கரை புரண்டோடுதே கனா – 9 | பத்மா கிரக துரை

 கரை புரண்டோடுதே கனா – 9 | பத்மா கிரக துரை

அத்தியாயம் – 9

திடுமென ஆர்யனை அங்கே பார்த்ததும்.. ஆராத்யா முதலில் உணர்ந்தது பயத்தைத்தான்.. ஐயோ.. இவனா.. என்னை பாலோ செய்து கொண்டு இங்கேயே வந்துவிட்டானா..? இவனிடமிருந்து எப்படி தப்பிக்க போகிறேன்..? அவளது விழிகள் உடனடியாக வீட்டை நோக்கி ஓடும் வழியை தேடி பரபரத்தன..

“இங்கே தான் வந்தாயா..?” ஆர்யனின் கேள்வி ஆராத்யாவிற்குள் நுழையவில்லை.. அவள் அந்த இடத்தை விட்டு ஓடும் எண்ணத்தில் இருந்தாள்.. தோப்புக்குள் நடந்து வந்து விட்டிருந்தார்கள்.. வீடு பார்வையிலிருந்து மறைந்திருந்தது.. உடனே வீட்டிற்கு போகும் வழி தெரியவில்லை.. எனவே ஆராத்யா மரங்களுக்கிடையே வீட்டைத் தேடியபடி இருந்தாள்..

“வாங்கண்ணா.. எப்போது வந்தீர்கள்..?” தமிழரசன் மரத்தின் மீதிருந்து குரல் கொடுக்க, “அண்ணா.. அத்தான்..” என அழைத்தபடி பெண்கள் அவனருகே வர, ஆராத்யா அதிர்ந்தாள்..

“நீ..?” ஆர்யன் புருவம் சுருக்கி அவளை உறுக்க,

“நம் மனோ அத்தையின் மகள் ஆராத்யா அண்ணா..” சொர்ணா பெருமிதத்துடன் அண்ணனுக்கு அறிமுகம் செய்தாள்..

“ஓ..” ஆர்யனின் முகம் ஒளியிழந்தாற் போலிருந்தது..

“ஆராத்யா இவர் தான் பெரியண்ணன் ஆர்யன்… சதுரகிரி பெரியப்பாவின் மூத்த மகன்.. இந்த வீட்டின் முதல் பேரன்.. நம் எல்லோருக்கும் மூத்தவர்.. நிறைய படித்திருக்கிறார்.. நல்ல அறிவாளி..” தமிழரசன் இந்த நீண்ட விளக்கத்தை கொடுப்பதற்காகவே மரத்தின் மேலிருந்து இறங்கி வந்தானோ என்னவோ..?

அவனது அதீத விளக்க அறிமுகங்கள் ஆராத்யாவினுள் தீச்சுடராய் இறங்கியது.. சற்று முன் வரை அவளுக்கு அந்த குடும்பத்தின் மீது குடும்பத்தினர் மீதிருந்த அபிமானமும், மரியாதையும் நீராவியாக கரைந்தது..

இவன் எப்பேர்பட்ட அயோக்கியன்.. இவனே இந்த வீட்டின் மரியாதைக்குரிய உறுப்பினரென்றால் இந்தக் குடும்பத்தின் லட்சணம்.. அவள் உதடுகள் அலட்சியமாக சுளிந்தன.. ஆராத்யாவிற்கு இப்போது அவன் மீதிருந்த பயம் போய் விட்டிருந்தது..

போடா.. பொடிப்பயலே உன் லட்சணத்தை நான் அறிவேன்.. அலட்சிய பார்வையை ஆர்யனுக்குக் கொடுத்தாள்.. அதனை உணர்ந்த ஆர்யனின் முகம் மேலும் கறுத்தது.. சினம் கொண்ட விழிகள் அவளை எரித்தன.. அந்த சினம் ஆராத்யாவை சிறிதும் பாதிக்கவில்லை.. அவள் துச்சமான பார்வை ஒன்றுடன் அவனிடமிருந்து முகம் திருப்பிக் கொண்டாள்..

“இவர் தான் இந்த வீட்டின் மகாப் பெரிய மனிதரா அத்தான்..?” குயில் குரலில் கூவி சந்தேகம் கேட்டாள்..

