நீ என் மழைக்காலம் – 8 | இ.எஸ்.லலிதாமதி

 நீ என் மழைக்காலம் – 8 | இ.எஸ்.லலிதாமதி

 

அத்தியாயம் – 8

‘‘ழை வந்தால் நல்லா இருக்கும் இல்ல கார்த்தி’’ என்றாள்.

‘‘நல்லா இருக்கும் தான். ஆனால் நீ நினைக்கும் போதெல்லாம் மழை வராதே’’ என்றான்.

‘‘வரும் கார்த்தி’’ என்றாள்.

‘‘அதெப்படி வரும்?’’

‘‘மனசுக்குள் உன்னை நினைத்துக் கொண்டாலே தானாக மழை வரும். சாரல் வீசும்.. குளிர் அடிக்கும்…’’

‘‘இது லைப்ரரி… பார்த்து…’’என்று அவன் கண்ணடிக்கவும், அவள் சிரித்தாள்.

அவன் கையில் இருந்த குறுந்தொகையைப் பிடுங்கி குறிப்பு எழுத்தத் தொடங்கினாள்.

சங்க இலக்கியத்தில் நட்பு என்பது காதலைத் தான் குறிக்கிறது என்பதை மேற்கோள் காட்டுவதற்காக,  பாடல்களைத் தேடிக் கொண்டிருந்தார்கள். வீட்டில் இணையத்தில் போய் தேடினால், எளிதாக கிடைத்துவிடும் தான். ஆனால் அவன் கூட இருந்து தேடுவது, அவளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது.  சுகமாக இருந்தது. அவனும் அதை விரும்பியதால், அவள் சம்மதம் சொன்னாள்.

முதல் நூலாக குறுந்தொகை எடுத்துப் புரட்டினார்கள். அதில் இரண்டாவது பாடலே, இவளுக்கானதாகத் தான் இருந்தது தலைவன் அருகில்,  தலைவி இருக்கிறாள். ஆனால் அவள், நாணம் போர்த்தி சற்று தள்ளியே நிற்கிறாள். அவளை அருகில் அழைக்க வேண்டும்.  அதற்கு தலைவன் ஒரு பாடலைப் பாடுகிறான். ‘நட்பின் மயிலியல்’ என்று தன் காதலியைக் குறிப்பிடுகிறான்.  சங்க புலவர்,  இறையனார் என்பவர் பாடியது அது. அவள் பாடலுடன் கருத்தையும் எழுதத் தொடங்கினாள்.

“கொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறை தும்பி

காமம் செப்பாது கண்டது மொழிமோ

பயிலியது கெழீயிய நட்பின் மயிலியல்

செறியெயிற் றரிவை கூந்தலின்

நறியவும் உளவோ நீயறியும் பூவே”

‘தும்பியே உனக்கு அழகிய சிறகுகள். உன்னுடைய இயல்பு தேனை எடுப்பது தான் என்றாலும்,  எந்தப் பூவிற்கு மணம் அதிகம் உண்டு என்று உனக்குத் தெரியும். ஆனாலும் நான் சொல்கிறேன்.  நீ அறிந்த பூக்கள் யாவற்றையும் விட, இவள் கூந்தல் மணமுள்ளது. இவள் கூந்தலைக் காட்டிலும் மணமுள்ள பூவை நீ அறிந்திருக்கவே மாட்டாய்… ’ என்று வண்டைப் பார்த்து தலைவன் கூறுகிறான். தலைவியின் கூந்தலுக்கு அதிகமணம் என்கிறான்.  `நட்பின் மயிலியல்’ என்று தலைவியை, காதலியை நட்பு என்ற வார்த்தையில் பயன் படுத்தியிருக்கிறான்.

கார்த்தி சிரித்தான்.

‘‘ஏன் சிரிக்கிறே கார்த்தி?’’

‘‘ நிஜமாவே கூந்தலுக்கு மணம் இருக்குமா?’’ என்றான். அவளை குறுகுறு வென்று பார்த்தான்.

‘‘என்னைக் கேட்டால்? ஆண் புலவர் தான் இப்படி பாடியிருக்கிறார். அப்படிப் பார்த்தால் இந்தக் கேள்விக்கு நீ தான் பதில் சொல்லணும்..’’

‘‘நான் என்ன மாட்டேன் என்றா சொல்றேன். நீ வேணும்னா இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்து உட்காரு.  பார்த்துட்டு சொல்றேன்…’’ அவன் குறும்பு செய்ய, அவள் முகம் சிவந்தாள்.

