சுரதா பிறந்த தினம் இன்று:

 சுரதா பிறந்த தினம் இன்று:

சுரதா பிறந்த தினம் இன்று:🌹

இந்த யுகத்தின் சிறந்த கவிஞரான “சுரதா”வை அறியாதவர்கள் இருக்க முடியாது.மரபில் தோய்ந்தவர்களாக இருந்தாலும் சரி, புதுக்கவிதைப் படைப்பாளிகளாக இருந்தாலும் சரி, உவமைக் கவிஞரின் கவிதைகளில் ஒரு கவிதையையாவது இரசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள்.மனதில் தனக்குச் சரியெனப்பட்டதை பளிச்சென்று வெளியிடும் துணிவு மிக்கவர்.
கவிஞர் சுரதா, தஞ்சை மாவட்டத்துப் பழையனூரில், திருவேங்கடம் – சண்பகம் தம்பதிக்கு 1921ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதி பிறந்தார்.

இயற்பெயர் இராசகோபாலன்.பெரும்பாலும் கவிஞர்கள் பிறரைப் பின்பற்றி எழுதும் வழக்கமுடையவர்கள். அதை சுரதா விரும்பாதவர்.”தனக்கு அதில் உடன்பாடில்லை, “அந்த நிழல் வழி வாசலை” விட்டு நீங்கி எழுதும் கவிஞன் நான். இவரையோ, அவரையோ பின்பற்றி எழுதப் பிரியப்படாதவன்”என்று மார்தட்டிக் கொள்வதில் தவறில்லை என்பதை நிரூபித்தவர்.

இராஜகோபாலன், “சுரதா” ஆன வரலாறு சுவைமிக்கது.இராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார். புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே…? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார். இளைஞர் இராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, “பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்” என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.”இவரன்றோ பண்புமிக்க கவிஞர்” என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.

1941ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் பாவேந்தரது தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால், “சுப்புரத்தினதாசன்” என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார். கடிதம் எழுதிக் கையெழுத்திடும்போது இட வசதிக்காக “சு ர தா” என்று இடம்விட்டு எழுதுவார்.அந்த மூன்று எழுத்துகளே “சுரதா” ஆனது.

சுரதாவின் முதல் கவிதை “கவி அமரன்”, “பிரசண்ட விகடன்” இதழில் வெளிவந்தது.பல ஆண்டுகள், பாரதிதாசனின் வீட்டிலேயே தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கு உதவியாக இருந்தார்.நாமக்கல் வெ.இராமலிங்கம் பிள்ளையுடன் பல மாதங்கள் தங்கியிருந்து அவரது எழுத்துப் பணிகளுக்கும் உதவியாக இருந்தார்.

“உவமைக் கவிஞர்” என்று மக்கள் அளித்த விருது அவரிடம் பிரிக்க முடியாமல் ஒட்டிக்கொண்டது.தன்னைப்போன்று “உவமை கொட்டி” எழுதுபவரை ஆதரித்தாரா இல்லையா என்பது தெரியாது.ஆனால், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட கவியரங்க நிகழ்ச்சிகளுக்குத் தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட கவிஞர்கள், இவர் தலைமையில் பாடியிருக்கிறார்கள்.உலகத் தமிழ்க் கவிஞர் பேரவையைத் தொடங்கிய இவர், தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

“எதிலும் புதுமை, புரட்சி” செய்வதில் நாட்டம் கொண்ட சுரதா,

வீட்டுக்கு வீடு கவியரங்கம்
முழுநிலாக் கவியரங்கம்
படகுக் கவியரங்கம்
ஆற்றுக் கவியரங்கம்
கப்பல் கவியரங்கம்
எனப் பல்வேறு கவியரங்க நிகழ்ச்சிகளை நடத்தி, இளங்கவிஞர்களை ஊக்குவித்துள்ளார்.

சுரதாவின் கொள்கைகள் வித்தியாசமானவை.ஆனால் அழுத்தமானவை. “கணக்கைப் போன்றதே கவிதை என்பதால், கவிதை புனைந்திடக் கற்பனை வேண்டும் என்னும் கருத்தை ஏற்பதே இல்லை” என்று அவர் தம் கவிதை ஒன்றில் கூறுவதற்கும் துணிவு வேண்டும்.புகழைத் தேடி அவர் சென்றதில்லை; அவரைத் தேடித் தேடிப் புகழ் வந்தது. அறிஞர் வ.ரா.வை முதன் முதலில் சந்தித்தபோது கவிதை ஒன்றைப் பாடுங்கள் என்று வ.ரா. சொல்ல, உவமைக் கவிஞரின் கவிதையைக் கேட்டவுடன், “மற்றொரு பாரதி பிறந்து விட்டான்” என்று பலர் முன்னிலையில் மனமாரப் பாராட்டியிருக்கிறார்.