“ஆமாம் ஆராத்யா.. அண்ணன்தான் எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டி, ரொம்ப புத்திசாலி.. நிறைய விசயம் தெரிந்தவர்.. சின்ன சின்ன விசயங்களை கூட கவனமாக எங்களுக்கு கற்றுத் தருவார்.. எங்கள் எல்லோரையும் மிகவும் அக்கறையாக கவனித்துக் கொள்வார்..” தமிழரசன் எப்போதடா அண்ணன் புகழ் பாடுவோம் எனக் காத்திருப்பான் போலும்.

அவனது அளப்புகளை கவனமாக செவி மடுத்துவிட்டு ஆர்யனைப் பார்த்தபடி நக்கலாக “ஆஹான்” என்றாள் ஆராத்யா.. ஆர்யனின் மூக்கு விடைத்து இதழ் துடித்தது.. அவன் பற்களை நறநறப்பதை ஆராத்யா அசையும் தாடைகளில் உணர்ந்தாள்.. அவளது பார்வை இப்போது ஸ்ரீமதி, தேன்மொழி பக்கம் திரும்பியது..

“உங்களுக்கும் கூட இவர் அப்படித்தானா..?”

ஆராத்யாவின் உள்ளர்த்தம் பொதிந்த கேள்வி அவர்களுக்கு புரியவில்லை.. “ஆமாம் அக்கா.. அத்தான் மிகவும் நல்லவர்..” அவர்கள் பேசியபடி வர, ஆர்யன் ஆராத்யாவை கொலை வெறியோடு பார்த்தான்..

“வாயை மூடு” உறுமினான்..

அட, செய்வதையெல்லாம் செய்துவிட்டு இவனுக்கு அதிகாரத்தை பார், ஆராத்யா தனது அலட்சியத்தை சிறிதும் குறைத்துக் கொள்ளவில்லை.

“எனக்கென்னவோ இங்கே உங்கள் வீட்டில் தங்க மிகவும் பயமாக இருக்கிறது..” சொன்னதோடு நில்லாமல் பயம் போலவோ.. தற்காப்பு போலவோ.. தோன்றும்படி தனது இரு கைகளையும் தன் உடலை மறைத்தாற் போல் தோள்கள் மேல் குறுக்காக வைத்துக் கொண்டு உடலைக் குறுக்கிக் கொண்டான்..

“ஏய்..” ஆத்திரம் மிக வெறி பிடித்தாற் போல் ஆர்யன் அவளருகே வர, அந்த வேகத்தில் பயம் வந்தாலும் நிமிர்ந்த முகத்துடனேயே அவனை பார்த்தாள்..

ஸ்ரீமதி, தேன்மொழி பின்னால் போய் நின்று கொண்டு தன்னை மறைத்துக் கொண்டாளா..

“உங்கள் அத்தானிடமிருந்து என்னைக் காப்பாற்றுங்க..” அவர்கள் நால்வருக்கும் நடப்பது ஒன்றுமே புரியவில்லை..

“அண்ணா என்னண்ணா..?” தமிழரசன் அண்ணனைக் கேட்டான்..

“அது ஒன்றுமில்லைடா.. சும்மா விளையாடுகிறாள்..” அவர்களுக்கு வாயசைத்தபடி வேறெதுவும் பேசாதே என இவளுக்கு பார்வை அதட்டல் வைத்தான் ஆர்யன்..

நான் ஏன் பேசாமல் இருக்க வேண்டும்.. அவனிடம் பார்வை போர் கொடுத்தபடி சவாலாய் பார்த்தாள்..

“யாரிடமிருந்து நமக்கு என்ன ஆபத்து வருமென்று கணிக்கவே முடிவதில்லைப்பா..” ஸ்ரீமதி, தேன்மொழியின் தோள்களில் தன் கைகளை போட்டுக் கொண்டாள்..

“வாயை மூடிக் கொண்டு வீட்டிற்கு போ..” ஆர்யன் இப்போது வெளிப்படையாக பற்களை நறநறத்தான்..

“அதுதான்.. அங்கே வீட்டிற்குப் போகத்தான் எனக்கு பயமாக இருக்கிறது என்கிறேன்..”

“ரொம்ப நல்லது.. உன்னையும், உன் அம்மாவையும் வரவேற்க இங்கேயும் யாரும் காத்துக் கொண்டிருக்கவில்லை.. நீங்கள் இருவரும் போகலாம்..”

