எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 9 | ஆர்.சுமதி

 எனக்கொரு காதலி இருக்கின்றாள் – 9 | ஆர்.சுமதி

அத்தியாயம் – 9

தியத்திற்கு என்ன சமையல் பண்ணபோறே?” கேட்டவாறே சமையலறைக்குள் நுழைந்தாள் அம்சவேணி.

காய்கறிகளை அரிந்துக்கொண்டிருந்த வேலைக்காரி சுந்தரி திரும்பினாள். சிரிப்பும் அலுப்புமாக சொன்னாள்.

“ஆமா…என்ன சமையல் செய்து என்ன? சின்னய்யா எங்க சாப்பிடறாங்க?  சரியாவே சாப்பிட மாட்டேங்கறாங்க. கோதையம்மா கை பக்குவம் என்கிட்ட இல்லைங்கறாங்க”

அம்சவேணி சிரித்தாள். “கோதை இங்க வர்றதுக்கு முந்தி நீதானே சமைச்சே. உன் சமையலைத்தானே சாப்பிட்டான்.”

“அதைத்தான் நான் சொன்னதுக்கு கோதை வந்த பின்னேதானே உன் லட்சணம் தெரியுதுங்கறார்”

“இதுக்குத்தான் நான் சமையலறை பக்கமே வர்றதில்லை. என்னையும் அப்படி சொல்லிட்டான்னு வச்சுக்க அப்பறம் மாமியார் மருமகள் சண்டைதான் வரும்!”

“ஆஹா..அப்படியே நீங்க சண்டைப்போட்டுட்டாலும்…சண்டை கூட போட தெரியுமா உங்களுக்கு?” நறுக்கிய காய்கறிகளை வேகவைத்த பருப்பில் போட்டவாறே சிரித்தாள் சுந்தரி.

“எப்படிப்பட்ட சாதுவான மாமியாரும் மருமக வந்திட்டா சண்டைக்கோழி ஆயிடுவா.”தனக்கும் சண்டைப்போடும் திறமை உண்டு என்பதை நிரூபிக்க முயன்றாள் அம்சவேணி.

“அப்போ அம்மா வீட்டுக்குப்போன கோதையம்மாவை சீக்கிரம் வரச்சொல்லுங்க.”

“அதுசரி அவ என்ன அம்மாவீட்டுக்கு சும்மாவா போயிருக்கா? ஆடிமாசத்துக்குப் போயிருக்கா”

“ஆமா…இப்பவெல்லாம் இதெல்லாம் யார் பார்க்கறா? நீங்கதான் தேவை இல்லாம இளஞ்சோடிகளை பிரிச்சுக்கிட்டு…”

“அடிப்பாவி…நீ ஒருத்தியே போதும்டி மாமியார் கொடுமை நான் பண்றதா போய் ஊர் பூரா சொல்றதுக்கு”

அம்சவேணி போலியாய் பயந்த அதே நேரம் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது.

பதறினாள் சுந்தரி. “ஐய்யோ சமையலே இன்னும் ஆகலை. சின்னய்யா வந்துட்டாரு.”

“டி.வி சீரியல்லயே உட்கார்ந்திருந்தா இப்படித்தான்.” சொன்னவாறே சமையலறையைவிட்டு வெளியே வந்த அம்சவேணி வாசலில் வந்து நின்ற காரைப்பார்த்து நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

“சுந்தரி டென்ஷன் இல்லாம சமை. குமணன் வரலை. சங்கீதாவோட கார் “

“சின்னய்யாவைக்கூட சமாளிச்சுடலாம். இதை சமாளிக்கறதுதான் பெரும்பாடு” உரக்க சொல்லி சிரித்தாள் சுந்தரி.

உள்ளே வந்தாள் சங்கீதா. வழக்கமான ஜீன்ஸ் டி.ஷர்ட்டை தவிர்த்துவிட்டு எங்கே கீழே விழுந்துவிடுமோ என்று பயமுறுத்திய வழுவழுக்கும் சேலைக் கட்டியிருந்தாள்.

