கொன்று விடு விசாலாட்சி – 7 | ஆர்னிகா நாசர்

 கொன்று விடு விசாலாட்சி – 7 | ஆர்னிகா நாசர்

அத்தியாயம் – 7

பிளாஷ்பேக்சம்பவம் ஐந்திலிருந்து பத்து வரை– 1975லிருந்து 1998வரை

தொடர்ந்து விசாலாட்சியை சீனி அடிப்பது தினசரி வழக்கமாய் போயிற்று.

அடிக்கும் விதமும் புதிது புதிதாய்.

ஒருநாள் தலையணையால் மொத்துவான்.

இன்னொருநாள் விசாலாட்சியை பெட்சீட்டில் சுருட்டி கால்களால் மிதிப்பான்.

ஜாக்கட் இல்லாமல் இருகைகளை உயர்த்திக்கட்டி அக்குள்களில் ஊசி குத்துவான்.

ஷார்ட் ஷர்க்யூட் ஆகும் வண்ணம் மின் உபகரணங்களை ஆயத்தப் படுத்தி தொடச் சொல்லுவான். மின்தாக்குதலில் தூக்கி எறியப்படும் விசாலாட்சியைக் கண்டு கைகொட்டி சிரிப்பான்.

யாராவது வந்துவிட்டால் பதறிசிதறி ஓடிவந்து தூக்கிவிடுவான். “பட்டிக்காடு பட்டீக்காடு… இப்டி கரண்ட் கூட விளையாடுறியே? உனக்கு எதாவது ஆய் போச்சுன்னா நா உசுர விட்ருவேன்… ஆமா….”

வேப்பம்பழங்களையும் பாகற்காய் விதைகளையும் ஒருகிலோ கொட்டி வைத்து ஒரு மூச்சில் தின்னச் சொல்லுவான்.

ஆசனவாயில் ஐஸ்கட்டி திணிப்பான். பிறவி உறுப்பில் மிளகாய் பொடி.

ஒருநாள் நல்ல மூடில் இருக்கும்போது  சீனியே கூறினான். “இப்டியெல்லாம் ஏன் வினோதமா பிஹேவ் பண்றேன்னு கேப்ப. பல சமயம் என் நடத்தைகளுக்கு எனக்கே காரணம் தெரியாது. இடைவிடாத ஒரு வெறி பெண்களுக்கு எதிரா குறிப்பா மனைவிக்கு எதிரா செயல்படச் சொல்லுது. போனபிறவில நாஜி கேம்ப்ல யூதர்களை சித்ரவதை செய்யும் ஹிட்லரின் வீரர்களில் நான் ஒருவனோ என்னவோ? டாக்டர்கிட்ட கூட உனக்குத் தெரியாம போய் பாத்துட்டேன். மந்திரிச்சு தாயத்து கூட கட்டிக்கிட்டேன். இருந்தும் என்மிருக வெறி நாளுக்கு நாள் கூடிக்கிட்டுத் தான் போகுது. ஒரே சமயத்தில் ரெண்டு ஆளா ஃபீல் பண்றேன். ஒண்ணு சராசரி புருஷன். இன்னொன்று வெறிபிடிச்ச ஆண்மிருகம். போனபிறவில நீ என்ன பாவம் செஞ்சியோ…. எனக்கு பொண்டாட்டியா வந்த கர்மாலயிருந்து யாரும் தப்ச்சு ஓட முடியுமா? இதுதான் வாழ்க்கைன்னு கிடந்திரு. ஒரு அடி குறைச்சுக்கிடைச்சா சந்தோஷப்படு!” இவ்வளவும் பேசிவிட்டு அடித்தான்.

அடுத்தடுத்த வருடங்களில் சீனி புதிய சித்திரவதைகளை கண்டு பிடித்தான்.

அது செயற்கையாய் விபத்துகளை ஏற்படுத்துவது.

மேஜை இழுப்பறையில் ஏராளமான உபயோகப்படுத்தப்பட்ட பிளேடுகளை போட்டு வைப்பான். அவசரமாக எதையாவது தேடியெடுக்க விசாலாட்சி முயல்வாள். கை கிழிப்பட்டு ரத்தம் கொட்டும்.

தீப்பெட்டிகளில் கருந்தேள் பிடித்து வந்து காலடியில் விடுவான். தேள் கொட்டும். விஷம் ஏறி துடிப்பாள் விசாலாட்சி. மருந்துவமனைக்கும் சீனியே அழைத்துச் சென்று விஷமுறிவு ஊசி போடுவான்.