அவனது அலட்சிய கையசைவு ஆத்திரமூட்ட,

“போகத்தான் போகிறோம்.. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத இந்த வீட்டில் இருப்பது புதைகுழிக்குள் இருப்பதற்கு சமம்..” ஆத்திரத்துடன் கூறிவிட்டு மரக் கூட்டங்களிடையே அனுமானமாக வீட்டைத் தேடியபடி நடக்க ஆரம்பித்தாள்..

பொங்கி வழிந்த கோபத்துடன் உடனே அங்கிருந்து பெட்டியைக் கட்டும் நோக்கத்துடன் தான் ஆராத்யா வீட்டினுள் நுழைந்தாள் வீட்டிற்குள் நுழைந்ததும் அங்குமிங்கும் பார்வையை அலைத்து தன் அன்னையைத் தேடினாள்..

மனோரமா மாடியில் ஒரு அறையினுள் இருந்தாள்.. அது மிகச் சிறிய அறை தான்.. ஒரே ஒரு ஆள் படுக்குமளவு ஒரு சிறிய ஒற்றைக் கட்டில் அந்த அறையின் முக்கால்வாசி இடத்தை அடைத்துக் கொண்டு கிடந்தது.. அந்தக் கட்டில் பழங்கால ராஜாக்கள் பாணியில் தலைமாட்டில் பெரிய மரச்சட்டங்களுடன் உயரமாக இருந்தது.. அரசர்களின் பஞ்சணையை நினைவு படுத்தியது.. மனோரமா அதில் படுத்திருந்தாள்.. கண்களை மூடியிருந்தாள்.. மூடிய அவள் இமையிலிருந்து கண்ணீர் வடிந்தபடியிருந்தது.

“மம்மி ஏன் அழுகிறாய்..?” ஆராத்யா பதட்டத்துடன் தாயின் அருகே அமர்ந்தாள்..

“அழவில்லை ஆரா.. என் இளமைக்காலங்களுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.. இந்த அறை என்னுடைய அறை.. இங்கே தாத்தா வீட்டில் திருமணத்திற்கு பிறகு தான் யாருக்கும் தனி அறை தருவார்கள்.. ஆனால் எனக்கு மட்டும் ஸ்பெசலாக நான் பெரிய பெண் ஆனதுமே இந்த அறையை ஒதுக்கித் தந்துவிட்டார்கள்.. இதோ இந்தக் கட்டில்.. இதுவும் என் ஆசைக்காக வாங்கியது தான்.. இங்கே பக்கத்தில் பழமையான கோட்டைகள், வீடுகள் உண்டு.. அப்படி ஒரு ஜமீன்தார் வீட்டில் அவர்களது பழைய மரச்சாமான்களை ஏலத்தில் விட்டனர்.. நான் என் அப்பாவுடன் ஏலத்தை சும்மா வேடிக்கை பார்க்க போயிருந்தேன்.. அங்கே இந்தக் கட்டில் எனக்கு மிகவும் பிடித்து போக, சிறுபிள்ளைத் தனமாக நான் கேட்டேன் என்பதற்காகவே ஏலத்தில் கலந்து கொண்டு அப்பா இதை எனக்காக வாங்கி தந்தார்..”

“இந்த அறையையும் என் இஷ்டப்படி அலங்கரித்து கொடுத்தார்கள்.. பார் இந்த அலமாரிகளை..”

மனோரமா காட்டிய சுவர் பகுதி முழுவதும் மரத்தால் செய்யப்பட்டிருந்தது.. அந்த மரங்கள் சதுரமும், செவ்வகமுமாக நிறைய அலமரிகளை கதவுகளோடு கொண்ருந்தன.. சில அலமாரிகளுக்கு கண்ணாடி பதிக்கப்பட்டிருந்தன.. சிலவற்றிற்கு இரும்பு வலைகள்.. சிலவை சாதாரண மரக்கதவுகள்.. இவை ஒரு வரிசையோடு மாறி மாறி அமைக்கப்பட்டிருந்த விதத்தில் வித்தியாச அழகோடு இருந்தன..

