இன்றைய முக்கிய நிகழ்வுகள் (24.11.2024)
படிவளர்ச்சி தினம்
படிவளர்ச்சி தினம் நவம்பர் 24ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. படிவளர்ச்சி என்பது உயிரினங்களின் பரிமாண வளர்ச்சியை குறிப்பதாகும். சார்லஸ் டார்வின் உயிரினங்களின் தோற்றம் என்கிற நு}லை 1859ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் தேதி அன்று வெளியிட்டார். இந்த நு}ல் வெளியிடப்பட்ட நாளை நினைவுகூறும் வகையில் படிவளர்ச்சி நாள் கொண்டாடப்படுகிறது.
தூத்துக்குடி ரயில் விபத்து
இதே நாளில் 68 ஆண்டுகளுக்கு முன்னால், 250 உயிர்களை காவு வாங்கிய தூத்துக்குடி ரயில் விபத்து இன்றைக்கு நினைவுக்கு வருகின்றன. இந்த விபத்துக்கு, நானே பொறுப்பு ஏற்றுக் கொள்கிறேன் என்று அன்றைய ரயில்வே அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி, பிரதமர் நேரு தடுத்தும், 1956 நவம்பர் காலகட்டத்தில் பதவி விலகினார். அரியலூரில் 23-11-1956 அன்று இந்த விபத்து நடந்தது. சென்னை எழும்பூரில் இருந்து தூத்துக்குடிக்கு சென்ற தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரயில் (ரயில்வண்டி எண் 603) முதல்நாள் 22ஆம் தேதி இரவு 9.30 மணிக்கு புறப்பட்டது. அந்த தொடர்வண்டியில் 800 பயணிகள் அன்றைக்கு பயணித்தார்கள். அப்போதெல்லாம் டீசல் என்ஜின் கிடையாது. நிலக்கரியை போட்டு நீராவி என்ஜின் மூலம் அன்றைய ரயில்கள் ஓடியது. இந்த தூத்துக்குடி ரயில் வண்டிக்கு முன்னால், திருவனந்தபுரம், திருநெல்வேலி விரைவு ரயில்கள், எழும்பூரில் இருந்து கிளம்பியிருந்தன. இந்த ரயில் புறப்படும்போது 13 பெட்டிகள் இணைக்கப்பட்டன. இடி மின்னல், பலத்த மழையோடு இந்த வண்டி சென்னையிலிருந்து கிளம்பியது. இந்த வண்டியின் கடைசி பெட்டி, விருத்தாசலம் சந்திப்பில் அகற்றப்பட்டு, சேலம் செல்லும் வேறு ரயிலில் இணைக்கப்பட்டது. இறுதியாக 12 ரயில் பெட்டிகளோடு தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் விருத்தாசலத்திலிருந்து புறப்பட்டு, விடியலில் 5.30 மணிக்கு அரியலுரை தாண்டி திருச்சிக்கு சென்று கொண்டிருந்த வேளையில், காவேரியின் உபநதியான மருதையாற்றின் மேல் அமைந்த புகைவண்டி பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, ரயில் தவறி ஆற்றின் வெள்ளப்பெருக்கில் விழுந்தது.
இந்த பாலத்தில் போதிய வெளிச்சமில்லாததால், ரயிலை ஓட்டிய ஓட்டுநர் துரைசாமி, நிலக்கரியை எரிய வைக்கும் ஃபயர்மேன் முனுசாமி, கோதண்டன் ஆகியோர்களுக்கு நடக்கபோகும் பெரும் விபத்தை அறியமுடியவில்லை. தண்டவாளம் ஆட்டம் கண்டு ரயில் பெட்டிகள் சடசடவென்று அதன் சுமையை தாங்காமல் அப்படியே வெள்ளத்தில் விழுந்தது. முதல் 7 பெட்டிகள் கடுமையான வெள்ளத்தில் மூழ்கிவிட்டன. இந்த துயரமான விபத்தில் 250 பேர் இறந்துவிட்டார்கள். பெரும் போராட்டத்திற்கு இடையில் ரயில்வே நிர்வாகம் இரண்டு, மூன்று நாட்களாக நடத்திய தேடுதலில், 150 உடல்களை மட்டும் மீட்க முடிந்தது. பலரது உடல்கள் அடையாளம் தெரியவில்லை. இந்த விபத்தில், பின்னாடிஇருந்தபெட்டிகளிலிருந்தவர்கள் தப்பித்து கொண்டார்கள். கடைசி பெட்டியில் இருந்த கார்டுகள் வைத்தியநாதசாமி, ஆறுமுகம் உயிர் தப்பினார்கள். அந்த விபத்தில் உயிர் தப்பியவர்களில் இன்றும் சிலர் 70, 80, 90 வயதுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இயற்கைக்கு மீறியது எதுவுமில்லை என்பதை இந்த துயர கதை மனித சமுதாயத்திற்கு உணர்த்துகின்ற பாடம் .
கோயம்புத்தூர் உருவான தினம்
கோயம்புத்தூர் மாவட்டம் உருவான தினம் நவம்பர் 24 பவானியை தலைமையிடமாக வடகொங்கு, தாராபுரத்தை தலைமையிடமாக தென்கொங்கு என இரண்டு மாவட்டங்களாக இருந்த கோவை ஒன்றுபட்ட கோவை மாவட்டமாக பிறந்து இன்றுடன் 220 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
“செம்மொழிப் பூங்கா” திறந்து வைக்கப்பட்ட தினம்
செம்மொழியாம் தமிழ் மொழியை சிறப்பிக்க “செம்மொழிப் பூங்கா” கலைஞர் அவர்களால் உருவாக்கி திறந்து வைக்கப்பட்ட தினம் இன்று. தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதை சிறப்பிக்கும் வகையில், ஜூன் மாதம் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி அதை நினைவுகூறும் வகையில் சென்னை நகரின் மையப்பகுதியில் அண்ணா மேம்பாலம் அருகே டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் சுமார் 700 வகையான தாவரங்களைக் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்காவைப் போல “செம்மொழிப் பூங்கா” வடிவமைக்கப்பட்டு தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களால் உருவாக்கி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டது.
ரவி வர்மாவின் கிருஷ்ணர் யசோதா ஓவியம் டில்லியில் ஏலம் விடப் பெற்ற தினம்
ரவி வர்மாவின் கிருஷ்ணர் யசோதா ஓவியம் டில்லியில் ஏலம் விடப் பெற்ற தினம் இன்று. நவீன காலத்துக்கு ஏற்ற முறையில் மேல்நாட்டில் வழங்கும் ஓவிய மரபை அப்படியே இந்தியப் பாணி ஓவியக்கலைக்குள் புகுத்தியவர். உலகப்புகழ் பெற்ற பல ஓவியங்களைப் படைத்தவர். 1873 இல் வியென்னாவில் நடைபெற்ற ஓவியக் கண்காட்சியில் ரவிவர்மாவின் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டு சிறப்பான விருதைப்பெற்றார். தென்னிந்தியப் பெண்களை இந்துக்கடவுளரின் உருவகங்களாகப் படைத்தார். பழம்பெரும் காவிய நாயகிகளான துஷ்யந்தை, சகுந்தலை, தமயந்தி போன்றோரின் உருவகங்களை வரைந்து உலகப்புகழ் பெற்றார். “நவம்பர் 24 2002 இல் டெல்லியில் நடந்த ஓவிய ஏலத்தில் அவரது யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.