ட காதலி. எல்லாம் அவளே என்று அவனிருக்க ஏமாற்றிவிட்டுப்போன காதலி. மணமேடை ஆசைக்காட்டி மனநோயாளியாக்கிய காதலி. குடும்பத் தலைவியாவாள் என இவன் நினைக்க குடிபழக்கத்திற்கு ஆளாக்கியவள். குதறி எடுத்தவள். குற்றுயிரும் குலையுயிருமாய் தன் கையில் கொடுத்துவிட்டுப் போனவள்.
எப்படி இங்கு வந்தாள்? ஏன் இங்கு வந்தாள். எங்கும் போக எல்லோருக்கும் உரிமையுண்டு. எதற்காகவும் செல்ல காரணம் பல உண்டு. ஹைதராபாத்திலிருந்து சென்னைக்கு அவள் வந்தது பெரிய விஷயமில்லை. அவளை கோதை சந்தித்ததுதான் பெரிய விஷயம்?
கோதைக்கு லதா வை எப்படித் தெரியும்? ஃபோனில் கோதை பேசியது இவளிடம்தானா? கண்ணகி சிலையின் கீழ் இவர்கள் என்ன பேசினார்கள்?
ஓன்றன் பின் ஒன்றாக ஓடிவந்து மணற்பரப்பில் அமர்ந்திருக்கும் அவளை தொடாமலேயே செல்லும் அலைகளைப் போல் கேள்விகள் ஒன்றன் பின் ஒன்றாக ஓடிவந்து அவளுக்கு விடை சொல்லாமலேயே திரும்பின.
இருட்டிவிட்டது. இன்னும் கடற்கரையினிலேயே அமர்ந்திருக்கிறாள்.
லதா வைப் பார்க்க நேரிடும் என்று கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை. எப்பொழுதாவது எங்காவது எதிர்காலத்தில் பார்க்க நேரிடலாம் என்று நினைத்ததுண்டு. அப்படி பார்க்க நேர்ந்தால் ஏன் என் மகனை நம்பவைத்து கழுத்தறுத்தாய் என்று கேட்க வேண்டும் என்று நினைத்ததுண்டு. ஆனால் இப்படி அவளை கோதையோடு சேர்த்துப் பார்ப்போம் என நினைக்கவில்லை.
ஒரு சமயம் இது லதா இல்லையோ! லதா வை போல் தோற்றம் கொண்டவளோ? லதா வை நான் நேரில் பார்த்ததில்லையே. குமணனுடைய கல்லுர்ரி புத்தகங்களில் சொருகி வைத்திருந்த ஃபோட்டோவை ஒருநாள் உருவி பார்த்ததுதானே. ஆனால்…ஆனால்…அந்த முகம் மறக்கக் கூடிய முகமா? என் மகனை பைத்தியமாக்கிவிட்டுப் போன அந்த முகத்தை என்னால் எப்படி மறக்க முடியும்?
அது லதாவேதான். கோதையும் லதாவும் உண்மையில் தோழிகளோ? அப்படித்தான் இருக்கவேண்டும். லதாதான் குமணனின் காதலி என்று கோதைக்கு தெரியாதே. குமணனின் காதல் கதையை சொன்ன நான் அவளுடைய பெயரைக் கூட சொல்லவில்லையே. ஃபோட்டோவைக் கூட காட்டவில்லையே. அவளும் கதையைக் கேட்டாளே ஒழிய பெயரையோ அவளுடைய ஃபோட்டோவைப் பார்க்கவேண்டும் என்றோ கேட்கவில்லையே. மனதில் வாங்கி விட்டுவிட்டாள் என்பதைப்போல்தானே நடந்துக்கொண்டாள். குமணனின் காதலி என்பது தெரியாமல்தான் இங்கே அவளை சந்திக்க வந்திருக்கிறாளா? லதாவின் நிலையும் இதுதானோ? கோதைதான் தான் ஏமாற்றிவிட்டுப் போன குமணனின் மனைவி என்பது தெரியாத நிலையிலேயே தன் தோழி என்ற முறையில் சந்திக்க வந்திருக்கிறாளா?
சரி அப்படியே வைத்துக்கொண்டாலும் கோதை தன் தோழியை சந்திக்க எதற்காக அவளுக்கு ஆக்ஸிடன்ட் ஆகிவிட்டது அவளுடைய அண்ணன் ஃபோன் செய்தான் என்று பொய் கூறிவிட்டு வரவேண்டும். காரை ஏன் தவிர்த்துவிட்டு ஆட்டோவில் செல்லவேண்டும். எனக்கு மட்டுமல்ல. ட்ரைவருக்குக்கூட எதுவும் தெரியக்கூடாது என்பதற்காகத்தானே.