“கண்ணாடி அலமாரிகளின் உள்ளே என் அலங்கார பொருட்களும், நகைகளும், வலை அலமாரிகளின் உள்ளே தின்பண்டங்கள் பழங்கள், மர அலமாரிகளின் உள்ளே என் உடைகள் இப்படி வைத்துக் கொள்ளவென திட்டமிட்டு இந்த அலமாரி சுவற்றினை எனக்கு வடிவமைத்துக் கொடுத்தார்கள்.. இந்த அறையை விட்டு இத்தனை நாட்கள் எப்படி பிரிந்திருந்தேனோ தெரியவில்லை..”

தன் தாயின் நெகிழ்வை புரிந்து கொண்ட ஆராத்யா மெல்ல அவளை இழுத்து தன் மடியில் போட்டுக் கொண்டு, முதுகினை வருடிக் கொடுத்தாள்..

“ஏய் ரமா என்ன இது சின்னப்புள்ளை மாதிரி பிஹேவ் பண்ற..? நானும் உன்னைக் கவனிச்சிட்டுத்தான் இருக்கிறேன்.. இந்த வீட்டிற்குள் வந்ததிலிருந்து உனக்கே இத்தாம் உயரத்தில் ஒரு மகள் இருக்கிறதையே மறந்துட்டு, நீயே டீன் ஏஜ் குமரி மாதிரி கொஞ்சி குலாவிட்டு இருக்கிற, இது சரியில்லை சொல்லிட்டேன்..” செல்லமாக மிரட்டினாள்..

மனோரமா வழியும் கண்களோடு மெல்ல சிரித்தாள்..

“நிஜம் தான் ஆரா.. தக்கலைக்கு வந்ததிலிருந்து நான் என்னோட கல்யாண வாழ்க்கையே மறந்துட்டேன்..”

அம்மாவின் பிறந்தவீடு இப்படி அவளை தடுமாற வைக்கும் என உணர்ந்துதான் அப்பா தங்களை இங்கே அனுப்ப மறுத்தாரோ.. என ஆராத்யாவிற்கு தோன்றியது..

“ஆரா நாம் இருவரும் இந்த அறையிலேயே தங்கிக் கொள்ளலாம்..?” தன் நாடி தொட்டுக் கேட்ட தாயை பரிவாய் பார்த்தபடி தலையசைத்தாள் ஆராத்யா..

பின்பு தான் அவளுக்கு சற்று முன் சந்தித்த ஆர்யன் நினைவு வந்தான்.. அவனது இருவரும் போகலாம் வார்த்தைகளும், அலட்சிய கையசைவும்..

ஆராத்யா நிகழ்வுக்கு வந்து பார்த்த போது மனோரமா அவளருகே இல்லை.. அவள் அறையின் ஒருபுறமிருந்த கதவை திறக்க அது சிறிய பால்கனியாக இருந்தது.. இரண்டு பேர் மட்டும் நின்று கீழே எட்டிப் பார்க்கலாம் போல் ஒரு அமைப்பு அதில்.. அங்கே நின்று வெளியே.. தோப்பை பார்த்துக் கொண்டிருந்தாள் மனோரமா.. ஆராத்யா வேகமாக அவளருகே ஓடினாள்..

“மம்மி நாம் இங்கே தங்கப் போகிறேமா..?” மனோரமா குழப்பமாக மகளைப் பார்த்தாள்..

“ஆமாம் நிச்சயம் தங்கப் போகிறோம்..”

“எத்தனை நாட்கள்..?”

“சொர்ணா கல்யாணம் வரை..”

“அதற்கு இன்னமும் மூன்று வாரங்கள் இருக்கிறது மம்மி.. அப்பாவுடைய டூர் பத்து நாட்களில் முடிந்து விடும்.. மறந்து விட்டாயா..?”

“டூர் முடிந்துவிட்டால் அவர் இங்கே வரட்டும்..”

“இங்கேயா..? இங்கே டாடி வரமாட்டார் மம்மி..”

“நல்லது.. அவர் அங்கேயே இருக்கட்டும்.. நாம் இங்கே நிம்மதியாக மூன்று வாரங்கள் தங்கிவிட்டு போகலாம்..”

“எனக்கு படிக்கனும் மம்மி.. சீக்கிரமே நம்ம வீட்டுக்கு போயிடலாம் மம்மி.. ப்ளீஸ்..”

