எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 14 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 14 | ஆர்.சுமதி

அத்தியாயம் -14

ண்ணங்கள் எரிமலையானதில் உறக்கம் ஊரைவிட்டு ஓடிய காதலர்களைப் போலானது.

உலவிக்கொண்டிருந்த கால்கள் ஓரிடத்தில் உட்கார மறுத்தது. நடந்து நடந்து சோர்ந்தாலும் படுத்துக்கொள்ள முடியவில்லை.

அம்சவேணி  பலம் இழந்துப் போனாள். அடிக்கடி தலைசுற்றுவதைப்போல் இருந்தது. தாறுமாறாக யோசனை தோன்றிக்கொண்டேயிருந்தது. தவிர்க்கமுடியாமல் தடுமாறினாள்.

மாடிப்படிகளில் காலடி ஓசை கேட்டது. திரும்பிப் பார்த்தபோது குமணன் இறங்கி வந்துக்கொண்டிருந்தான். கையில் ஏதோ ஒரு புத்தகத்தை வைத்திருந்தான்.

“என்னம்மா தூங்கலையா?” கேட்டபடியே கீழே வந்தான்.

“வயசானா வர்ற வியாதியிலே இதுவும் ஒண்ணு. இப்பவெல்லாம் சீக்கிரம் தூக்கமே வர்றதில்லை.” வாட்டி வதைக்கும் மனஉளைச்சலால் வராத தூக்கத்தை வயதின் காரணமாய் வரும் வியாதிகளின் தலையில் தூக்கிப்போட்டாள் அம்சவேணி.

“எனக்கு தூக்கம் வராதது இருக்கட்டும். மணி ஒண்ணாகப்போவுது. இன்னும் நீ ஏன் தூங்கலை?”

“மதியானம் தலைவின்னு வீட்டுக்கு சீக்கிரமே வந்துட்டேன் இல்லையா? அப்ப  தலைவலி மாத்திரையைப் போட்டுக்கிட்டு நல்லா தூங்கிட்டேன். அதான் இப்ப தூக்கம் வரலை.” என்றபடி சோபாவில் அமர்ந்தான். அம்சவேணியும் உலவுவதைவிட்டு அவனருகே அமர்ந்தாள்.

“அம்மா இதைப் பார்..”

கையிலிருந்த புத்தகத்தைத் திறந்தான். அதிலிருந்து ஒரு புகைப்படத்தை உருவி அவளெதிரேக் காட்டினான்.

பார்த்த அம்சவேணி தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள். பிடுங்காதக் குறையாக அந்த புகைப்படத்தை வாங்கியவள் கை நடுங்க உற்றுப் பார்த்தாள்.

குரல்வளையை யாரோ நெரிப்பதைப் போல் இருந்தது. அந்த புகைப்படத்தில் இருந்தது…?  லதா

மறுபடி மறுபடி உற்றுப் பார்த்தாள். லதாவேதான்.

யாரை குமணன் பார்க்கக் கூடாது என்று நினைத்தாளோ, யாருடைய நினைவுகள் அவனுக்கு வரக்கூடாது என பயந்தாளோ  அவளுடைய புகைப்படம் அவனுடைய கையில்.

எப்படி..எப்படி..இது இவன் கையில்? எங்கிருந்து கிடைத்தது?

“அம்மா இந்தப் பொண்ணு யாரு?” அம்மாவின் அதிர்வு நிலைகள் தெரியாமல் கேட்டான்.

அவனுடைய கேள்விக்கு பதில் சொல்லாத அம்சவேணி “இந்த ஃபோட்டோ உனக்கு எப்படி கிடைச்சது?” என்றாள்.

“கோதைதான் கொடுத்தா”

கொள்ளிக் கட்டையை உச்சந்தலையில் வைத்ததைப்போல் இருந்தது. ‘கோதை கொடுத்தாளா? கோதைக்கு எப்படி இந்த ஃபோட்டோ கிடைத்தது? எங்கிருந்துக் கிடைத்தது?  லதாவிடமிருந்து வாங்கினாளா? இல்லை..குமணனின் அறையிலிருந்து பழைய குப்பைகளில் தேடி எடுத்தாளா?

எதற்காக குமணனிடம் இதை தரவேண்டும்?

“அம்மா… கோதை இந்த ஃபோட்டோவை என்கிட்டக் கொடுத்து இது யார்ன்னு கண்டுபிடிங்கன்னு சொன்னா”

வயிற்றில் கத்தி சொருகியதைப் போலிருந்தது இந்த வார்த்தைகள்.

“எனக்கு யாருன்னு தெரியலைன்னு சொன்னேன். இவ எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவதான்னு சொன்னா. என்னால கண்டுப்பிடிக்க முடியலை. யாரும்மா இவ?” கேள்விக் கேட்ட மகனை மலங்க மலங்கப் பார்த்தவண்ணமேயிருந்தாள் அம்சவேணி. பதில் சொல்லமுடியவில்லை.

“யாரும்மா இவ நமக்கு சொந்தமா?”மகன் மறுபடி கேட்க பதில் சொல்லவேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப் பட்டாள் தாய்.

‘மகனுக்கு இவள் யார் என்றுத் தெரியவில்லை அப்படியானால் அவனுக்குள் லதாவைப் பற்றிய நினைவுகள் இல்லை. அமுக்கப்பட்ட நினைவுகள் அப்படியே செயலிழந்து இருப்பது தெரிகிறது.

“நல்லா ஞாபகப்படுத்திப்பாருங்க. யாருன்னு தெரியும்னு கோதை சொன்னா. நானும் ஞாபகப்படுத்திப் பார்க்கிறேன். யாருன்னே தெரியலைம்மா?”

