கொன்று விடு விசாலாட்சி – 9 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 9 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 9

விசாலாட்சியின் மீதான வழக்கு கோர்ட் விசாரணைக்கு வந்து 11 மாதங்கள் ஆகியிருந்தன.

இறுதிக்கட்ட வாதம்.

பப்ளிக் பிராஸிக்யூட்டர் எழுந்தார். இடதுகையில் குறிப்புகள். வலது கையால் மூக்குக்கண்ணாடியை திருத்திக் கொண்டார்.

“கனம் கோர்ட்டார் அவர்களே! இந்த நீதிமன்றம் ஒருவித்தியாசமான  வழக்கை சந்தித்துக்கொண்டிருக்கிறது. கொலையாளி விசாலாட்சி தனது கணவனை திட்டமிட்டு சதி செய்து தூங்கும் போது வன்கொலை செய்திருக்கிறார். டர்னிப் ஒரு ஆங்கில நீர் காய்கறி. நமக்கெல்லாம் அதனை குழம்பு வைத்து சாப்பிடும் பொருளாகத்தான் தெரியும். ஆனால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விசாலாட்சிக்கு அது ஒரு ஸைலன்சராக உபயோகப்பட்டிருக்கிறது. தொழில்முறை கொலைகாரர்களுக்குக்கூட டர்னிப்பை ஸைலன்சராக உபயோகிக்கும் சமயோசிதம் வராது.

“விடிந்தால் அறுபதாம் கல்யாணம் மகள்களும் மகனும் உற்றார் உறவினர் குழுமமும் பங்களாவில். 32 வருஷமாக அடித்துத்துன்புறுத்தினார் கணவர் என்கிறாரே விசாலாட்சி? அவர் வாதப்படி அன்றும் சீனிவாசன் அதிகபட்சம் மனைவியை அடித்திருப்பார் அல்லது விழா கூட்டத்துக்காக அடியை ஒருநாள் ஒத்தி வைத்திருப்பார். ஆனால் கொலை செய்ய நினைத்துக் கூட பாத்திருக்கமாட்டார். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில் சீனிவாசனின் இரத்தத்தில் 0.05சதவீதம் ஆல்கஹால் இருந்தது உறுதி செய்யப்பட்டுளளது. இரவு 12.00 மணிக்கு வந்த அவர் அடுத்த இரண்டரை மணி நேரத்தித்ல எழுந்து மனைவியை சுடுவது சாத்தியமில்லாதது போதையில் காலை 6மணி சமீபிக்கும் போதுதான் எழுந்திருந்திருப்பார்.

“கணவன் அலாரம் வைத்ததை விடுவித்த விசாலாட்சி –கணவனின் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்களையும் அகற்றியிருக்கலாமே!

“முப்பத்திரெண்டு வருஷம் யாருக்கும் தெரியாம புருஷன் அடிச்சான் சரி. கடைசியா கொலை செய்யப் போரேன்னு சொல்லிட்டான்ல அவன் தூங்கியதும் மகன் மகள்களிடம் போய் உண்மையைக் கூறி பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாமே?

“தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கும் விசாலாட்சி நேரடியாக ‘நான்தான் என் கணவனைக் கொன்றேன்’ என ஸ்டேட்மென்ட் கொடுக்காமல் கொள்ளைக்காரர்கள் வந்தார்கள் சுட்டார்கள் தப்பித்தார்கள் என முதலில் புனைகதை கூறியது ஏன்? விசாரணை அதிகாரிகள் அலட்சியமாக இருந்திருந்தால் விசாலாட்சி கூறிய கொள்ளைக்காரன் கதை வழியே போலீஸ் விசாரணை தொடர்ந்திருக்கும். சட்டத்தின் கைகளில் விசாலாட்சி சிக்கியிருக்க மாட்டார். விசாலாட்சிக்கும் கணவன் 32வருடம் கொடுமை செய்தார் என்ற பொய்யை கஷ்டப்பட்டு சிரமப்பட்டு நெசவ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்காது.