மண்டை வெல்லத்தை திறந்து வைப்பான். கட்டெறும்புகள் மொய்க்கும் அப்படியே எறும்புகள் மொய்க்கும் மண்டை வெல்லத்தை கிடுக்கியால் பிடித்து வந்து தூங்கும் விசாலாட்சி மேல் எறும்புகளை உதிர்ப்பான். கடி வேதனையில் கதறுவாள் விசாலாட்சி.

இருமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாள் விசா.

முயற்சிகளை மூளையிலேயே கிள்ளினான் சீனி.

“தற்கொலை பண்ணிக்கப் போரியா? பேஷ் பண்ணிக்க. ஆனா உன் மூணுபுள்ளைக கதி என்னாகும்னு யோசிச்சுப்பாரு… மூத்த பெண் குழந்தைகயை பம்பாய் விபசாரவிடுதியில் வித்திருவேன். ரெண்டாவது பொட்டையை திருட்டுத்தொழிலுக்கு தத்து கொடுத்திருவேன். பய்யனை கண்ணை நோண்டிபிச்சை எடுக்க வச்சிருவேன். அப்றம் நான் அடிக்க தோதா புதுசா ஒரு தெவ்டியாளை கட்டிக்குவேன். சம்மதம்தானா?”

“வேணாம் வேணாம்… இது மாதிரி பேசாதிங்க. இனிமேல தற்கொலை பண்றத கனவிலயும் நினைக்க மாட்டேன். என் குழந்தைகளுக்காக எதையும் தாங்குவேன்?”

மூத்தப்பெண் திருமணத்துக்கு அடி “ஆஹா! அமெரிக்க மாப்பிள்ளைடி…. சீனியோட மருமகன் அமெரிக்கால ஓ…. ”  எட்டி புட்டத்தில் மிதித்தான் சீனி.

-கீர்த்தி காதல் பண்ணி வந்தபோது—

அவளிடம், “பண்ணிக்கம்மா. நா தடுக்கமாட்டேன். உங்கம்மாதான் கோக்மாக் பண்ணுவா. அவள சரிக்கட்டப்பாரு!” என்றான் சீனி.

ஆனால் தனிமையில் விசாவிடம் வந்து—

“ஏண்டி… இந்த பொண்ணுகளுக்கு வயசுக்கு வந்ததும் அடிவயிறு விச்சு விச்சுன்னுமா? உன் மகளுக்கு காதலாம் கத்திரிக்காயாம். கல்யாணத்துக்கு முன்னாடியே லவ்வர் கூட படுத்திருப்பாளா? அவ காதலிக்றது உனக்கு முன்னமே தெரியுமா? தெரிஞ்சிக்கிட்டு தெரியாத மாதிரி நடிச்சியா? அவளோட காதலுக்கு நா தர நினைக்கும்  அனைத்து தண்டனையும் உனக்குதான்!”

விசாலாட்சியை விளாசித் தள்ளினான்.

1993ஆம்ஆண்டு வருடத்தொடக்கம்.

விசாலாட்சிக்கு மாதவிலக்கு நின்றுபோனது. “என்ன தள்ளிப் போகிறது?’ என சில மாதங்கள் குழம்பியவள் உண்மை புரிந்தாள்.

உடலில் பல மாற்றங்கள் உணர்ந்தாள்.

மார்பகங்கள் கிராமத்துப்பெண் சுருக்குப்பை போல சுருங்கிப் போயின.

முகவாய்க்கு கீழேயும் முழங்கைக்கு இணைப்பாயும் மிகைசதை தொங்கின.

தலையில் போனஸ் நரை.

இருபுட்டத்துக்கு நடுவே தோராயமாய் புடவையில் தட்டினான். “என்னடி மாசம் மூணு நா சுமோ பயில்வான் மாதிரி கோவணம் கட்டிட்டு அலைவ… காணலையே…”

இருண்டாள்.

“மென்ஸஸ் நின்னுருக்குங்க!”

“சபாஷ்! மாசமா இருக்கியா? 55வயசுல மீண்டும் அப்பனாகப் போரேனா? ஒரே நேரத்ல தாத்தன் போஸ்ட் அப்பன் போஸ்ட் மறந்திராத ஆம்பிளைப்புள்ள….”

“நக்கல் பண்ணாதிங்க. மாதவிலக்கு நிரந்தரமா நின்னு போச்சு!”

புருவங்களை நெரித்தான் சீனி.

