எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 12 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 12 | ஆர்.சுமதி

அத்தியாயம் -12

நாய் கடிக்கு மருந்து வாங்க போய் நரி கடித்த  கதையானது. தலைவலிக்கு தைலம் கேட்கப் போனவள் தலையையே தண்டவாளத்தில் கொடுத்ததைப்போல் கீழே வந்தாள். சோபாவில் சாய்ந்தாள்.

பார்த்த காட்சி பயங்கர கோபத்தை உண்டாக்கியிருந்தது. உள்ளே புகுந்து அப்படியே கோதையின் கன்னத்தில் பளார் பளார் என அறைய வேண்டும் போலிருந்தது. அடக்கிக் கொண்டு அங்கிருந்து வந்துவிட்டாள்.

உள்ளே கண்ட காட்சி உண்டாக்கிய அதிர்ச்சி உயிரையே அசைத்ததைப் போலிருந்தது. ஊற்றிக் கொடுத்துக் கொண்டிருந்தாள் கோதை. ஒரு கையில் மது பாட்டில். இன்னொரு கையில் கோப்பை. தந்த கோப்பையை தவம் போல் வாங்கி வாயில் வைத்த வண்ணமிருந்தான்  குமணன்.

எத்தனை நாட்களாய் நடக்கிறது இந்த கூத்து. கோவாவில் நடந்ததற்கு கொந்தளித்தவள் இப்பொழுது கோப்பையில் ஊற்றிக் கொடுக்கிறாள் ஏன்?

மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் என்ன செய்கிறோம் என்ற நினைவில்லாமலேயே குமணன் செய்த தவற்றை….

கோவாவில் ஏதோ ஒரு கொந்தளிப்பின் உந்துதலில் கண் மண் தெரியாமல் செய்த தவற்றை…

இப்பொழுது தெரிந்தே செய்கிறான். இல்லை…செய்விக்கப்படுகிறான்.

கட்டிய மனைவியே ஊற்றிக் கொடுக்கிறாள். கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டேனே. ‘கோதை அவன் வாழ்க்கை உன் கையில்தான் இருக்கிறது என்று. பழைய நிலைக்கு திரும்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அவனுடைய மறைக்கப்பட்ட பக்கங்களை மனைவி என்ற முறையில் அவள் அறிய வேண்டும் என எல்லாவற்றையும் சொன்னேனே! அதுதான் நான் செய்த தவறோ? சொல்லியிருக்கக் கூடாதோ?’

பணத்தைக் காட்டி ஒரு மனநோயாளியை கட்டி வைத்துவிட்டார்கள் என நினைக்கிறாளா? தன்னை ஏமாற்றிவிட்டதாக எண்ணிவிட்டாளா? தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க பழைய காதலை புதுப்பித்துக்கொண்டுவிட்டாளா?

குமணனை பழைய நிலைக்கு கொண்டுவந்து ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டு காதலனோடு கூத்தடிக்கலாம் என முடிவு செய்துவிட்டாளா? திட்டங்களை வகுத்துக்கொடுத்தவன் அந்த வாலிபனா? இந்த கிழவிக்கு

“அத்தை ராத்திரிக்கு சப்பாத்தி செய்திடவா?” என்ன தெரியப்போகிறது என்ற இளப்பமா? ஈஸியாக ஏமாற்றிவிடலாம் என்ற எண்ணமா?

என் மகனை காப்பாற்று என்று கையெடுத்துக் கும்பிட்டால்….இவள் இருக்கும் நிலையையே இன்னும் மோசமாக்கப் பார்க்கிறாளா? இருக்கட்டும். எடுத்தேன் கவிழ்த்தேன் என எதுவும் செய்யக் கூடாது.  கையும் களவுமாகப் பிடிக்கிறேன். பிறகு கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறேன்.

சூளுரைத்துக் கொண்டாள்.

