மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
மு. அருணாசலம் காலமான நாள் நவம்பர் 23
தமிழுக்கு மிக முக்கியமான பல பங்களிப்புகளைச் செய்த பெரும் தமிழறிஞர். நூற்றாண்டு வாரியாகத் தமிழ் இலக்கிய வரலாறு எழுதியவர். தமிழிசை இலக்கிய வரலாறு, தமிழிசை இலக்கண வரலாறு ஆகியவற்றையும் இவர் எழுதியுள்ளார். நாகப்பட்டினம் மாவட்டம் திருச்சிற்றம்பலம் என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
தன்னை விளம்பரப்படுத்திக் கொள்ளாமல் தமிழுக் காகவும் இலக்கியத்துக் காகவும் பணியாற்றிய ஓர் உன்னத ஆளுமை மு. அருணாசலனார்.
கவிமணி தேசிக விநாயகத்தின் கவிதைகளைத் தொகுத்து முதன்முதலில் புத்தகமாக வெளியிட்டது மு.அ.தான். 1938-ல் வையாபுரிப்பிள்ளையின் துணையுடன் ‘மலரும் மாலையும்’என்ற நூலாக கவிமணியின் கவிதைகளை வெளியிட்டார் மு.அ.
அந்தப் பதிப்பில் அவர்தான் பதிப்பித்தார் என்பதற்கான எந்த குறிப்பும் இடம்பெறவில்லை. ‘புதுமைப் பதிப்பகம், 3, சாம்பசிவம் தெரு, தி.நகர்’ என்கிற பதிப்பக முகவரி இந்நூலின் முன்பக்கத்தில் உள்ளது. இம்முகவரி மு.அ.வின் வீட்டு முகவரி. இன்றும் இம்முகவரியில் மு.அ.வின் வாரிசுகள் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். ஆனால், கவிமணியின் வரலாற்றை விளக்கும் நூல்களில் மு.அ.வின் பெயர் இடம்பெறுவதில்லை என்பதுதான் வரலாற்றுச் சாபக்கேடு.
வாய்மொழி இலக்கிய ஆய்வாளர்
நாட்டாரியல் துறையில் முக்கியமான பங்களிப்புகளைச் செய்தவர் மு.அ. ‘தமிழ் நாட்டுப்புறப்பாடல் தொகுப்பின் முன்னோடி’ என்று ஆய்வாளர்களால் சுட்டப்படுபவர். ‘காற்றிலே மிதந்த கவிதை’ என்ற தலைப்பில் 1943-ல் இவர் எழுதிய நூல்தான் தமிழில் முதலில் வெளியான வாய்மொழிப் பாடல்கள் தொகுப்பு. தமிழ்க் கதைப்பாடல் ஆய்வின் முன்னோடியாகவும் இவரே அறியப்படுகிறார்.
1992-ல் தான் இறக்கும் வரை ஏறக்குறைய அறுபது ஆண்டுகள் தொடர்ச்சியாகத் தமிழ் இலக்கியத்துக் காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டிருந்த இந்த மாபெரும் வரலாற்று ஆளுமையின் பங்களிப்புகள் இனியாவது வகுப்பறைகளில் வாசிக்கப்பட வேண்டும்.