காத்து வாக்குல ரெண்டு காதல் – 8 | மணிபாரதி

 காத்து வாக்குல ரெண்டு காதல் – 8 | மணிபாரதி

 

அத்தியாயம் – 8

ராகவ், வீட்டு வாசலில் பைக்கை நிறுத்திய போது, அவனது வீடு பூட்டியிருப்பது தெரிந்தது. இந்த நேரத்துல எங்க போயிருப்பாங்க? வெளில போறதா இருந்தா கூட அப்பா போன் பண்ணி சொல்லி இருப்பாரே? இன்னிக்கு பத்மா மேட்டர ஓப்பன் பண்ணிடலாம்ன்னு பார்த்தேன்..  அவங்க பாட்டுக்கு சொல்லாம கொள்ளாம எங்கயோ போய்ட்டாங்களே.. யோசனையுடன் போனை எடுத்தான். அப்போது நந்தினியிடமிருந்து அவனுக்கு போன் வந்தது. இவ ஏன் இந்த நேரத்துல போன் பண்றா? யோசனையுடன்  ஆன் பண்ணி “ஹலோ..“ என்றான்.

“ராகவ்.. கொஞ்ச நேரத்துக்கு முன்னால ஆண்ட்டி திடீர்ன்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.. தாமரை ஹாஸ்பிட்டல்லதான் அட்மிட் பண்ணிருக்கோம்.. நாங்க எல்லோரும் அங்கதான் இருக்கோம்.. நீ உடனே அங்க வறியா..“

“வரேன்..“ என்றவன், பைக்கை ஸ்டார் பண்ணி வேகமாக புறப்பட்டான்.

தாமரை ஹாஸ்பிட்டல்.

மாலதி கண் மூடி படுத்திருந்தாள். அருகில் நந்தினி ஜூஸ் பிழிந்து கொண்டிருந்தாள். வெளியில் பாஸ்கரனும் வெங்கடாச்சலமும் கவலையுடன் உட்கார்ந்திருந்தார்கள். ராகவ் வேகமாக அங்கு ஓடி வந்தான். வெங்கடாச்சலத்திடம் “என்னப்பா ஆச்சு..“ எனக்கேட்டான்.

“லோ பிரஷர்.. ஒழுங்கா சாப்புட்டாதான..“

“இப்ப எப்படி இருக்காங்க..“

“சரியான நேரத்துக்கு கூட்டிகிட்டு வந்துட்டதுனால உயிருக்கு ஆபத்து இல்ல.. இனிமே கவனமா பாத்துக்கனும்..“

“போய் பார்க்கலாமாப்பா..“

“ம்..“

அவன் உள்ளே வந்தான். நந்தினி ஸ்பூனால் மாலதிக்கு ஜூஸ் ஊட்டி விட்டுக்  கொண்டிருந்தாள். ராகவ்வை பார்த்ததும் “வா ராகவ்..“ என்றாள். அவன் மாலதியை பார்த்தான். கண்கள் கலங்கியது. அதை கவனித்த நந்தினி “அழாத ராகவ்.. நாமதான் அவங்களுக்கு தைரியம் சொல்லனும்..“ என்று கூறி “ஆண்ட்டிய இனிமே அவங்க இஷ்டத்துக்கு விடக்கூடாது.. வேளா வேளைக்கு கரெக்ட்டா சாப்ட்டாங்களா.. டேப்லட்டெல்லாம் ஒழுங்கா எடுத்துகிட்டாங்களான்னு குளோஸா வாட்ச் பண்ணனும்..“ என்றாள்.

“சரி..“

அப்போது உள்ளே வந்த வெங்கடாச்சலம் ராகவ்விடம் “நந்தினி சரியான நேரத்துக்கு வந்ததுதான் மாலதிக்கு பெரும் உதவியா இருந்துச்சு..“ என்றார். அவன் நந்தினியை நன்றியுடன் பார்த்தான். அவள் “உனக்கு அங்கிள் ட்ரை பண்ணிருக்கார்..   நாட் ரீச்சபிள்ன்னு வந்துருக்கு.. அதுக்கப்புறமாதான் எனக்கு போன் பண்ணார்..“ என்றாள். அப்போது டாக்டர் உள்ளே வந்தார். மாலதியை பரிசோதித்து பார்த்தார். பின் “ஈவ்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிடலாம்.. ரெண்டு மூனு நாளைக்கு நல்லா ரெஸ்ட் எடுக்கனும்..“ என்றார். வெங்கடாச்சலம் “சரி டாக்டர்..“ என்றார். டாக்டர் வெளியே போனதும் நந்தினி “மூனு நாளைக்கு நா கூட இருக்கேன்..“ என்றாள். மாலதி அவளை பெருமையாக பார்த்தாள். அதை ராகவ் கவனித்தான்.

மாலை, மாலதியை வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். நந்தினி அவளை உடன் இருந்து கவனித்துக் கொண்டாள்.

இரவு, ராகவ் அனைவருக்கும் ஹோட்டலில் டின்னர் ஆர்டர் பண்ணிடலாம் என்றான். ஆனால் நந்தினி “ஃபிரிட்ஜ்ல மாவு இருக்கு.. ஒரு ஹாஃபனவர் எனக்கு டயம் குடுத்திங்கன்னா இட்லி ஊத்தி சட்னி அரைச்சுடுவேன்..“ என்றாள். வெங்கடாச்சலம் “அதுவும் சரிதான்.. ஹோட்டல் ஃபுட் அவ்வளவு நல்லது இல்ல..“ என்றார்.

