கலைஞர் உரிமை தொகை திட்டம் குறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் நெகிழ்ச்சி…
மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் பேசினார்.
சென்னை கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியதாவது:- கொளத்தூர் தொகுதியில் இருக்கிற இளைஞர்களும், மாணவர்களும் தங்களுடைய திறன்களை மேலும் வளப்படுத்திக் கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றிடவேண்டும் என்கின்ற நோக்கத்தோடுதான், இந்த அகாடமியை, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி என்கிற பெயரில் தொடங்கியுள்ளோம்.
நீட் என்ற கொடும் தேர்வுக்கு என்றைக்கு நாம் முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ, அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும். நீட் தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் அண்மையில் மறைவெய்திய மாணவர் ஜெகதீஸ்வரன் வரைக்கும் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.
தமிழக மாணவர்கள் கல்வியில் அறிவாற்றலில் சிறந்தவர்களாகாவும் தனித்திறமை கொண்டவர்களாகவும் வளர வேண்டும். அதற்காகவே, நான் முதல்வன் என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது என்னுடைய கனவுத்திட்டம். ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின் பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை இன்னும் 3 நாட்களுக்குள் தொடங்கி வைப்பேன்.
அதாவது, வருகின்ற 15-ந்தேதி அண்ணா பிறந்த நாளன்று, அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு, அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம். அந்த வகையில், அந்தத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள். ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள். இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். ஏழை, எளிய பெண்களுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லாத பொருளாதார விடுதலையையும் இந்தத் திட்டம் நிச்சயமாக அளிக்கப் போகின்றது. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.