சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்/இரா. சந்திரசேகரன்
புதிய
கவிஞர்
அறிமுகம்
சமுதாயம் புதிய பார்வை பெறட்டும்
கண்கள் திறந்தன
காட்சிகள் விரிந்தன
மங்கலாகத் தெரிந்த
தூரத்துப் பச்சை
மங்களம் மிகுந்து
தெளிவாய் மிளிர்கிறதே
எங்கும் ஒளி
எதிலும் பளிச்சென
பொங்கும் அழகு
பூத்து ஒளிர்கிறதே
பூமி புதிதாகப்
பிறந்துவிட்டதா
சூரியன் மறைய
மறந்துவிட்டதா
ஓ..புதிய பார்வை
கிடைத்துவிட்டதோ…
கண்ணிமை கருவிழி
காத்து நிற்கும் விழிவில்லை
விழிவில்லை ஒளிமங்க
முதுமை தரும் கருந்திரை
விஞ்ஞான வியப்புமிகு
செரிவுநிறை சீரொளி
விரைந்து இயங்கி
புரைகரைக்கும் ஊடொளி
புதிய பார்வை தந்துவிடும்
புத்துலகைக் காட்டிவிடும்
கண்ணில் விழுந்த
புரைதனை போக்கிடலாம்
மண்ணில் விழுந்த
புரைகளை என் செய்வோம்
போற்றத்தகு பெண்மையை
தூற்றிவிடும் துயரம்
பெண் சக்தி பேசிவிட்டு
வன்புத்தியே தொடரும்
அரசியலில் ஆதாயமட்டுமே
தேடி நிற்கும் அவலம்
ஆட்சியில் மாட்சியென்பது
வெறும் காட்சியான மடமை
கல்விக்கு விலைவைத்து
கலைகளைக் கொலை செய்து
கலாச்சாரத்தைக் காலால்
மிதிக்கும் கொடுமை
கருப்பப்பணம் கள்ளச்சந்தை
கலக்கம் தரும் கயமை
நாகரீக மோக மது
தடுமாறும் தலைமுறை
நல்லியல்பு தெய்வீகம்
நலிந்துவரும் நடைமுறை
எத்தனை புரைகள்
இந்த சமுதாயத்தில்
என்று புரியும்
என்று விடியும்
இறைவா….
விஞ்ஞான சீரொளிபோல்
மெய்ஞான பேரொளியை வீசிவிடு
விண்ணிலிருந்து கருனைமிகு கதிரோளியை கனிவுடனே பாய்ச்சிவிடு
உன் அருள்மழையால்
அழுக்குகளை அகற்றிவிடு
புரைகளையெல்லாம் கரைத்துவிடு
சமுதாயம் புதிய பார்வை பெற்றுவிடட்டும்
புதிய பாரதம் வென்றுவிடட்டும்