கிக் பட விழாவில் இது வேற மாதிரி “கிக்” சந்தானம் கலகலப்பு!
பார்ச்சூன் பிலிம்ஸ் சார்பில் நவீன்ராஜ் தயாரிப்பில் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள படம் ‘கிக்’.. இப்படத்தை இயக்குவதன் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்துள்ளார் பிரபல கன்னட இயக்குநர் பிரசாந்த் ராஜ். தான்யா ஹோப் கதாநாயகியாக நடிக்க, மேலும் ராகினி திவிவேதி, கோவை சரளா, தம்பி ராமையா, செந்தில், மன்சூர் அலிகான், பிரம்மானந்தம், சாது கோகிலா முத்துக்காளை, மனோபாலா, கிங்காங், கிரேன் மனோகர் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
அர்ஜுன் ஜான்யா இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தின் ஒளிப்பதிவை சுதாகர் ராஜ் கவனிக்க, படத்தொகுப்பை நாகூரான் மேற்கொண்டுள்ளார். சண்டைக் காட்சிகளை ரவிவர்மா மற்றும் டேவிட் கேஸ்ட்டிலோ வடிவமைத்துள்ளனர். ஒய்எம்ஆர் கிரியேஷன்ஸ் இந்த படத்தை வெளியிடுகிறது.
வரும் செப்-1ஆம் தேதி ‘கிக்’ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் முதல் சந்திப்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.
இந்த நிகழ்வில் நாயகன் சந்தானம் பேசும்போது, “தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குனர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்து கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும். ஒரே கட்ட படப்பிடிப்பாக சென்னையில் ஆரம்பித்து பாங்காங்கில் பூசனிக்காய் உடைத்து, ஒரேகட்ட படபிடிப்பாக இந்த படத்தை நடத்தி முடித்தனர். இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்கிற, வெற்றிக்கு உத்தரவாதம் தருகின்ற கான்செப்ட்டில் தான் இந்த படம் உருவாகியுள்ளது.
பல ஹீரோக்களின் படங்களில் நான் நகைச்சுவை நடிகராக இருந்து ஹீரோ கூடவே இருந்து கதையை நகர்த்திச் செல்ல உதவி இருக்கிறேன். அப்படி இந்த படத்தில் தம்பி ராமையா அண்ணன் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார். பல வருடங்களுக்கு முன்பு டிவியில் ஒளிபரப்பான நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.
மன்சூர் அலிகானை சார் ஒரு குழந்தை என்று சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங்காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங்காங் மாட்டிக்கொண்டார். அரண்மனை படத்திற்கு பிறகு கோவை சரளாவுடன் அக்காவுடன் இணைந்து நடித்துள்ளேன். அந்த படத்தில் எங்களுக்கான வசனங்கள் ஒர்க் அவுட் ஆனது போல இதிலும் வசனங்கள் இருக்கின்றன.
எவ்வளவோ படங்களில் நடித்துள்ள எனக்கு இத்தனை வருடங்களில் இப்போதுதான் இப்படி ஒரு கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள்.. எப்போதும் என்னை சுற்றி பெண்கள் தான் இருப்பார்கள் என ஆச்சரியப்பட்டு என்னிடம் சின்னார், செந்தில் அண்ணன். படப்பிடிப்பில் இருந்தே நடிகர் கவுண்டமணிக்கு அண்ணனுக்கு போன் செய்து அந்த தகவலை கூறி மகிழ்ந்தார்.
கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு.. அங்கே பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களை கொடுத்துள்ளார். பாங்காங்கில் சண்டைக்காட்சிகளை படமாக்கியபோது டேவிட் கேஸ்ட்டிலோ மாஸ்டர் முதல்நாளே பக்காவாக எனக்கு ஸ்ச்ண்ட் ரிகர்சல் கொடுத்து விட்டு தான் படமாக்கினார்.
பாங்காங் போனாலும் எல்லோரும் ஏகபத்தினி விரதன்களாக இருந்ததால் எங்கேயும் ஊர் சுற்றவில்லை. டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம். இந்த கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்று கூறினார் சந்தானம்.