ராகவ்வை மாலதி பக்கத்தில் உட்காரை வைத்து விட்டு, அவள் கிச்சனுக்கு வந்தாள். மளமளவென்று வேலையை பார்க்க தொடங்கினாள். அரை மணி நேரத்தில் சூடான இட்லியும் தேங்காய் சட்னியும் ரெடி. அனைவரையும் டைனிங் டேபிளில் உட்கார சொல்லி, அவளே பரிமாறினாள். வெங்கடாசலத்திற்கு அவள் அரைத்திருந்த தேங்காய் சட்னி புது சுவையை தந்தது. “பிரமாதமா இருக்கும்மா..“ என்று கூறி ரசித்து சாப்பிட்டார். ராகவ்விற்கும் கூட அவள் அரைத்திருந்த சட்னி பிடிக்கதான் செய்தது. வழக்கமாக சாப்பிடுவதை விட ஒரு இட்லி கூடுதலாக சாப்பிட்டான். அவர்கள் சாப்பிட்டு முடித்ததும், நந்தினி மாலதிக்கு டிபன் எடுத்து வந்து ஊட்டி விட்டாள். கடைசியாக அவள் சாப்பிட்டாள்.

ராகவ் மொட்டை மாடியில் வந்து நின்றான். காற்று நன்றாக வீசியது. மனதில் இருந்த புழுக்கம் கரைய வில்லை. அது எப்படி கரையும்? கடவுள் பின்னும் வலையிலிருந்து யார்தான் தப்ப முடியும்? அவன், போனில் பத்மாவின் நம்பரை அழுத்தினான். பத்மா நம்பர் பார்த்து போனை எடுத்து ஆன் பண்ணி “என்ன வீட்டுல சொல்லிட்டியா..“ எனக்கேட்டாள்.

“இல்ல..“

“ஏன்..“

“அம்மாவுக்கு லோ பிரஷர்.. மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க.. ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணி இப்பதான் வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம்.. நந்தினியும் அவ அப்பாவும் இங்கதான் இருக்காங்க.. நந்தினிதான் அம்மாவுக்கு உதவியா இருக்கா..“

அதைக் கேட்டதும் பத்மா அதிர்ந்து போனாள். அவளுக்கு பேச்சு வரவில்லை.

“என்ன பத்மா அமைதியாயிட்ட..“

“எனக்கு என்ன பேசுறதுன்னு தெரியல.. ஆண்டிக்கு இப்படி ஆயிடுச்சேன்னு கவலைப்படுறதா.. இல்ல நந்தினி உதவிக்கு இருக்கான்னு சொன்னியே.. அதை நினைச்சு பயப்படுறதான்னு தெரியல..“

“அதுக்காக எல்லாம் நீ பயப்படாத.. அம்மா நல்லா இருந்துருந்தாங்கன்னா இன்னிக்கே நம்ம மேட்டர சொல்லி இருப்பேன்.. என்ன பண்றது, இப்படி ஆயிப் போச்சு.. ரெண்டு முனு நாள் போகட்டும்.. கண்டிப்பா பேசுறேன்..“

“சரி..“

அப்போது நந்தினி பால் கிளாஸூடன் வருவது தெரிந்தது.

“நந்தினி வர்றா.. நா அப்புறம் கால் பண்றேன்..“ என்று கூறி போனை கட் பண்ணினான்.

நந்தினி அருகில் வந்தாள். நிலவு வெளிச்சத்தில் அவளது நிழல் அவன் மேல் விழுந்தது. அதை கவனித்த அவன் சற்று நகர்ந்து நின்றான். அதை நந்தினியும் கவனித்தாள்.

“இந்தா ராகவ்..“

அவன் பால் கிளாஸை வாங்கிக் கொண்டான்.

“உனக்கு என் மேல எதுவும் கோபம் இல்லையே..“ அவள் கேட்டாள்.

“நா எதுக்காக கோபப்படனும்..“

“இல்ல, நீ யாருன்னு தெரியாதப்ப என்கிட்ட புரப்போஸ் பண்ண.. நானும் நீ யாருன்னு தொரியாததால, அப்பாவ பாத்துக்கனுமேன்னு உன்னை அவாய்ட் பண்ணேன்.. அதை மனசுல வச்சுகிட்டு..“

“அதெல்லாம் ஒண்ணுமில்ல.. அதை நா அப்பவே மறந்துட்டேன்..“

“அப்படின்னா என் நிழல் உன் மேல பட்டதும் எதுக்காக விலகி நின்ன..“

அவனுக்கு என்ன பதில் சொல்வது என தெரிய வில்லை. “காரணமெல்லாம் ஒண்ணுமில்ல.. சாதாரனமாதான் நகர்ந்து நின்னேன்..“ என சமாளித்தான்.

“அப்படியா..“ என்றவள் “ஆண்டிக்கு டேப்லட்ஸ் குடுக்கனும்.. நா வரேன்..“என்று கூறி மகிழ்ச்சியுடன் படிக்கட்டை நோக்கி நடந்தாள்.

அவன் கவலையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

 –காற்று வீசும்

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...