இதயத்தை கையில் பிடித்துக்கொண்டாள் தேவலாம் போலிருந்தது.

‘இந்த ஃபோட்டோவைக் கொடுத்து ஞாபகப்படுத்திப் பார் என்று எதற்கு சொன்னாள்?  பழைய காதலியைப் பற்றிய ஞாபகம் வந்தால் அவன் பழையபடி மனநலம் பாதிக்கக் கூடும் நீதான் அப்படியேல்லாம் எதுவும் ஏற்படாமல் உன் அன்பாலும் காதலாலும் அவனை நிலை குலையாமல் வைத்திருக்கவேண்டும் என்று நான் கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டிருக்க அவளோ பழைய காதலியை தேடிக் கண்டுப்பிடித்து சந்தித்துவிட்டு வருகிறாள். தேவை இல்லை என்று தூக்கிப் போட்ட ஃபோட்டோவை தேடிக் கண்டுப்பிடித்து அவன் கையில் கொடுத்து யார் என கண்டுப்பிடி என்கிறாள்.

அப்படியானால் என்ன அர்த்தம்? ஞாபகப்படுத்திப் பார்த்தால் நினைவிற்கு வருவாள் என்று ஏன் சொல்லவேண்டும்? அமுக்கப்பட்ட அவனுடைய நினைவுகளை கிளறும் முயற்சித்தானே இது. நினைவுகள் மேலெழுந்தால் அவனுடைய நிலை பாதிக்கப்படும் என்பது நிச்சயம்தானே? அப்படியானால் அவள் லதாவை தேடிக் கண்டுப்பிடித்து சந்தித்ததும் இதற்குத்தான்.

லதாவையும் குமணனையும் எப்படியாவது சந்திக்க வைக்கவேண்டும்? சந்திக்கவைத்து குமணனை குப்பையை கலைப்பதைப் போல் கலைத்துவிடவேண்டும்.

பைத்தியமாய் மாற்றிவிட்டு தான் நினைத்தபடி தன் காதலனோடு குமணனின் செல்வத்தில் குதூகலமாக வாழவேண்டும். நாசக்காரி.

“அம்மா…நானும் ரொம்ப யோசிச்சுப் பார்த்தேன். இந்த ஃபோட்டோவ்ல இருக்கறது எனக்கு யாருன்னு தெரியலை. ஆனா எனக்கு இவளைப் பார்த்த மாதிரி இருக்கு. பழகின மாதிரி கூட இருக்கும்மா. இவளோட பேர் கூட எனக்குத் தெரியும்னு தோணுது. ஆனா…ஞாபகம் வரமாட்டேங்குதும்மா”

அம்சவேணியின்  தாடை இறுகியது.

“இந்தப் பொண்ணை உனக்குத் தெரியும்.”

“யாரும்மா?”

“சங்கீதாவோட ஃபிரண்ட். நிறைய தடவை நம்ம வீட்டுக்கு  சங்கீதாவோட சேர்ந்து வந்திருக்கா. “

“எப்போ?’

“அது பல வருஷத்துக்கு முன்னாடி. இப்ப அவ கல்யாணம் ஆகி அமெரிக்காவ்ல செட்டில் ஆயிட்டா. அதனால உனக்கு மறந்திட்டு. சங்கீதா இங்க வந்திருந்தப்ப இந்த ஃபோட்டோவை மிஸ் பண்ணியிருக்கலாம். கொடு அதை அவ வந்தா நான் கொடுத்திடறேன். ஃபிரண்ட்டோட ஃபோட்டோன்னா ரொம்ப சந்தோஷப்படுவா.” வாங்கி வைத்துக்கொண்டாள்.

வஞ்சமாய் மனதுக்குள் கொந்தளித்தாள்.

‘கோதை…உன் திட்டமெல்லாம் தௌளத்தெளிவாகத் தெரிந்துவிட்டது. இந்த ஃபோட்டோவை வைத்தே உன்னை புரட்டி எடுக்கிறேனா இல்லையா பார். கள்ள புருஷனுக்காக கட்டிய  கணவனையே கல்லைத் தூக்கிப் போட்டுக்கொள்ளும் கேவலமான பெண்களின் பட்டியலில் சோந்துவிட்ட உன்னை நான் சும்மா விடப் போவதில்லை’

“கோதை என்ன பண்றா?” கொலை வெறியுடன் கேட்டாள்.

“அவ அடிச்சுப் போட்ட மாதிரி தூங்கறா.”

‘துரங்கறாளா? நம்முடைய நிம்மதியையெல்லாம் கெடுத்து குட்டிச்சுவராக்கத் திட்டம் போட்டுவிட்டு நிம்மதியாகத் தூங்குகிறாளா?’

அவளை இப்பொழுதே என்னவென்றுக் கேட்கிறேன். இந்த நடுராத்திரியிலேயே நாயை நடுரோட்டுக்கு அனுப்பலை…நான்…அம்சவேணி இல்லை.

ஆத்திரத்துடன் வெறிகொண்டவளாய் எழுந்தாள். எரிமலை எடுத்தடி வைத்ததைப்போல் வைத்தாள். எல்லாம் ஒரு சில அடிகள் வரைதான். மாடிப்படிவரைக் கூட போக முடியவில்லை.

வேகம் கொண்ட கால்கள் போலியோ அட்டாக் வந்ததைப்போல் துவண்டன. நெரித்து கொல்லும் வெறிக்கொண்ட கைகள் பக்கவாதம் வந்ததைப் போல் தளர்ந்தன.

அப்படியே மயங்கி சரிய “அம்மா….” என்று ஓடி அவளைத் தாங்கினான் குமணன்.

-(தொடரும்…)

முந்தையபகுதி – 13 | அடுத்தபகுதி – 15

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...