‘‘ராஸ்கல்…  இது லைப்ரரி. ஞாபகம் இருக்கட்டும்’’ உதடு அவனை கண்டிதாலும் உள்ளம் அவன் குறும்பில் லயித்தது.

அதே குறுந்தொகையில் வரும் மூன்றாவது பாடலை எடுத்துக் கொடுத்தான்.

“கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு

பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே”

என்று தலைவன் மீது, தலைவி கொண்ட காதலை நட்பு என்ற சொல்லில் குறிப்பிட்டுள்ளதை,  அவர்கள் குறித்துக் கொண்டிருந்த வேளையில்,  அவள் வந்து கார்த்தியை உரசியபடி உட்கார்ந்தாள்.

நிர்மலா, கார்த்தியுடன் படிப்பவள். அவள் அப்பா ஐ.ஏ.எஸ். அதிகாரி.  தமிழக அரசில் அதிகாரியாக பணி புரிபவர்.  லட்சங்களில் புரளும் குடும்பம். அவளை அழைத்துப் போக ஒரு கார், கொண்டு வந்துவிட ஒரு கார் என்று தினம் ஒரு கார் வரும்.

என்ன ஒன்று, லட்சங்களில் புரளும் குடும்பத்தில், லட்சணமில்லாமல் பிறந்திருந்தாள் அவள்.  அவள் வயதுக்கும் உருவத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லாமல் இருந்தது. எடைபோடும் எந்திரத்தில் ஏறி நின்றால் நிச்சயம் நூறு கிலோவுக்கு மேல் தான் காட்டும். எப்போதும் தின்று கொண்டே இருப்பாளா, அல்லது தைராய்டு பிரச்சனை ஏதாவது இருக்குமா?  தெரியவில்லை கார்த்திக்கு. அதை தெரிந்து கொள்ளும் ஆர்வமும் அவசியமும் அவனுக்கு இல்லை. மூஞ்சியும் மொந்தை மாதிரி வீங்கியே இருந்தது.

ஆனால் அவள் கல்லூரியில் சேர்ந்த நாள் முதல், கார்த்தியை கவனிக்கத் தொடங்கி விட்டாள். பாடத்தைக் கூட கவனிக்காமல் அவனையே திரும்பித் திரும்பி பார்த்தாள். இவன் தான் சங்கடத்தில் நெழிந்தான். ஒரு பெண் அப்பட்டமாக இப்படியா வழிவாள்? எல்லோருக்கும் தெரிவிப்பது போல் நடந்து கொள்வாள்? எப்போதும் இவனிடம் வந்து ஏதாவது சந்தேகம் கேட்ட படியே நின்றாள். எனக்கு ஒன்றும் தெரியாது என்று தப்பிக்கப் பார்ப்பான். ஆனால் அவள் விடுவதாக இல்லை. ‘‘நீ எந்த அரசியல்  அதிகாரியை பேட்டி எடுக்க முடிவு பண்ணியிருக்கே?  சொல்லு! நான் வேணும்னா எங்க அப்பாகிட்ட சொல்லி அப்பாயிண்மென்ட் வாங்கித் தர்றேன்’’ என்றாள்.

“அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.  உங்க உதவி தேவையில்லை என்றான். பத்திரிகையில் வேலை செய்ய தெரிந்தவனுக்கு அரசியல் வாதிகளை அணுகுவதும் பேட்டி எடுப்பதும் அவ்வளவு கடினமில்லை என்று  ஏன்அவளுக்குத் தெரியவில்லை? ஒருவேளை தெரிந்தும் என்னை தொந்தரவு பண்ண நினைக்கிறாளா? இதென்ன தினமும்  இவளிடம் பெரிய வம்பாய் இருக்கிறது என்று நினைத்தான். பிரின்ஸ்பாலிடம் போய் சொல்லி விடலாமா என்று கூட நினைத்தான்.  சே! எதற்கு ஒரு பெண்ணுடைய பெயரை கெட்டப் பெயராக்க வேண்டும் என்று நினைத்தான். அவள் தான் ஏதோ மனப்பிரச்னையில் உழல்கிறாள். போகப் போக எல்லாம் சரியாகப் போகும் ’என்று நினைத்தான். ஆனால் போகப் போக  அவள் அட்டகாசம் கூடியதே ஒழிய குறைந்தப் பாடில்லை.

நண்பர்கள் கூட இவனை கேலி செய்தார்கள்.