“அட என் காயலான் கடையே… சாறு இருமுறை மும்முறை பிழிந்தெடுக்கப்பட்ட கரும்பு சக்கையே…. தீர்ந்து போன பேட்டரி ஸெல்லே… வேர்களை கரையான் அரித்த ஆலமரமே… மல்லிகைச்சருகே…. காக்கைநிற நிலவே…. பானம் தீர்ந்த கோக் டப்பாவே… இனி நீ பொம்பிளை இல்லைடி…. பழைய காயலான கடை சாமானை விட நீ யூஸ்லெஸ்….”

விசாலாட்சிக்கு ஔவையார் போல் ஒப்பனை செய்துவிட்டான்.

“கிழவி கிழவி… விசாலாட்சி கிழவி…

கிண்டலித்தபடி அடித்தான்.

“காரைக்கால் போயிருக்கியாடி? உபயோகப்படுத்ப்படாத ரயில் தண்டவாளங்கள் காணப்படும் அது போல் நீ ஹிம். இனி இந்த தண்டவாளத்து மேல ரயில் போவாது!”

கண்களை இறுக மூடியபடி கைகளை கும்பிட்டபடி அடி வாங்கினாள்.

“இனி ப்ரா போடாத பாக்கட் வச்ச தொளதொள முழுக்கை ஜாக்கட் போட்டுக்க. ப்யூச்சர்ல என்னை புருஷான்னு கூப்டாத. பேராண்டின்னு கூப்டு. நீயும் தானடா கிழவன் உனக்கும் என்னை விட பத்துவயசு கூட தானடான்னு பாக்காத. கோழிகள்தான் குறுக்கு படுக்கும் சேவல்கள் ஆயுசு முழுக்க கோழிகள் துரத்தல்தான்!”

அடித்து முடித்துவிட்டு விலகினான் சீனி.

பிளாஷ்பேக்கைச் சொல்லி முடித்தாள் விசாலாட்சி.

அதற்குள் இருபுதிய கேசட்களை மாற்றியிருந்தான் ரூபன்.

ஏறக்குறைய ஆறுமணிநேர வாக்குமூலம் கேட்டு முடித்த தேஜிக்கு செத்துப்போன சீனி மீது கோபமும் கொலைவெறியும் கிளர்ந்தன. இருந்தாலும் நம்பாமையும் பரவியது.

“அம்மா! சீனிவாசன் 32வருடம் செஞ்ச கொடுமைகளை வரி விடாம உணர்ச்சிபூர்வமா… விவரிச்சீங்க…. ஆனா சீனி செஞ்ச கொடுமைகள் யாருக்குமே தெரியாதுன்றீங்க… உங்க மகள்க மகனுக்குக்கூட தெரியாம எப்டிங்க?”

“அதுதாங்க அவர் சாமர்த்தியம். எல்லாம் கண்கட்டு வித்தை மாதிரி நடத்துவார்!”

அவர் நடத்திய அட்டூழியங்களை ஆதாரமா சேகரிக்க நீங்க எதுவுமே முயற்சிக்கலையா?”

விரக்தியாய் சிரித்தாள் விசாலாட்சி “இருமுறை அவர் பேச்சுக்களை ஆடியோல பதிஞ்சேன்… ஒருமுறை ஆட்டோமேடிக் கேமிரா மூலம் அவர் என்னை அடிக்றத படமாக்குனேன்…ரெண்டு தடவையும் கண்டுபிடிச்சிட்டார். கூடுதல் அடி வேற விழுந்துச்சு. அதுக்குப்  பின்னாடி அடிக்ற இடங்கள்ல கேமிராவோ விடியோ கேமிராவோ இருக்கான்னு செக் பண்ணிப்பார். சாப்பாட்ல விஷம் வச்சிருவேன்னு அவருக்கு பயம். அதனால என்னை வச்சு செக் பண்ணிட்டுதான் சாப்பிடுவார். நைட் என் கைகளை கட்டி போட்டுத்தான் தூங்குவார் அவர் எந்திரிச்சவுடனே அவுத்து விடுவார். நான் அவரச் சுட்ட அன்னைக்கிதான் போதைல ஏமாந்து விட்டுட்டார்!”

“உங்களிடம் அவர் மோசம். குழந்தைகளிடம்?”