கேட்ட கோதையைப் பார்த்தாள் அம்சவேணி.’கேட்கலாமா?’ ‘கேட்டேயாகவேண்டும்’

“கோதை இப்படி உட்கார். உன்கிட்ட ஒருவிஷயம் பேசனும்”

உட்கார்ந்தாள். “சொல்லுங்க அத்தை”

“குமணன் இப்ப குடிக்க ஆரம்பிச்சிருக்கானா?’

கோதையின் முகத்தில் மெல்லிய அதிர்ச்சி பரவுவதை படித்தாள்.

“ஏன் அத்தை இப்படி கேட்கறிங்க?”

“ஒன்னுமில்லை. அன்னைக்கொருநாள் அவன் பேசும்போது நாத்தம் அடிச்சமாதிரி இருந்தது. அதான் கேட்டேன்.”

“அவரா குடிக்கலை அத்தை. நான்…நான்தான்…அவருக்கு தினமும் கொஞ்சமா குடிக்க கொடுக்கறேன்.”

தெரிந்த விஷயம்தான். தெரியாத மாதிரி அதிர்ச்சியடைவதைப் போல் அடைந்தாள்.

“என்ன நீ தர்றியா?’’ என்ன தைரியம். உண்மையை எவ்வளவு தைரியமாக ஒத்துக்கொள்கிறாள்?’ மனதில் நினைத்துக்கொண்டாள்.

“ஆமா அத்தை..அவர் மனநலம் சரியில்லாதபோது பயங்கரமா குடிச்சிருக்கார். குணமான பிறகு அவருக்கு தான் அப்படி ஒரு குடிகாரனா இருந்தது கூட ஞாபகம் இல்லை. அதனால குடிப்பழக்கமே தனக்கு இல்லைன்னு சொல்றார். ஆனா…அன்னைக்கு கோவாவ்ல பார்ட்டியில மது பாட்டில்களைப் பார்த்ததும் அவருடைய மூளை பழைய குடித்த ஞாபகங்களை தூண்டிவிட்டிருக்கு. அதனால அவர் கண்ட்ரோல் இல்லாம குடிச்சாரு. இப்படி ரொம்ப நாளா குடிக்காமலேயேயிருந்து திடீர்ன்னு ஒருநாள் கண்டபடி குடிச்சா ஹார்ட் அட்டாக் வர்ற கூட வாய்ப்பிருக்கு. அதனால வாரத்துல ஒரு நாள் கொஞ்சமா ஒரு கால் க்ளாஸ்  குடிச்சா பார்ட்டி பங்ஷன்ல பாட்டிலைப் பார்க்கும்போது அப்படி ஒரு வெறி அவருக்குள்ள வராது.  இன்னும் சொல்லப்போனா குடிக்கக் கூடாதுன்னு நினைச்சா கன்ட்ரோல் பண்ற பவர் கூட வரும்.”

கோதையின் பேச்சு அம்சவேணிக்கு ஆச்சரியத்தை அளித்தது. ‘இவள் பேசுவதில் ஏதாவது அர்த்தம் இருக்கிறதா? இல்லை…அழகாகப் பேசி என் அறிவை மழுங்க செய்கிறாளா?’

‘ஊற்றி கொடுத்து உன் புருஷனை தரைமட்டமாக்கிவிடு. கேட்டால் இப்படி ஒரு கதையை எடுத்து விடு என்று காதலன் சொல்லிக் கொடுத்தானா?’

“ஆமா…இதெல்லாம் உனக்கு எந்த டாக்டர்சொன்னது?”

“அம்மா வீட்டுக்குப் போனப்ப நான் ஒரு சைக்காட்ரிஸ்ட்டை கன்சல்ட் செய்தேன். அவர் சொன்னதுதான் இது.  மதுவுக்கு அடிமையானவங்களை அதிலிருந்து மீட்டெடுக்கனும்ன்னா  ஒரேடியா மதுவை நிறுத்தக்  கூடாது. அதே மாதிரிதான் இதுவும். குடிக்கனும்கற வெறியை கட்டுப்படுத்தனும்ன்னா  இப்படித்தான் செய்யனும். நான் அவருக்கு கொடுக்கறது மது இல்லை. மருந்து”

‘தலைகீழாக புரட்டித்தள்ள தக்க காரணம் சொல்கிறாளோ?’

