சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

 சர்வதேச பெண் குழந்தைகள் தினம்

பன்னாட்டுப் பெண் குழந்தைகள் நாளின்று!👧

பெண் குழந்தைகளை கவுரவிப்பதற்காகவும், அவர்களை ஊக்குவிப்பதற்காகவும் சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ஐ.நா சபையால் 2011 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 2012 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் 11 ஆம் தேதி சர்வதேச பெண் குழந்தைகள் தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பெண் சிசுக் கொலைகளை தடுத்து, பாலின சமத்துவமின்மையை குறைக்கவும், பெண் குழந்தைகளுக்கான சமத்துவம், உரிமையை நிலைநாட்டவும் இந்த நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நாளில், பெண் குழந்தைகள் குறித்து சமூகத்தில் இருக்கும் பிற்போக்கு எண்ணங்களை போக்கி, ஆரோக்கியமான சமூகமாற்றத்தை உருவாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாயந்த சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தில் சமூகத்தில் அவர்களுக்கான அங்கீகாரம் மற்றும் முழுச் சுதந்திரம் கிடைக்க, ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். அதேநேரத்தில், பெண் குழந்தைகள் ஒவ்வொருவரையும் இந்நாளில் வாழ்த்தி, கவுரவிக்க வேண்டும்.

இந்தக் காலத்தில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நிர்வகிக்க முடியும் என்ற நிலை வந்து விட்டது. வேலைக்கு போகிறோம், சாம்பாத்திக்கிறோம், என்று சொல்லிக்கொண்டு பெண் குழந்தைகளை அலட்சியமாக விட்டு விடுதல் கூடாது. பெண் குழந்தைகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் தாய்மார்கள் கவனிக்க வேண்டும். அதற்கென்று எதற்கெடுத்தாலும் கண்டிப்பு கூடாது. பெண்குழந்தைகளுக்கு கற்றுத்தருவது போல் ஆண் குழந்தைகளையும் சிறுவயது முதலே விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும்.

பெண் குழந்தைகளை 18 வயது நிறைவதற்கு முன் திருமணவாழ்கையில் தள்ளப்படுவது தவறு. இவை இன்று சதவிகித அளவில் குறைந்தாலும் இன்றளவும் சரியான தீர்வினை எட்டவில்லை. இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 336 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக தேசிய குற்றப்பிரிவு மையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளிப்பால் கலாச்சாரமும், கரும்பலகை இல்லா மாநிலமும் இன்றளவும் இந்தியாவில் இருக்கத்தான் செய்கின்றன. இவை தடுக்கப் பட்ட போதிலும் இன்னும் வேர்கள் களையவில்லை.

எனவே பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளை போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்விற்கும் நாமும் துணையாக நிற்போம்.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...