“வாதத்தின் அடுத்தக் கட்டத்துக்கு வருவோம். விசாலாட்சி தன்னுடைய வாக்கு மூலத்தில் சொன்னவை அனைத்தையும் இந்த நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனால் ஒரு வரி கூறியிருக்கிறார். – ‘எனது கணவனைக்கொல்ல மொதல் நாள் இரவிலிருந்தே முயற்சித்தேன் அறுபதாம் கல்யாணத்துக்கு முந்தின ராத்திரிதான் வெற்றி பெற்றேன்’ என்று. பொதுவாக கொலைகள் ஷணநேர கோபத்தில் நடக்கும். அந்த வித கொலையாளிகளுக்கு நாம் இரக்கம் காட்டலாம் சிலர் சில நாள் திட்டமிட்டு கொலை செய்வர். சிலர் விரோதிகளை கொலை செய்ய வாடகைக் கொலையாளிகளை அமர்த்துவார்கள். ஆனால் எனக்குத் தெரிந்த கிரிமினல் சரித்திரத்தில் ஒரு கொலை செய்ய 32வருட திட்டமிடல் இருந்தது இந்த கேஸில்தான். இது ஒரு கின்னஸ் சாதனை. விசாலாட்சியின் பெயர் கட்டாயம் சாதனைப்புத்தகத்தில் பொறிக்கப்படும் ஸோ…. முப்பத்திரெண்டு வருடமும் தான் எந்த நிமிடம் கொலை செய்யப்படுவோம் என்பது தெரியாமல் ஒரு திகில் சூழ்நிலையிலேயே வாழ்ந்திருக்கிறார் சீனிவாசன். சீனிவாசன் எவ்வளவு பெரிய துர்பாக்கியசாலி.

“அடுத்தக்கட்டம் பொதுவாகவே தமிழ்நாட்டில் மகள்கள் தங்கள் தாயாரின் மீது உயிரையே வைத்திருப்பார்கள். எத்தனையோ பெண்கள் புகுந்த வீட்டார் தங்கள் தாயார் பற்றி இழித்து பேசிய ஒரே ஒன்றிற்காக விவாகரத்து வரை சென்றிருக்கிறார்கள். தாயார் எந்த தப்பு செய்தாலும் காட்டிக் கொடுக்கமாட்டார்கள். ஆனால் இந்த வழக்கில்- விசாலாட்சியின் இரு மகள்களும் தங்கள் தாயாருக்கு எதிராக சாட்சியளித்துள்ளார்கள். அவர்களது வாக்குமூலங்களின் மூலம் விசாலாட்சி ஒரு வெறி பிடித்தவர் அர்த்தமில்லாத விஷயங்களுக்காக பழி வாங்கக்கூடியவர் என்பது வெட்ட வெளிச்சமாகிறது.

“அடுத்தக்கட்டம். பெண் மருத்துவரின் முழுமையான ரிப்போர்ட். ரிப்போர்ட்டின் எந்த பகுதியும் விசாலாட்சியின் கற்பனை சரக்கை ஆதரிக்கவில்லை.

“ஐந்தாவதாக ஸைக்கியாட்ரிஸ்ட் ரூபன் சாலமோனின் ரிப்போர்ட். அவர் விசாலாட்சியின் பிளாஷ்பேக்குகளை நான்கு ஒலிநாடாக்களில் பதிந்து கொடுத்திருக்கிறார். பிளாஷ்பேக்குகளில் விசாலாட்சியின் கற்பனைவளம் நம்மை அசத்துகிறது. ஆனால் அந்த பொய்களை வாங்கத் தயாரில்லை. விசாலாட்சியின் பொய்களை விற்று விடுதலை வாங்க இடைத்தரகராய் ரூபன் சாலமோன் செயல்பட்டிருக்கிறார். ஆனால் நமக்கு வேண்டியது ஒரே ஒரு விஷயம். அது ஸைக்கியாட்ரிக் ரூபன் மூலம் அவரறியாமல் கிடைத்துள்ளது. அந்த விஷயம்- ‘விசாலாட்சி மனநோயாளி அல்ல. முழு மன ஆரோக்கியத்துடன்தான் இந்தக் கொலையை செய்துள்ளார்’ என்பதே.