“வாம்மா..சங்கீதா. என்ன சேலையெல்லாம் கட்டியிருக்கே?”என்று வரவேற்றாள் சங்கீதா.

“ஏன்..உங்க மருமக மட்டும் தான் சேலைக் கட்டனும்னு ஏதாவது சட்டம் போட்டிருக்காங்களா?”

அத்தைக்காரி தன் சேலைக்கட்டை ரசிக்காமல் நக்கல் பண்ணுவதாய் நினைத்து எரிச்சலாய் பதிலளித்தாள் சங்கீதா.

“அப்படி ஒரு சட்டம் போட்டிருந்தா நான் ஜீன்ஸ் போட்டுக்கிட்டுத்தான் அலையனும்”

“மணக்கும்” என்றவாறே சோபாவில் அமர்ந்தாள். கால்மேல் கால்போட்டவாறே அதிகாரம் செய்தாள்.

“வாழ்க்கை தான் கொடுக்கலை. ஒரு காபியாவது கொடுங்க”

“அதுக்கென்ன தாராளமா. சுந்தரி சங்கீதாவுக்கு காபி கொண்டா” உள்நோக்கி குரல் கொடுத்தாள்.

“ஏன் உங்க மருமக மகாராணி எங்கப்போனா?”

“அவ ஆடிமாசம்னு அம்மா வீட்டுக்குப் போயிருக்கா. உனக்குத் தெரியாதா?”

“ஆமா..எவ ஆடிக்குப் போயிருக்கா? எவ அம்மாவாசைக்குப் போயிருக்கான்னு தெரிஞ்சுக்கறதுதான் எனக்கு வேலை. அதுக்குத்தானே நான் ஃபாரின் போய் படிச்சுட்டு வந்திருக்கேன். உன் மருமக இல்லாததும் நல்லதுதான். அவ இல்லாதப்ப பேசனும்னு நினைச்சேன். வசதியா போச்சு”

“என்ன பேசப்போறே?”

“காபி வரட்டும் குடிச்சுட்டு சொல்றேன்”

சுந்தரி காபியோடு வந்தாள். மரியாதைக்கு பேசிவிட்டு காபியை கொடுத்துவிட்டு சென்றாள்.

சங்கீதா காபியை குடித்து முடிக்கும்வரை பொறுமையாக இருந்த அம்சவேணி அவள் காபி கோப்பையை பக்கத்திலிருந்த டீ பாயின் மீது வைத்ததும் கேட்டாள்.

“சொல்லு”

“நான் உங்களை ஒரு கேள்வி கேட்கனும்”

“கேளு”

“என்னை எதுக்காக உங்க பிள்ளைக்கு கட்டமாட்டேன்னு சொன்னீங்க?”

“அதை எதுக்கு இப்ப போய் கேட்கறே?”

“காரணம் இருக்கு. சொல்லுங்க”

“பெரிசா ஒரு காரணமும் இல்லை. உன்கிட்ட பொறுப்புணர்ச்சி கிடையாது. எல்லாத்தையும் ரொம்ப ஈஸியா எடுத்துப்பே. வாழ்க்கையையும்தான். குமணனோட பிரச்சனை என்னன்னு உனக்கு நல்லா தெரியும் அவனை ஹேண்டில் பண்ற திறமை உன்கிட்டக் கிடையாது. குமணனோட குணத்துக்கு உன்னால ஒத்துப் போக  முடியாது.”

அம்சவேணி முடித்ததும் சங்கீதா இளக்காரமாக சிரித்தாள்.