ஏதோ திருட்டுத்தனம் சத்தியமாக இருக்கிறது. என் மகனை பாதாளத்தில் தள்ள சதி நடக்கிறது. கணவன் தலைவலி என்று கம்பெனியிலிருந்து சீக்கிரமே வந்துவிட்டிருக்கிறான். அவனருகில் இருக்காமல் அப்படி ஓடிவரவேண்டிய அவசியமென்ன? அதுவும் தோழிக்கு ஆக்ஸிடன்ட் என்று பொய் சொல்லிவிட்டு…
ஆக லதா குமணனின் காதலி என்பது கோதைக்கு தெரிந்திருக்கிறது. கோதை சாதாரணத்திற்கும் கீழே உள்ள பெண். சென்னையில் பிறந்து வளர்ந்தவள். லதா சின்னவயதிலிருந்தே ஹைதராபாத்தில் வளர்ந்த தெலுங்கு பெண். இருவரும் தோழிகள் என்ற ரீதியில் தொடர்புப்படுத்தி பார்க்க முடியாது. எனவே நட்பு என்ற கோணத்தில் இருவரும் சந்தித்தார்கள் என்பதை நம்பமுடியவில்லை.
இருவரும் சந்தித்ததன் நோக்கம் குமணனை மையப்படுத்தித்தான். ஸோ…கோதை ஏதோ நாடகம் நடத்துகிறாள். அதில் லதாவும் முக்கிய பங்கு வகிக்கிறாள்.
குமணனுக்கு குடிக்கப் பழகுக்குவது தீடீரென வெடிக்கும் அவனுடைய குடிவெறியை நிறுத்த அல்ல. குடிக்கவைத்து குடிக்கவைத்து அவனுடைய குடிவெறிக்கு காரணம் என்ன என்பதை அவனையே உணரவைக்க.
அவனை குட்டிச்சுவராக்கிய காதலை அறியவைக்க..
பழைய நினைவுகள் மீளத்தொடங்கும்போது இதோ…இதோ…இந்த லதாவை எதிரில் கொண்டு நிறுத்தி அவனை முழு பைத்தியமாக்க.
‘அந்தப் பெண்ணை அவன் திரும்ப பார்க்காமல் இருக்கனும். அப்படி பார்க்க நேர்ந்தா தூக்கநிலைக்கு கொண்டுபோய் அமுக்கி வைக்கப்பட்ட அருடைய நினைவுகள் வேலை செய்யத் தொடங்கும். அப்ப அவர் மறுபடி மனநோய்க்கு ஆளாக வாய்ப்புகள் இருக்கு’ இப்படி டாக்டர் சொன்னதை நான் அவளிடம் சொன்னதை அவள் தன் திட்டத்திற்கு முக்கிய ஆதாரமாக வைத்துக்கொண்டு செயல்படுகிறாளா?
அதையே தன் பகடைக்காயாக பற்றிக்கொண்டு பழைய காதலனுடன் சோந்து போட்ட திட்டத்தின் காட்சிகள்தான் நான் கண்டுக்கொண்டிருப்பதெல்லாமா?
லதா ஹைதராபாத்திலிருந்து ஏன் சென்னைக்கு வந்தாள்? இவர்களுடைய நாடகத்திற்காக அழைத்து வரப்பட்டாளா? குமணனை அவள் சந்திக்க வேண்டும் என அவளுக்கு நாடகக்காட்சிகள் தரப்பட்டதா? அதற்காக கணிசமான ஒருவிலை பேசப்பட்டாதா?
ஏற்கனவே தான் ஏமாற்றிவிட்டுப்போன காதலனுக்கு இன்னும் கெடுதல் செய்ய ஒரு பெண் நினைப்பாளா?
ஏன் நினைக்கமாட்டாள்? பணத்திற்காக எதுவேண்டுமானாலும் செய்வார்கள் இந்தக்காலத்தில். பணத்திற்காகத்தானே கோதை குமணனை திருமணம் செய்துக்கொண்டாள். செய்துக்கொண்டாலும் தன் ஆசைக்கேற்றபடி வாழவேண்டுமென்று காதலனோடு சுற்றுகிறாள்.
ஏதோகாரணத்திற்காக லதா காதலை தூக்கிப்போட்டுவிட்டு குமணனைவிட்டு வேறொருவனை மணந்தாள். இப்பொழுது பணத்திற்காக, அவனுக்கு செய்த துரோகம் போதாதென மீண்டும் படுகுழியில் தள்ள வந்திருக்கிறாள்.
நினைக்க நினைக்க தலை சுற்றியது.
நன்றாக இருட்டிவிட்டதை ஒருவழியாக உணர்ந்தவள் எழுந்துக்கொண்டாள். காரை நோக்கி சென்றபோது அவளுக்கு அந்த யோசனைத் தோன்றியது.