மொத்தத்தில் அனைத்து உண்மைகளையும் சாட்சிகளின் வாக்குமூலங்களையும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் கைனகாலஜிஸ்ட், ஸைக்கியாட்ரிஸ்ட் ரிப்போர்ட்களையும் தொகுத்து பார்க்கும்போது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விசாலாட்சி தனது கணவரை திட்டமிட்டு சதி செய்து கொன்றிருக்கிறார் என்பது புலனாகிறது. அவருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்குததண்டனை விதிக்கும்படி வேண்டி அமர்கிறேன்!”

ஹேமந்த் குமாரை ஓர் அலட்சிய பார்வை பார்த்தபடி தனது இருக்கைக்கு போனார் பப்ளிக் பிராஸிக்யூட்டர்.

“டிபன்ஸ் கவுன்ஸல்… நௌ இட் இஸ் யுவர் டேர்ன்!” என்றார் நீதிபதி.

சிறிதுநேரம் மௌனித்தான் ஹேமந்த்.

“நான் பேசப்போகும் சில வார்த்தைகளுக்காக கனம் கோர்ட்டார் என்னை மன்னிக்கவேண்டும்!”

நீதிபதி புன்னகைத்தார்.

“இந்த கோர்ட்ல எத்தனை ஆண்கள்? எத்தனை பெண்கள்? கல்யாணம் ஆனவங்க எத்தனை பேர்? (சில நொடிகள் அவகாசம் கொடுத்து) மாண்புமிகு நீதிபதி அவர்களையும் சேர்த்து 55ஆண்கள். 4பெண்கள் குற்றஞ்சாட்டப்பட்டவரையும் சேர்த்து அனைவ்ருமே திருமணமானவர்கள் தான். சரி. இப்ப பிரதான கேள்விய கேக்ரேன்… இந்த கேள்விக்கு 55ஆண்களும்  நெஞ்சத் தொட்டு பதிலை சொல்லனும். உங்கள்ல யாராவது மனைவியை ஒரே ஒருதரம் கூட அடிக்காதவங்க இருந்தா கைத்தூக்குங்க…. கேள்விக்கு நீதிபதி அவர்கள் பதில் சொல்ல விரும்பலன்னா அவருக்கு மட்டும் விதிவிலக்கு அளிச்சிருவம்….’

பி.பி. எழுந்தார். “பொருத்தமில்லாத வாதம்.  இதென்ன நீதிமன்றமா? அல்லது சாலமன் பாப்பையா நடத்தும் பட்டிமன்றமா? அப்ஜக் ஷன் மை லார்ட்!”

யோசித்து நீதிபதி “அப்ஜக் ஷன் ஓவர் ரூல்டு!”

யாருமே அடிக்கவில்லையென கை உயர்த்தவில்லை.

ஹேமந்த் தனது கைகளை முன் நீட்டி, “நானும் ஒருமுறை அடிச்சிருக்கேன்..” என்றான்.