“இந்தக்காரணமெல்லாம் வெறும் சப்பைக்கட்டு. உண்மையான காரணத்தை நான் சொல்லவா? நான் ரெண்டு தடவை லவ் பிரேக்கப் பண்ணியிருக்கேன். அதான். உங்களுக்கு லவ் பண்ற பொண்ணுங்களெல்லாம் வீட்டுக்கு அடங்காத பிடாரிங்க. அதிலும் லவ் பிரேக்கப் பண்ற பொண்ணுங்க காதலிச்சுட்டு பையனை ஏமாத்திட்டுப் போற பொண்ணுங்க துரோகிங்க. உங்கப் பையனை காதலிச்சு ஏமாத்திட்டு அந்தப் பெண் போனதிலிருந்து உங்க மனசுல நாங்களெல்லாம் துரோகிகள். அதனால யாரையும் காதலிக்காத பெண்ணை அதாவது மனசு சுத்தமான பெண்ணை உங்க வீட்டு மருமகளா கொண்டுவர முடிவு பண்ணி கோதையை கொண்டுவந்திங்க. பட்… ஏமாந்துட்டிங்களே அத்தை…” சொல்லிவிட்டு கைத் தட்டி கலகலவென சிரித்தாள்.

அந்த சிரிப்பில் கடுப்பானாள் அம்சவேணி.

“என்ன உளறுறே…”

“நான் உளறலை மிஸஸ். அம்சவேணி அத்தை.  உங்க மகனுக்கு துரோகம் செய்துட்டு ஒருத்தி ஓடினாளே..அதே மாதிரிதான் உன் மருமகளும் ஒருத்தனுக்கு துரோகம் பண்ணிட்டு இங்க வந்திருக்கா!.”

அம்சவேணியை அதிர்ச்சி சன்னமாகத் தாக்கியிருந்தது.

அவளுடைய அதிர்ச்சியை ரசித்த சங்கீதா எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றும் வேலையை செய்தாள்.

“கோதை ஒரு பையனை காதலிச்சிருக்கா. அவனைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஒத்தைக்கால்ல நின்னிருக்கா. உங்க வீட்டு கார் வாசல்ல வந்து நின்னப்ப வலிய வர்ற ஸ்ரீதேவியை எட்டி உதைக்கக் கூடாதுங்கற பழமொழியை கையில் எடுத்துக்கிட்டாங்க அவங்க அம்மா.  நம்ம வீட்ல பொண்ணுக்கொடுத்தா கோதைக்கு மட்டும் இல்லை மத்த ரெண்டு பொண்ணுங்களுக்கும் நல்ல வாழ்க்கை கிடைக்கும்னு நினைச்சாங்க. காதல் காதல் காதல். காதல் போயின் சாதல்னு இருந்த கோதையை நாங்க மூணுபேரும் செத்துடுவோம்னு மிரட்டி சம்மதிக்க வச்சுருக்காங்க.”

அம்சவேணியின் முகம் வெளிறியது.

“இதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?”

“ஆடி மாசம் புருஷன் பொண்டாட்டித்தான் பிரிஞ்சி இருக்கனும்னு பெரியவங்க விதி வகுத்திருக்காங்க. காதலனை பிரிஞ்சி இருக்கனும்னு சொல்லலையே.”

வெளிறிய அம்சவேணியின் முகம் இப்பொழுது இருட்டடித்தது.

“ஆடிக்கு புருஷனை பிரிஞ்சாலும் ஆடி சேல், ஆடி ஆஃபர்ன்னு கோதை தன் காதலனோட ஜாலியா கடைவீதியில சுத்திக்கிட்டிருக்கா. “

“நீ பார்த்தியா?”

“பார்த்தது மட்டுமில்லை. ஃபோட்டோ கூட எடுத்து வச்சிருக்கேன் பார்க்கறிங்களா?” என்றபடி தன் செல்ஃபோனை உயிர்ப்பித்து அந்த புகைப்படத்தைக் காட்டினாள்.

அதில்…

கோதை ஒரு வாலிபனுடன் எதிரெதிரே அமர்ந்து காபி குடித்துக் கொண்டிருந்தாள்.

-(தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...