“அதாங்க ஆச்சரியம். அவர் மோசமான கணவர். ஆனால் மிக நல்ல தந்தை. ஒருநாள் ஒரு பொழுதும் கூட கண்டிப்புக்குக்கூட அவர்களை அவர் அடித்ததில்லை. குழந்தைகளிடம் விஞ்ஞானப்பூர்வமாய் பேசுவார். உலகத்ல அவருக்குத் தெரியாத விஷயமே இல்ல… அத்தனையும் அவைகளுக்கு கற்றுத்தர முயற்சிப்பார். பல நேரங்கள்ல எனக்கு சந்தேகம் வந்துரும். என் குழந்தைகளின் அப்பா சீனி வேறோ, என்னை அடிக்கும் சீனி வேறோ? குடியிருந்த கோயில், மாட்டுக்காரவேலன் எம்ஜிஆர் போல சீனி டபுள் ஆக்ட்டோன்னு குழம்புவேன்!”

“அவருடைய உணவு பழக்க வழக்கம் எப்டி?”

“எதுவுமே உப்பு உறைப்பா காரசாரமா ஜிருன்னு இருக்கனும் அவருக்கு?”

“போதை பழக்கம் உண்டா அவருக்கு?”

“தினம் குடிப்பார். ஆனா அவர் குடிச்சிருக்கார்ன்றத அவரது நடை உடை பாவனைகளில் கண்டுபிடிக்க முடியாது!”

“சீட்டு விளயாடுவாரா?”

“விளையாடுவார்!”

“சினிமா பார்ப்பாரா?”

“சினிமா பார்ப்பார்!”

“சின்ன வீடு எதுவும் வச்சிருந்தாரா?”

“தெரியாதுங்க. யாரும் இவர் அடிக்கு ஒரு நா கூட தாங்கமாட்டாம ஓடிருவாங்க!

ரூபன் நெற்றியில் தட்டிக் கொண்டான்.

“முப்பத்திரெண்டு வருஷம் சீனியின் கொடுமைகளை பொறுத்தீங்க… உங்க மகள்களுக்கு கல்யாணம் ஆனப்பயே யார் வீட்லயாவது போய் நிரந்தரமா நீங்க தங்கியிருக்கலாமே…. குறைஞ்சது கடந்த ஆறு வருஷமாவது அடி வாங்காம நிம்மதியா இருந்திருக்கலாமே?”

“பிரசாந்த் பாக்கியிருக்கானே. அவனைக்காட்டித்தான் ஆறுவருஷம் மிரட்னார். தவிர மகள்க வீட்ல தங்க அவங்களுக்கு தொந்திரவு கொடுக்க மனசு வரலைங்க…”

“இம் ஈகோ ப்ராப்ளம். 32வருஷத்துக்கு பிறகு நேத்து ராத்திரி மட்டும் ஏன் ரிட்டாலியேட் பண்ணீங்க?”

“அலாரம் வச்சிட்டு படுத்திருக்கார். எந்திரிச்ச உடனே கொன்னிருவேன்ருக்கார் கட்டாயம் கொல்லுவார். நாம முந்திக்கனும்னு நினைச்சேன்”

“திடீர்னு அவர் உங்கள கொல்ல முடிவெடுத்ததின் காரணம்?”

“தெரியல. அறுபதாம் கல்யாணத்தை வினோதமா கொண்டாடனும்னு நினைச்சாரோ என்னவோ?”

“அலாரத்தைத்தான் நீங்க நிறுத்னீங்களே?”

“தானாகவே அவர் சொன்ன நேரத்ல எந்திரிச்சிட்டா?”

“அவரை சுட்டீங்க. செத்துட்டார். உடனே ‘கொலை’ன்னு கத்னீங்களா? அவகாசம் எடுத்துக்கிட்டு கத்னீங்களா?”

விசாலாட்சியின் கண்கள் பளபளத்தன.

“சொன்னா என்னை தப்பா எடுத்துக்கக்கூடாது!”

“சொல்லுங்க!”

“ஐஸ்கட்டிகளை துணில கட்டி ஒரு பத்து நிமிஷம் ஆசை தீர பிணத்தை அடிச்சேன். அந்த பத்து நிமிஷத்ல கிடைச்ச திருப்தி. 32வருட அடி வேதனையை சமன் பண்ணிருச்சு. மனசு லேசாச்சு. அவரு சொன்ன ஐடியாவையே செயல்படுத்தி ‘கொலை! கொலை! கொலைகாரங்க ஜன்னல் வழியா ஓடுராங்க’ன்னு கத்னேன்” என்றாள்.

ரூபனும்  தேஜியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.

“ஒத்துழைப்புக்கு நன்றிம்மா. வரோம்!”

“எப்டியாவது எனக்குத் தூக்கு தண்டனை தரச் சொல்லுங்க…!” என்றாள் விசாலாட்சி.

(-தொடரும்…)

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...