“அத்தை.. அவர்க்கிட்ட இதைப்பத்தி எதுவும் கேட்காதிங்க. உங்களுக்கு எதுவும் தெரியக் கூடாதுன்னு நினைக்கிறார். முதல்ல இப்படி குடிக்கவே மாட்டேன்னு சொன்னார். நான்தான் ஏதேதோ சொல்லி அவரை சம்மதிக்க வச்சேன்”

பொய்யுரை முடிந்ததைப்போல் எழுந்துக்கொண்டாள். சப்பாத்தி செய்ய போய்விட்டாள். சப்பாத்திக்கள்ளியில் கைவைத்ததைப்போல்  அம்சவேணி அமர்ந்திருந்தாள்.

அடுத்து வந்த நாட்கள் அம்சவேணிக்கு பெரும் அவஸ்தையாக மாறின. பொழுதுகளெல்லாம் பழுதாகின. விடியும்போதே வேதனையோடு விடிவதைப்போல் இருந்தது. பழக்கமாகிப் போன வழக்கமான வேலைகள் கூட செய்ய முடியாமல் தடுமாற வைத்தன.

பூஜையறையில் கூட மனம் ஒன்றவில்லை. கோதையின் பேச்செல்லாம் கபடநாடகமாய் தோன்றியது. அவள் நடமாட்டத்தை வேவு பார்த்தது விழிகள். மனம், க்ரைம் மன்னன் ராஜேஷ் குமாரின் விவேக்கைப் போல் எதையோ துப்பறிய துடித்துக்கொண்டிருந்தது.

மத்தியான வேளைகளில் மல்லாந்து படுத்து தூங்க முடியவில்லை. சைக்காலஜி படித்திருக்கிறாளாம். சனியன் பிடித்தவள். சைத்தான் வேலை செய்கிறாள்.

வாசலில் வந்து நின்ற கார் சத்தம் உணர்வுகளை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது.

குமணனின் கார். ‘என்ன மூனு மணிக்கெல்லாம் வந்துவிட்டான். பொண்டாட்டியை கூட்டிக்கிட்டு எங்காவது போகப் போகிறானா?’

குமணனை நினைக்கும்போது  பாவமாக இருந்தது. ‘மகனே… உன்னை அவள் ஏமாற்றுகிறாள். அதுதெரியாமல் நீ அவளோடு உல்லாசமாக சுற்ற நினைக்கிறாய். பொறு மகனே பொறு. அவளுடைய முகத்திரையை கூடிய விரைவில் கிழிக்கிறேன்’

படியேறி வந்த மகனைப் பார்த்துக் கேட்டாள்.

“என்னப்பா…இன்னிக்கு சீக்கிரமா வந்துட்டே?”

“ப்ச்… ஒரே தலைவலிம்மா. அதான் வந்துட்டேன்” சொல்லிவிட்டு அவளைத்தான்டி மாடிக்கு சென்றவனைப் பார்த்துக் கேட்டாள்.

“ காபி தரட்டுமா? குடிச்சா கொஞ்சம் தலைவலி தீரும்”

“ம்…” என்று கூறிவிட்டு  மேலே சென்றுவிட்டான்.

சமையலறைக்கு வந்து காபி தயாரித்துக் கொண்டு மேலே வந்த போது அறைக்கு வெளியே பால்கனி பக்கமாக நின்றுக்கொண்டு கோதை செல்ஃபோனில் யாரிடமோ பேசிக் கொண்டிருந்தது காதில் விழுந்தது.

“நீங்க கண்ணகி சிலைக்கிட்ட வெயிட் பண்ணுங்க. நான் உங்கக்கிட்ட முக்கியமான விஷயம் பேசனும்;. இன்னும் கொஞ்ச நேரத்துல நான் அங்க வர்றேன்.”