“சிவாஜி” ஆசிரியர் திருலோக சீதாராம், தம் இதழில் உவமைக் கவிஞரின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டிருக்கிறார்.முரசொலி நாளிதழும் சுரதாவின் கவிதைகளைத் தொடர்ந்து வெளியிட்டுச் சிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1944ஆம் ஆண்டு “மங்கையர்க்கரசி” என்ற திரைப்படத்துக்கு சுரதா முதன்முதலில் வசனம் எழுதிக்கொடுத்தார்.மிகக் குறைந்த வயதில் திரைப்படத்துக்கு வசனம் எழுதியவர் “சுரதா” என்றே கூறலாம்.சுரதாவின் வசனங்கள் மிகவும் புகழ் பெற்றவை.

திரைப்படங்கள் பலவற்றில் சுரதாவின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
ஜெனோவா
நாடோடி மன்னன்
அமரகவி
தை பிறந்தால் வழி பிறக்கும்
தலை கொடுத்தான் தம்பி
நீர்க்குமிழி
மறக்க முடியுமா
நேற்று இன்று நாளை
முதலிய படங்களின் பாடல்கள் என்றுமே மறக்க முடியாதவை.

எழுதாமல் இருப்பவர்களைப் பார்த்தாலும், எழுதிக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தாலும் “எழுதுக! எழுதுக! இன்னும் எழுதுக! விழுதின் ஆலமரம்போல் விரிந்து பரவும் பான்மையில் எழுதுக” என்று ஊக்கப்படுத்துவார்.

“மங்கையர்க்கரசி” வசனம் மிகவும் புகழ் பெறவே, அதை நூலாக வெளியிட்டார்.திரைப்பட உரையாடல் (வசனம்) கதைப் புத்தகமாக முதன்முதலில் வெளிவந்தது கவிஞர் சுரதா எழுதியதே.
1946இல் “சாவின் முத்தம்” என்ற நூலை எழுதினார்.வி.ஆர்.எம்.செட்டியார் அதை வெளியிட்டார்.

1955இல் “பட்டத்தரசி” என்ற சிறு காவிய நூல் வெளிவந்தது.

சுரதா, “உவமைக் கவிஞர்” என்ற புகழ் பெற்றவுடன், “காவியம்” என்ற பெயரில் கவிதை வார இதழ் ஒன்றைத் தொடங்கினார்.முதன்முதலில் கவிதையிலேயே வார இதழ் நடத்தியவர் என்ற பெருமையும் பெற்றார்.பிறகு, “இலக்கியம்”, “ஊர்வலம்”, “விண்மீன்” எனப் பல இலக்கிய ஏடுகளை நடத்தினார். வெள்ளையாம்பட்டு சுந்தரம், சுரதாவின் “தேன் மழை” என்ற கவிதை நூலை வெளியிட்டார். அதற்குத் தமிழக அரசு 1969ஆம் ஆண்டு பரிசளித்தது.

ஆனந்த விகடனில் வாரம்தோறும் கவிதைகள் எழுதினார்.

திரைப்பட நடிகைகளைப் பற்றி அவர் எழுதியது பலருக்குப் பிடிக்கவில்லை.ஆனால் அதற்கு சமாதானமான பதிலைச் சாதுர்யமாக அளித்திருக்கிறார்.

1972ஆம் ஆண்டு கலைமாமணி விருது வழங்கி தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றம் பெருமை பெற்றது.
1982இல் எம்.ஜி.ஆர்., பாவேந்தர் விருதும், பத்தாயிரம் ரூபாயும், தங்கப்பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தார்.
1990இல் தமிழக முதல்வர், பாவேந்தர் விருது வழங்கிச் சிறப்பித்தார்.
1995இல் அன்றைய தமிழக முதல்வரான ஜெயலலிதாவால், தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “இராஜராஜன்” விருது வழங்கப்பட்டது.

20க்கும் மேற்பட்ட கதை, கவிதை, கட்டுரை நூல்களும் 100க்கும் மேற்பட்ட திரைப்பாடல்களும், நான்கு திரைப்படங்களுக்கு வசனம்மும் எழுதிப் புகழைச் சேர்த்துக்கொண்டார்.
சுரதா, தன் சகோதரியின் மகள் சுலோசனாவை மணந்தார். அவர்களுக்கு ஒரு மகன். பெயர் கல்லாடன்.

ஒழுக்க சீலரும், வாழ்க்கைநெறியைச் சற்றும் மீறாதவருமான கவிஞர் சுரதா, 2006ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி நள்ளிரவு காலமானார்.மணிவிழா, பவழவிழா, முத்துவிழா கண்ட உவமைக் கவிஞர் 85 ஆண்டுகள் தன் கவிதையின் வலிமையால், நல்ல நண்பர்களின் நட்பால் உயிர் வாழ்ந்தவர்.தமிழ் உள்ளவரை வாழ்வார்.

“உண்மையில் அவர் மறையவில்லை; உவமைகள் உள்ளவரையில் வாழ்வார்” என்று எழுதிய கவிஞர் சுரதாவின் கவிதையும் அழியாது.

uma kanthan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...