“மச்சான்!  பேசாமல் அந்த ஐ.ஏ.எஸ்.  பொண்ணை ஒ.கே. சொல்லிட்டு வாழ்க்கையில் சீக்கிரம் செட்டிலாயிடு”  என்று கேலி செய்தனர்.

“போங்கடா….” என்று நோட்டுப் புத்தகத்தால் அவர்கள் முதுகில் ரெண்டு சாத்து சாத்தினான்.

“நான் பாழும் கிணற்றில் விழுந்தாலும் விழுவேனே ஒழிய, இவள் காதலில் விழ மாட்டேன்.  இதுசத்தியம்”  என்றான்.

ஆனாலும் அவள் வந்து வந்து இவன் முன்னாடி நின்றாள். “ஏன் என்னை நிராகரிக்கிறீங்க?  என்றாள்.

“என்னை தப்பா நினைக்காதீங்க.  நான் படிக்கணும். எனக்கு வாழ்க்கையில் நிறைய லட்சியம் இருக்கு. அதுக்குள் காதல் கத்தரிக்காய் சரிபட்டு வராது…. சாரி”  என்றான்.

அவளுக்கு கோபம் சுர்ரென்று தலைக்கு ஏறியது. எப்போதும் தனக்கு கீழ் உள்ளவர்கள் மீது அதிகாரம் செய்தே பழகிய குடும்பத்தில் இருந்து வந்தவளின் குணமும் அப்படியாகத் தான் இருந்தது. அவள் கார்த்தி மீது அதிகாரம் செய்ய நினைத்தாள்.  தன் வீட்டு செல்வாக்கு, அதிகாரத்தின் மூலம் அவனை அடைந்து விடலாம் என்று கனவு காண ஆரம்பித்தாள்.

“என்னை ஏன் வேண்டாங்கிறேன்னு எனக்குத் தெரியும். நான் குண்டா இருக்கேன்னு நினைச்சுதான் நீ என்னை வேண்டாங்கிறே,  அப்படித்தானே?”  என்றாள்.

அது உண்மையோ பொய்யோ அது அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் அவளைப் பார்த்தாலே பிடிக்கவில்லை.  சும்மா நட்பாகக் கூட பேசப் பிடிக்கவில்லை. சிலரை பார்த்தவுடனே பிடித்துப் போகும்.  சிலரை பார்த்து பழகி பேசியவுடன் பிடித்துப் போகும்.  சிலரை மறுபடியும் பார்த்து விடவே கூடாது என்று நினைக்கத் தோன்றும். கார்த்தி அவளை மறுபடியும் பார்த்து விடவே கூடாது என்று நினைத்தான்.

இப்படிஎல்லாம் ஒருபெண்ணை தன் வாழ்நாளில் சந்திப்போம் என்று அவன் கனவில் கூட நினைக்க வில்லை. அப்படி சந்தித்தப் பெண் இந்த அளவிற்கு வெறுப்பை தரக்கூடியவளா நடந்து கொள்வாள் என்றும் நினைக்கவில்லை.

பல நேரம் ஏன் அவள் மீது அத்தனைக் கோபம், வெறுப்பு என்று அவன் நினைப்பான்.

அவள் மீதான  கோபத்தை விட, அவள் நடந்து கொண்ட விதம் தான் அவள் மீது வெறுப்பாகவும் கோபமாகவும் மாறியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிந்தது.

ஒருவர் செய்யும் செயல் தான், எதிரில் இருப்பவர்களை நல்லவர்களாகவும், தீயவர்களாகவும் மாற்றுகிறது என்பதை அவன் உணர்ந்து கொண்டிருந்தான்.

கார்த்திக்கு நிர்மலாவின் செயல், பேச்சுயாவும் அவள் மீது வெறுப்பை வளர்த்ததே ஒழிய, காதலை வளர்க்கவிலை.

ஆனாலும் அவள் அவனை விடுவதாக இல்லை. அவனை பின் தொடர்ந்தபடியே இருந்தாள்.  காய் என்றாவது பழுக்கும் என்று காத்திருந்தாள். ஆனால் அந்தப்பழத்தை இன்னொருகிளி வந்து கொத்திப்போவதை அவள் மனம் ஏற்கவில்லை. அதனால் தான் கார்த்தி மரத்தடியில் காத்திருந்த போது வேண்டுமென்றே நிவேதிதாவை வேறுவழியில் அழைத்துப் போனாள். நிவேதிதா கார்த்தியை சந்தித்துவிடக் கூடாது என்று சதி செய்தாள்.

