இன்று கர்நாடகாவில் அனைத்து கட்சி கூட்டம்! தமிழ்நாடு காவிரி நீரை பெறுமா?
காவிரி நதிநீர் விவகாரம் குறித்து விவாதிக்க கர்நாடகா அனைத்து அரசியல் கட்சிகள் கூட்டத்தை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று கூட்டியுள்ளார். தமிழ்நாடு அரசு, காவிரியில் வினாடிக்கு 24,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட கோருகிறது. ஆனால் கர்நாடகாவோ, குடிக்கவே நீர் இல்லை; குறுவை சாகுபடிக்கு எங்கே நீரை திறந்துவிடுவது என்கிறது?.
காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் இறுதியில் கூடியது. அந்தக் கூட்டத்திலும் தமிழ்நாடு அரசு இதே கோரிக்கையை முன்வைத்தது. வழக்கம் போல கர்நாடகா அரசு தரப்பில் “பஞ்சபாட்டு’ பாடப்பட்டது. ஒருவழியாக வெறும் 5,000 கன அடிநீரை மட்டும் கர்நாடகா, தமிழ்நாட்டுக்கு திறக்க உத்தரவிடப்பட்டது. இந்த சொற்ப நீரைகூட கர்நாடகா முழுமையாக திறந்துவிடவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்றத்துக்குப் போயுள்ளது தமிழ்நாடு. இந்த வழக்கின் விசாரணை செப்டம்பர் 21-ல் நடைபெறுகிறது. இதனிடையே காவிரி ஒழுங்காற்று குழுவாது, தமிழ்நாட்டுக்கு மேலும் வினாடிக்கு 5,000 கன அடி நீரை அடுத்த 15 நாட்களுக்கு திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு பரிந்துரைத்தது. அவ்வளவுதான் தாமதம்!
தமிழ்நாட்டுக்கான காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறக்க கூடாது என கர்நாடகாவில் கன்னட விவசாயிகள் போராட்டத்தில் குதித்துவிட்டனர். இதனைத் தொடர்ந்து காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து விவாதிக்க, கர்நாடகா முதல்வர் சித்தராமையா இன்று அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டியுள்ளார். காவிரி பிரச்சனைக்காக கடந்த மாதம் 23-ந் தேதி ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வர் சித்தராமையா கூட்டி இருந்தார். தற்போது காவிரி பிரச்சனையில் 2-வது அனைத்து கட்சிக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார் சித்தராமையா.