ஹவுஸ் அரஸ்ட்” கேட்ட சந்திரபாபு நாயுடு! மனுவை நிராகரித்த நீதிமன்றம்…
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனக்கு ஜாமீன் கோரி ஒரு மனுவும் வீட்டுக்காவலில் வைக்க கோரி ஒரு மனுவும் என இரண்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்த நிலையில், வீட்டுக்காவல் கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஆந்திர முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, அங்கு ஆளும் ஜெகன் மோகன் ரெட்டி அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பஸ் யாத்திரை மேற்கொண்டு வருகிறார். கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கர்னூல் மாவட்டத்திலுள்ள நந்தியாலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து பேருந்திற்கு தூங்க சென்றார். அப்போது அதிகாலை அங்கு வந்த ஆந்திர போலீசார் சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர்.
சந்திரபாபு நாயுடு ஆந்திர பிரதேச முதல்வராக கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை இருந்த போது மீது திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் அமைக்க அனுமதி கொடுப்பதற்கு சட்டவிரோதமாக 118 கோடி ரூபாய் பெற்றதாக சந்திரபாபு நாயுடு மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கில் விசாரணை நடந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை போலீசார் நேற்று முன் தினம் அதிகாலை கைது செய்தனர். கைதான பிறகு இதையடுத்து சந்திரபாபு நாயுடுவை தங்களது அலுவலகத்தில் வைத்து சிஐடி அதிகாரிகள் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். விடிய விடிய நடைபெற்ற விசாரணை நேற்று அதிகாலை 3.15 மணி வரை நீடித்தது.
பின்னர் கஞ்சனப்பள்ளியில் உள்ள சிஐடி அலுவலகத்தில் இருந்து விஜயவாடாவில் உள்ள மருத்துவமனைக்கு சந்திரபாபு நாயுடு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவ பரிசோதனை முடிந்த பிறகு, நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஆஜர்படுத்தப்பட்டார். சந்திரபாபு நாயுடுவை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதாவது வரும் 22 ஆம் தேதி அவருக்கு நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவையடுத்து சந்திரபாபு நாயுடு, ராஜ முந்திரி சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த உத்தரவு வெளியான சில நிமிடங்களிலேயே சந்திர பாபு தரப்பில் இரண்டு ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உடல் நிலையை காரணம் காட்டி ஒரு மனுவும் வீட்டுக்காவலில் வைக்கக் கோரி ஒரு மனுவும் என இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்கள் மீதான இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமீன் வழங்க போலீஸ் தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் மனு மீதான விசாரணையை ஒத்திவைத்தது. இந்த நிலையில், மனு இன்று விசாரணைக்கு வந்த போது வீட்டுக்காவலில் இருக்க அனுமதிக்க கோரிய மனுவை ஊழல் தடுப்பு நீதிமன்றம் நிராகரித்து விட்டது.