ஆனால் அவள் அறியவில்லை.. காதல் காற்றைப் போன்றது என்றோ, எல்லா காலங்களிலும் சதி சாதகமாக கை கொடுக்காது என்பதையோ.

அவள் நெருங்கி வந்து உட்கார்ந்தப்பிறகு தான், உள்ளுணர்வு உணர்த்த, கார்த்தி நிமிர்ந்துப் பார்த்தான். அப்போது தான் நிவேதிதாவும் அவளைப் பார்த்தாள்.

பார்த்ததும் துணுக்குற்றாள். `இப்படி தோளில் உரசியபடி அவள் உட்காருகிறாள் என்றால் என்ன அர்த்தம்?’ அவள் கார்த்தியையும் அவளையும் மாறிமாறி பார்த்தாள். என்ன சொல்வது என்று திகைத்தாள்.

ஆனால்,  அவளை மேலும் யோசிக்கவிடாது கார்த்தி பேசினான்.

“நிர்மலா பளீஸ்! என்னை தொந்தரவு பண்ணாதீங்க  எழுந்துபோங்க” என்று அவளிடமிருந்து விலகி உட்கார்ந்தான்.

“ நான் ஏன் போகணும்?  நான்  போக மாட்டேன். நேற்று வந்த எவளோ ஒருத்தியை நீ காதலிப்பே.  கடந்த ஒரு வருஷமா உன்னை விழுந்து விழுந்து காதலிக்கிறேன். என்னை நிராகரிப்பியா நீ?  அப்படி என்கிட்ட என்ன தான் குறை கண்டே? என்னிடம் பணம் இல்லையா?  வசதி இல்லையா?  என்ன வேணும் உனக்கு?

இந்த குண்டு உடம்பு தான் உனக்குப் பிரச்சனை என்றால் நீ சரின்னு சொல்லு. அடுத்த ஒரு மாசத்தில் எப்படி உடம்பை குறைக்கப் போறேன்னு பாரு…! உனக்காக என் உடம்பை ஆப்ரேஷன் பண்ணிகூட நான் அறுத்தெறிய தயாராக இருக்கிறேன்….! ஆனால் அதுக்கு நீ என்னை காதலிக்கிறேன்னு ஒருவார்த்தை சொல்லணும்…” அவள் வெறிபிடித்தவள் போல் கத்தினாள்.  அவன் ஏதோ சொல்ல வந்தான்.

“முடியாதுன்னு மட்டும் சொல்லாதே!  லட்சியம்,  சிகரம் அது இதுன்னு கதை விடாதே. இதோ இவளைப் பார்த்ததும் உன் லட்சியம் எங்க போச்சு.  இப்ப இவகூட சுத்தறியே? இதுக்கு பேர் என்ன?” அவள் நக்கலடிக்கவும், நிவேதிதாவிற்கு என்ன நடக்கிறது என்பது அப்போது தான் புரிந்தது.

`இதனால் தான் அன்று ரூட்டை மாற்றி கார்த்தியை சந்திக்கவிடாமல் செய்தாளா?’ புரிந்தது அவளுக்கு.

“இத பாருங்க!  நீங்க ரொம்ப ஓவரா போறீங்க. நீங்க இப்படி பிகேவ் பண்றது கொஞ்சம் கூட சரியில்லை.  இனி ஒருவார்த்தை ஏதாவது என்னையோ, நிவேதிதாவையோ தப்பா பேசினால், நான் பிரின்ஸ்பால் கிட்ட போக வேண்டி இருக்கும்”  என்றான்.

அதைக்கேட்டு அவள் நக்கலாகச் சிரித்தாள்.

‘‘எங்கப்பா பேரைக் கேட்டாலே அந்தப் பிரின்ஸ்பால் தொடை நடுங்குவார். இதில் நீ புகார் பண்ணப் போறியா?  வேணும்னா போய் புகார் குடுத்துப்பாரு. என்ன நடக்கிறதுன்னு…”

அவள் அவனைவிட்டு விலகிச் சென்றாள். போகும் போது நிவேதிதாவை முறைத்து பார்த்துவிட்டுப் போனாள்.

`என் கார்த்தியை நீ அபகரிச்சுட்டே  இல்லே. உன்னை என்ன செய்றேன் பார்’ என்பது போல் இருந்தது அந்தப் பார்வை.

-(சாரல் அடிக்கும்)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...