காதில் விழுந்த இந்த வார்த்தைகள் அம்சவேணியை துணுக்குற வைத்தது.

‘யாரிடம் பேசுகிறாள்? அந்தக் காதலனிடமா? கண்ணகி சிலையிடம் காத்திருக்க சொல்கிறாள். கற்பரசியின் காலடியில் கள்ளக்காதலா? கொஞ்சநேரத்தில் வருகிறேன் என்றது கொஞ்சுவதற்காகவா?’

புருஷன் தலைவலி என்று வந்திருக்கிறான்…..இவளோ தலைகீழ் வாழ்க்கை வாழ நினைக்கிறாள்.

கண்டுக்கொள்ளாதைப்போல் மேற்கொண்டு நடந்தாள்.

“என்ன அத்தை காபியா?” செல்லை அவசரமாக நிறுத்திவிட்டு அருகே வந்தாள்.

“ம்;;.. குமணன் தலைவலின்னு சொன்னான். அதான்.”

“கொடுங்க அத்தை நான் கொடுக்கறேன். “ பிடுங்காதக் குறையாக காபி கோப்பையை வாங்கிக்கொண்டாள்.

“தலைவலி மாத்திரை இருந்தா கொடு”

“சரி அத்தை” கீழே வந்தாள் அம்சவேணி. கோதையின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கினாள். சற்று நேரத்தில் வேறு சேலைக்கு மாறி தோளில் மாட்டிய பேகுடன் கீழே வந்தாள்.

“அத்தை..”

“என்னம்மா…எங்கோ கிளம்பிட்ட மாதிரி இருக்கு”

“ஆமா அத்தை. என்னோட பிரண்ட் சசின்னு பேரு. அவளுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சாம் ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணியிருக்காங்களாம். அவளோட அண்ணன் ஃபோன் பண்ணினான். நான் போய் பார்த்துட்டு வந்திடறேன்”

‘கண்ணகி சிலைக்கிட்ட புதுசா ஹாஸ்பிடல் ஓப்பன் பண்ணியிருக்காங்களா?’ வாய்வரை வந்த வார்த்தைகளை விழுங்கிக் கொண்டாள்.

“அட..டா..” அனுதாபம் காட்டினாள்.

“டிரைவரைக் கூப்பிடறேன் காரை எடுத்துக்கிட்டுப் போ” என்றாள்.

“வேண்டாம் அத்தை. நான் ஆட்டோவ்ல போய்க்கறேன்”

‘அதானே…ட்ரைவரைக் கூட்டிக்கிட்டுப் போனா நீ யாரை சந்திக்கிறேன்னு தெரிஞ்சுடும் இல்லை?’ பற்களைக் கடித்து கேள்வியை பதுக்கிக்கொண்டாள் மனதிற்குள்ளேயே.

அம்சவேணியும் அதற்குமேல் அவளை வற்புறுத்தவில்லை. காரணம் அவளுக்கு கார் வேண்டுமே. கோதையை பின்தொடர! குட்டை உடைக்க.

‘போடி பின்னாலேயே வர்றேன். கடற்கரையிலேயே உனக்கு சமாதிக் கட்டுகிறேன்’ கறுவிக் கொண்டாள்.

கோதை சென்ற சில நிமிடங்களிலேயே காரை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள். கண்ணகி சிலைக்கு சற்று தூரத்திலேயே காரை நிறுத்திவிட்டு இறங்கி நடந்தாள். தூரத்திலிருந்து பார்க்கும்போதே தெரிந்தது கோதை யாரோ ஒரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருப்பது.

நெருங்கி மறைந்து நின்று பார்த்தபோது தூக்கிவாரிப்போட அதிர்ந்தாள்.

அவள்…அவள்…

லதா !

-(தொடரும்…)

முந்தையபகுதி – 11 | அடுத்தபகுதி – 13

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...