லதாவின் இன்றைய நிலையைப்பற்றி தெரிந்துக்கொள்ள நினைத்தாள்.
குமணனின் கூடப்படித்த நண்பன் யோகேஸ்வரன் ஞாபகத்திற்கு வந்தான். அவன் ஹைதராபாத்தில் குமணன் படிக்கும்போது உடன்படித்தவன். குமணன் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தபோது கூடவே இருந்தவன். இவளுக்கு தகவல் அனுப்பியவன். இப்பொழுது எங்கிருக்கிறான் என்றுத் தெரியவில்லை. ஆனால் அவனுடைய செல் நம்பர் இருக்கிறது. மாற்றாமலிருந்தால் கோடிப் புண்ணியம். காரை ஒரு ஓரமாக நிறுத்தினாள். அவனுடைய எண்ணை தேடினாள். கிடைத்ததும் தொடர்பு கொண்டாள். கோடிப் புண்ணியம்தான். கிடைத்தது.
“ஹலோ…ஆன்ட்டி…” வெகுநாட்களாக விட்டுப்போன தொடர்பின் தாக்கம் குரலில் இருந்தது. பரஸ்பர விசாரணைகள் முடிந்தது. குமணனின் திருமணத்திற்கு ஏன் சொல்லவில்லை என்ற குற்றப்பத்திரிக்கைக்கு சமாதானம் சொல்லிவிட்டு கேட்க நினைத்ததை மெல்ல ஆரம்பித்தாள்.
‘யோகேஷ் உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கனும்”
“கேளுங்க ஆன்ட்டி “
“லதாவைப்பத்தி ஒரு விஷயம் எனக்குத் தெரியனும்”
“லதாவா? யாரு?”
“சரியாப்போச்சு. குமணனுக்குத்தான் டாக்டர் அவளை மறக்க ட்ரீட்மென்ட் கொடுத்தாரா? இல்லை உனக்கும் சேர்த்துக் கொடுத்தாரா? “
“ஸாரி ஆன்ட்டி. டாக்டர் ட்ரீட்மென்ட் கொடுக்காமலேயே நான் அவளை மறந்துட்டேன். அவளைப்பத்தி என்ன தெரியனும்?”
“அவ இப்ப எங்க இருக்கா?”
“என்ன ஆன்ட்டி திடீர்னு அவளைப்பத்திக் கேட்கறிங்க?”
“ஒண்ணுமில்லை. அவளை ஒருநாள் சென்னையில ஒரு ஷாப்பிங் மால்ல பார்த்தேன்.”
“அங்க அவ வேலைப் பார்க்கறாளா?”
“இல்லை. ஏதோ வாங்க வந்திருந்தாள்னு நினைக்கிறேன். ஏன் அப்படி கேட்குறே?”
“ஏன்னா.. அவ நிலை அப்படி. படிப்பை பாதியிலயே விட்டுட்டு காதலிச்சுக்கிட்டு இருந்தவனையும் விட்டுட்டு திடீர்னு கல்யாணம் பண்ணிக்கிட்டாள். அதான்…இப்படி கடைக் கண்ணியில வேலைப் பார்க்காம கலெக்டர் வேலையா பார்க்க முடியும்? அதுவும் இல்லாம அவ குடும்ப சூழ்நிலையும் சரியில்லைன்னு யாரோ சொல்லி கேள்விப்பட்டேன். ரொம்ப பாவமா இருந்தது.”
“அவளுக்கெல்லாம் பாவம்படாதே. என் புள்ளையை ஏமாத்தினவ அவ.”
“அவ சூழ்நிலை அப்படி. பாவம் அவ என்ன செய்வா?”
“அப்படி என்ன சூழ்நிலை?”
“இதையேத்தான் அவளை பலவருடங்கள் கழிச்சு ஒரு நாள் யதேச்சையா சந்திச்சபோது நான் கேட்டேன். அவ சொன்ன பதில் ரொம்ப
கஷ் டமாயிருந்தது. பாதிக்கப்பட்டது குமணன் மட்டும் இல்லை. அவளும்தான்.”
“என்ன சொல்றே?”