“இருபத்தியிரண்டு வருடங்களுக்கு பிறகு இப்போது தான் நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்கிறேன்.. அதைக் குலைப்பதில் உனக்கென்னடி அவசரம்.. இனி ஒருமுறை மீண்டும் இங்கே என்னால் வர முடியுமோ.. முடியாதோ..? கிடைத்த வாய்ப்பில் கூட சில நாட்கள் இங்கே தங்க நினைப்பதை ஏன்டி கெடுக்க நினைக்கிறாய்..?”

மனோரமா மீண்டும் அழுகையை ஆரம்பித்துவிட ஆராத்யா வேறு வழியின்றி வாயை மூடிக் கொண்டாள்..

“தாயே மனோரமா உன் இஷ்டப்படியே இங்கே இருந்துவிட்டு போவோம்.. சும்மா சும்மா மூக்கை சிந்திப் போடாதே.. கண் கொண்டு பார்க்க முடியவில்லை..” கோபத்துடன் பேசிவிட்டு அறையை விட்டு வெளியேறினாள்..

“இந்த ரமா தொல்லை தாங்கலை.. இவளை இங்கே வர விட்டதே தப்பு.. அப்பா சொன்ன மாதிரியே அங்கே சென்னையில் வீட்டிற்குள்ளேயே போட்டு பூட்டியிருக்க வேண்டும்.. இருக்கட்டும்.. திரும்ப சென்னை போனதும் அப்பா கூட சேர்ந்து ரமாவை இந்தத் தக்கலை பக்கமே திரும்ப விடாமல் வீட்டிற்குள்ளேயே வைத்து பூட்டலை.. என் பேர் ஆராத்யா கிடையாது..”

தன் தாய்க்கு எதிரான சபதம் ஒன்றை மெலிதான முணுமுணுப்பாக உதடசைத்து பேசியபடி அந்த மரப்படிகளில் இறங்கி கீழே வந்து கொண்டிருந்த ஆராத்யா திடும் என நின்றாள்..

அவளுக்கு கீழே இரண்டு படிகள் தள்ளி ஆர்யன் நின்றிருந்தான்.. அவன் அவள் முகத்தையே அசையும் உதடுகளையே கூர்ந்து பார்த்தபடி இருந்தான்.. ஆராத்யா திருதிருவென விழித்தாள்.. இவன் நான் பேசியதைக் கேட்டிருப்பானோ..? தன் பதட்டம் மறைத்து மோவாய் உயர்த்தி அவனைப் பார்த்தாள்..

“என்ன..?”

“என்ன..?”

எவனாவது கேள்விக்கு கேள்வியையே பதிலாக சொல்வானா.. அதுவும் நான் கேட்ட அதே கேள்வியை சரியான வில்லங்கம் பிடித்தவன் இவன்.. அவனை முறைத்தாள்.

“எதுவும் உதவி வேண்டுமா..?”

“எதற்கு..?”

“உங்கள் ஊருக்கு போக சென்னைக்கு டிக்கெட் போட்டு விடவா..?”

அவனது நக்கலான கேள்வியில் ஆராத்யாவின் மனம் அவமானத்தில் எரிந்தது.. வெறுப்பாய் அவனைப் பார்த்தாள்.. இப்போதும் அவள் இங்கிருக்க விரும்பவில்லை.. உடனடியாக மிக உடனடியாக இந்த வீட்டை விட்டு வெளியேறவே நினைத்தாள்.. ஆனால் அவள் தாயின் ஆசை..? மிகச் சிறியதான அல்பத்தனமான ஆசை தான் அது.. அதனைக் கூட நிறைவேற விடாமல் குறுக்கே நிற்கும் மகளாக இருக்க அவள் விரும்பவில்லை.. அதற்காகவே இவனது மறைமுக அவமானப்படுத்தல்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறாள்..

“இன்று இரவு பத்து மணிக்கே கூட ஒரு டிரெயின் இருக்கிறது.. டிக்கெட் போட்டு விடவா..?” ஆர்யன் மேலும் சீண்டினான்..

உதடு கடித்து தலைகுனிந்து நின்ற ஆராத்யாவிற்கு திடுமென அந்த யோசனை வந்தது.. உடனடியாக அவள் தலை நிமிர்த்தி தைரியமாக அவனைப் பார்த்தாள்.

-(கனா தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...