தமிழக சைபர் கிரைம் பிரிவு போலீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை
‘போன் பே’ உள்ளிட்ட, யு.பி.ஐ., பயன்பாடு வாயிலாக, மோசடியான வங்கி பரிவர்த்தனைகள் அதிகஅளவில் நடந்து வருகின்றன. ‘போன் பே’ போன்ற யு.பி.ஐ., வாயிலாக, பயனாளிகளுக்கு தெரியாமல் பணம் எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஏழு புகார்கள் வந்துள்ளன. புகார் அளித்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து, ‘அமேசான் பே’ செயலிக்கு பணம் மாற்றப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இந்த அனுமதியில்லாத பணப்பரிவர்த்தனை பற்றிய விசாரணையில், ‘பிஎம் கிஷன் யோஜனா’ என்ற மோசடி செயலி பயன்படுத்தப்படுவது கண்டறியப்பட்டு உள்ளது.
இந்த செயலி பல்வேறு சேனல்கள் வாயிலாக, வாட்ஸாப் குழுவில் பகிரப்பட்டு வருகிறது. இது, பயனாளிகளின், எஸ்.எம்.எஸ்., பயன்பாட்டையும், சாதனங்களை இயக்குவதையும் கட்டுப்படுத்தக்கூடியது. மோசடிக்காரர்கள் எஸ்.எம்.எஸ்., போக்குவரத்தை தடுத்து, அதன் வாயிலாக, யு.பி.ஐ., செயலிகளில் மாற்றம் செய்து பயன்படுத்துகின்றனர். அவ்வாறு மோசடியாக சேகரிக்கப்பட்ட தரவுகளை கொண்டு, யு.பி.ஐ., செயலிகளில் பயன்படுத்தி, அனுமதி இல்லாத பரிவர்த்தனைகளை மோசடியாக செய்கின்றனர். இந்த செயலி, பெயர், ஆதார் எண், பான் மற்றும் பிறந்த தேதி போன்ற முக்கிய தனிப்பட்ட தரவுகளை, இணையதளத்தில் இருந்து எடுத்துக் கொள்கிறது.
இந்த அதிநவீன மோசடி தாக்குதல் பலருக்கு நிதி மற்றும் மனரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது. மோசடிக்காரர்கள், அரசின் நலத்திட்டங்களின் மீதான நம்பிக்கை மற்றும் தேவைகளின் மீதான அச்சத்தை ஏற்படுத்தி உள்ளனர்.எனவே, பொது மக்கள் தங்களது வங்கி கணக்கை அவ்வப்போது கண்காணிப்பதுடன், அனுமதியற்ற பண பரிமாற்றங்களை கண்டறிந்தால், வங்கிக்கு தெரியப்படுத்த வேண்டும். மேலும், தெரியாத இணைப்புகளை, ‘கிளிக்’ செய்வது, தேவையில்லாத செய்திகள், மின்னஞ்சலுக்கு பதிலளிப்பதையும் தவிர்ப்பது நல்லது. எந்த சூழலிலும், யு.பி.ஐ., தரவு களை அல்லது ஓ.டி.பி., எண் பகிர்வதை தவிர்க்க வேண்டும்.
தங்களது மொபைல் போனில் உறுதிப்படுத்தப் படாத செயலிகள் பதிவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
மோசடி குறித்து புகார் அளிக்க, 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகாரை பதிவு செய்யலாம்.