“ஆமா. அவளோட அக்கா ரெட்டை குழந்தைகளை பிரசவித்துவிட்டு செத்துப் போயிட்டாளாம். அந்த குழந்தைகளை இவங்க வீட்லதான் வளர்த்திருக்காங்க. ஒருவருஷம் ஆனதும் இவளோட அக்கா புருஷன் வேற கல்யாணம் பண்ணிக்கப்போறதா வந்து நின்னாராம். குழந்தைகளைக் கேட்டாராம். குழந்தைகளை கொடுக்க மனசு இல்லாம குடும்பமே சேர்ந்து இவளை இவளோட அக்கா புருஷ னுக்கு கட்டி வச்சுடுச்சாம். இவளால தன் காதலுக்காக போராட முடியலையாம். அழுதுக்கிட்டே கதை சொன்னா. எனக்கு ரொம்ப பாவமாப் போயிடுச்சு. அவளே மனசொடிஞ்சுப் போயிருக்கும்போது எதுக்கு குமணனைப் பத்தி சொல்லனும்னு அவன் மனநோயால பாதிக்கப்பட்ட விஷயம் எதையுமே நான் சொல்லலை. மறைச்சுட்டேன்.”
இதைக் கேட்டதும் ஏனோ லதாவின் மேல் மனசுக்குள் ஒரு நெகிழ்ச்சி உண்டானது.
“பாவம்.. லதா. விதி அவளை ரொம்பவே சோதிக்குது. அவளோட புருஷனுக்கு ஆக்ஸிடன்ட்ல ரெண்டு கையும் போயிட்டதாக என் ஃபிரண்ட் ஒருத்தன் மூலம் கேள்விப்பட்டேன்.”
“கடவுளே…:”தன்னையுமறியாமல் வேதனைப்பட்டாள் அம்சவேணி.
“சென்னையில அவ புருஷ னோட அக்காயிருப்பதாவும் அவங்க ஆதரவுல வாழலாம்னு சென்னைப் போயிட்டதாவும் கேள்விப்பட்டேன். சென்னையில நீங்க அவளை பார்க்க வாய்ப்பிருக்கு. அவங்க குடும்பத்துல எல்லாருக்கும் ரெட்டைக் குழந்தைங்கதான் பொறக்குமாம். அவளுக்கும் ரெட்டைக் குழந்தை. அதுவும் பொண்ணுங்க. அக்கா புள்ளைங்களும் பொண்ணுதானாம். இந்தக் காலத்துல நாலு பொண்குழந்தைகளை வச்சுக்கிட்டு புருஷனுக்கும் கை இல்லாத நிலைமையில படிப்பையும் பாதியில விட்ட ஒரு பொண்ணு எப்படி வாழ்வா.” பெருமூச்சைவிட்டுவிட்டு தொடர்பைத் துண்டித்தான்.
இப்பொழுது லதா மேல் இதுவரை இருந்தகோபம் குறைந்திருந்தது.
லதாவிடம் பண பேரம் பேசி குமணனை சந்திக்க ஏற்பாடு செய்திருக்க முடியாது. லதாவை வைத்துத்தான் குமணனை வீழ்த்த முடியும் என்று எண்ணி அவளுடைய செல் நம்பரை கோதை தேடி எடுத்திருக்கலாம். அவளுடைய எண் குமணனின் செல்லில் கிடையாது. அப்பொழுதே அவற்றையெல்லாம் மருத்துவரின் ஆலோசனைப்படி அழித்துவிட்டாள். கோதை குமணனின் பழைய டைரிகளைத் தேடி எங்கிருந்தாவது எடுத்திருக்கலாம். அந்த எண்ணை வைத்து லதாவை தொடர்புக் கொண்டிருக்கலாம். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கலாம். குமணன் அவளால் மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறான் என ஏதாவது கதைவிட்டிருக்கலாம். நீ வந்து சந்தித்தால் அவன் சரியாகிவிடுவான் என வேண்டியிருக்கலாம். அந்தக் கதையை நம்பி தன் பழைய காதலன் குணமடைய அவள் வர சம்மதித்திருக்கலாம். இதுதான் உண்மை.
‘கூடாது. இந்த சந்திப்பு நிகழக்கூடாது.’
‘எப்பொழுதோ இருந்த மனநோய் இப்பொழுது இருப்பதாக கோதை கதைக் கட்டியிருப்பாள். லதா வின் சந்திப்பு ஏற்பட்டால்தான் அவன் நிஜமாகவே மறுபடி மனநோய்க்குத் தள்ளப்படுவான். பைத்தியமாவான். சைக்காலஜி படித்தவள். எப்படி எதை நிகழ்த்தினால் ஒரு மனிதன் பாதிக்கப்படுவான் என கோதைக்குத் தெரியும்.
‘விடமாட்டேன். இந்த சந்திப்பு நிகழ விடமாட்டேன்.’
வீட்டை நோக்கி காரை வேகமாக செலுத்தினாள், வீட்டில் அவளுக்கு இன்னும் அதிர்ச்சியும் ஆபத்தும் காத்திருப்பது தெரியாமல்.
-(தொடரும்…)
முந்தையபகுதி – 12 | அடுத்தபகுதி – 14