“ஒரு கணவன் மனைவிய அடிக்றதுக்கு மனோரீதியாக காரணம் இருக்கு. ஒரு ஆண் நண்பனை அடிச்சா நண்பன் கோவிச்சிக்கிட்டு போய்டுவான். வாத்தியாரை அடிச்சா டிஸி கிழிஞ்சிரும். அப்பனை அடிச்சா சொத்து கிடைக்காது. ஈவன் நிராதரவான அம்மாவ அடிச்சா பப்ளிக் சபிக்கும். தம்பிய அடிச்சா எதித்து அடிக்க பலமில்லைன்னா ஓடிருவான். அக்கா தங்கச்சிய அடிச்சா அவ புருஷன் விடமாட்டான். எங்க உரிமைய நீ மிஸ்யூஸ் பண்ணாதன்னு சண்டைக்கு வருவான். ஆனா ஓர் ஆண் கட்ன பொண்டாட்டிய அடிச்சா அடிபட்ட பொண்டாட்டியின் நிழலும் நியாயம் கேக்க வராது. பொண்டாட்டின்ற பாவப்பட்ட ஜென்மம்தான் ஒரு ஆணுக்கு வடிகால். பொம்பிளை வேலைக்கு போன பிறகும் நிலைமை மாறல. அவளுக்கும் அடிதான். நம்ம சமூகத்ல பொண்டாட்டிய புருஷன் அடிக்றது கௌரதையான விஷயம். நம்ம சமூக பழமொழிகளை கவனிங்க. அடிச்சலும் புடிச்சாலும் அவன்தானே புருஷன்!’ ‘அடிக்ற கைதான அணைக்கும்’ ‘அடி உதவுற மாதிரி அண்ணன் தம்பி உதவமாட்டாங்க! ‘அடியாத மாடு படியாது’ ’ஆடற மாட்டை ஆடிக் கறக்கனும் பாடுற பாட்டை பாடிக்கறக்கனும்’ இப்டி. ஆயிரம் ஆம்பிளைக மனைவிய அடிச்சா ஒரு பொம்பிளைதான திருப்பி அடிப்பா.

“விசாலாட்சியம்மாவுக்கு எதிரா அவங்க பொண்ணுக சாட்சியம் சொன்னாங்க. என்னைக்காவது அவங்கஅவங்க புருஷன் அவங்களை அடிக்கும் போது சட்னு உறைக்கும். கோர்ட்ல தாய்க்கு எதிரா சாட்சியம் சொன்னோமேன்னு…’

பி.பி. எழுந்தார். “அப்ஜக் ஷன் யுவர் ஆனர். டிபன்ஸ் கவுன்ஸல் கிரியேட்ஸ் சிம்பதி அண்ட் ஸென்டிமென்ட்!”

“அப்ஜக் ஷன் ஸஸ்டெய்ன்ட் நேரடியாக விஷயத்துக்கு வாருங்கள்!”

“குற்றஞ்சாட்டப்பட்டுள்ள விசாலாட்சியம்மா இந்த வழக்கிலிருந்து தப்பிக்கனும்னா மனநலம் பாதிக்கப்பட்டவரா நடிச்சிருக்கலாம். அவர் நடிக்கவில்லை. மருத்துவச்சான்றிதழ் விசாலாட்சியம்மாவின் உடல் தழும்புகள் சீனிவாசனின் அடிகளினால் ஏறபட்டது என உறுதி செய்யவில்லை. ஆனால் தழும்புகள் உள்ளன என்கிறது. நீண்ட இடைவெளியில் உள் காயங்கள் சாதாரண தழும்புகளாய் உரு பெற்றிருக்கலாம். சாத்தியம் நிச்சயம் உள்ளது.”

“சீனிவாசன் ஒரு ஸைக்கோ கணவன்..”

“அப்ஜக் ஷன் யுவர் ஆனர்!”

“அப்ஜக் ஷன் ஸஸ்டெய்ன்ட்!”

“மனைவியை சீனிவாசன் ஏதேதோ காரணங்களுக்கு அடித்து துன்புறுத்தி மகிழ்ந்திருக்கிறார் என்கிறது விசாலாட்சி வாக்குமூலம் இதற்கும் கோர்ட் ஆதாரமும் சாட்சிகளும் கேட்கிறது. சீனி அடிக்கும் போதெல்லாம் இரண்டு சாட்சிகளை வைத்துக்கொண்டா அடித்திருப்பார்? ஆதாரம் பைல் பண்ணியா கொடுத்திருப்பார்? பாலியல் ரீதியான வன்முறைகள் எல்லாம் படுஅந்தரங்கமானவை  இந்த வழக்கில் வெறும் விசாலாட்சியம்மாவின் வாக்குமூலம் ஒன்றே போதுமானது அவருக்கு எதிரான அனைத்தையும் தகர்க்க.

“விசாலாட்சியம்மா செய்தது ஒரு கொலையல்ல. ஒருவெறி பிடித்த மிருகத்திடமிருந்து நிரந்தர தற்காப்பு. ஆணாதிக்க அடக்குமுறைகளுக்கு எதிரான புரட்சிப்பெண்களின் முன்னோடி”

“விடாது துரத்தி வந்தது வேட்டைநாய். ஒரு புள்ளியில் பயம் துறந்து திரும்பி சிலிர்த்தது முயல். பாய்ந்து வேட்டைநாயின் குரல்வளையை பிடித்தது முயல். அந்த பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனுக்குரியது. இந்த பாஞ்சாலஞ்குறிச்சி விசாலாட்சியம்மாவுக்கு உரியது.

“தொடர்ந்து முதுகை காட்டிய பெண்ணினம் நிமிர்ந்து விட்டது. ‘பொறுத்தது போதும் பொங்கியெழு!’ என கோஷமிட்டு பொங்கி வெடித்தது. தளைகள் அறுந்தன. புதிய போர்பரணி பாடி விசாலாட்சியம்மா போர்க்களம் புகுந்துவிட்டார்.

“மொத்தத்தில் தன்னை தற்காத்துக்கொள்ளவே விசாலாட்சியம்மா சீனிவாசனைக் கொன்றார் என உறுதியிட்டுக் கூறுகிறேன். ஆகவே இந்த கோர்ட் விசாலாட்சியம்மாவை குற்றமற்றவர் என விடுவித்து பெண்ணினத்துக்கு பெருமை சேர்க்க வேண்டுகிறேன். தாங்க்யூ யுவர் ஆனர். தட்ஸ் மை பைனல் ஆர்க்குமன்ட்!”

சீனியர் அட்வகேட் சந்தானம் ஆனந்தகண்ணீர் வடித்தார். கட்டை விரல் உயர்த்தினார்.

அருகாமை ஹேமந்த் காதில், “உன்னுடைய கன்னிப்பேச்சு அபாரமானது அசாத்தியமானது. இந்த வழக்கில் நீ தோற்றாலும் நீ ஜெயித்ததாகவே பொருள். ஒட்டுமொத்த கோர்ட்டே ஸ்தம்பித்து விட்டது. வெல்டன் மை பாய் வெல்டன்!”

நீதிபதி மெதுவாக விசாலாட்சியிடம் திரும்பினார்.

“நீ எதாவது சொல்ல விரும்புகிறாயா?”

“ஆமங்கய்யா!”

“என்ன…”

“என் வக்கீல் என் மகன் மாதிரி. அவர் வாதத்தை கேட்டு என்னை விடுவிச்சிராதிங்க.. எனக்கு மரணதண்டனை விதிங்க!”

-திடீரென்று கோர்ட் பரபரத்தது.

ஓட்டமும் நடையுமாய் உள்ளே வந்தான் பிரசாந்த்.

“வணக்கம் நீதிபதி அய்யா. இந்த வழக்கில் நான் சாட்சி சொல்ல விரும்புகிறேன்…”

“கவுன்ஸல் மூலம் மனு குடுங்கள்! அனுமதிக்கிறேன்!”

பி.பி எழுந்து அமர்ந்தார்.

கோர்ட் புதியதொரு திருப்பத்துக்கு ஆயத்தமானது.

விசாலாட்சி புரியாமல் குழப்ப முகம் காத்தாள்.

(-தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...